புதன், 6 ஏப்ரல், 2022

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ரத்து - அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீர் உத்தரவு..!!

 மாலைமலர்  : கொழும்பு,  இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. இந்த நெருக்கடியை முன்வைத்து இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர்.
எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்து, இதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அரசில் இணைந்து மந்திரி பதவிகளை பெறுமாறு அனைத்துக்கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுத்து விட்டன. அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என்று அவை வலியுறுத்தி உள்ளன. இதனால் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி முற்றி வருகிறது. இந்நிலையில் இலங்கையில் ஏப்.1ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வரும் அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவு முதல் அவசர நிலை சட்டம் திரும்பப் பெறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



முன்னதாக அதிபர் கோத்தபயவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியதால் போராட்டத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய அவசர நிலையை கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

36 மணிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உத்தரவை மீறி பொது மக்கள் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திரண்ட தமிழ் மற்றும் சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக ஆவேச கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பொது மக்களை போலீசார் விரட்டியடித்தனர். கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: