ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

தாலிபன்கள் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் நகரங்களில் நுழைந்திருக்கிறார்கள்.

BBC : தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் நுழைந்திருக்கிறார்கள்.
செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து மேற்குலக படைகளும் ஆப்கனை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்கிற அறிவிப்பு வந்ததில் இருந்து, தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் கிராமப் புறங்களில் அதிவேகமாக முன்னேறினர்.
மேலே குறிப்பிட்ட மூன்று நகரங்களின் நிலை என்ன ஆகும், அரசுப் படைகளால் எவ்வளவு நேரம் தாக்குபிடிக்க முடியும் எனத் தெரியவில்லை.
ஏற்கனவே தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதி பகுதிகளைக் கைப்பற்றிவிட்டனர். இதில் இரான் மற்றும் பாகிஸ்தான் உடனான ஆப்கானிஸ்தானின் முக்கிய எல்லைப் பகுதிகளும் அடக்கம்.
சனிக்கிழமை நிலவரப்படி, லஷ்கர் கா பகுதியில் ஆளுநர் அலுவலகத்துக்கு சில நூறு மீட்டர் தொலைவு வரை தாலிபன்கள் முன்னேறிவிட்டனர். பொழுது சாய்ந்ததால் சற்று பின்தங்கினர்.

கடந்த சில நாட்களில் தாலிபன்கள் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய முயற்சி இது. ஆனால் ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகளின் கமாண்டரோ, கடந்த வெள்ளிக்கிழமை தாலிபன்களுக்கு மிகப் பெரிய சேதாரங்களை ஏற்படுத்தியதாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் கூறினார்.
போரினால் இடம்பெயர்ந்த காந்தஹார் மக்கள்

காந்தஹார் மாகாணம் தாலிபன்களின் பிடியில் செல்லும் அபாயம் இருப்பதாக, அம்மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மணி நேரமும், போர் சூழல் மோசமடைந்து கொண்டே வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்நகரத்துக்குள் போர் தீவிரமடைந்து இருக்கிறது என்கிறார் குல் அஹ்மத் கமின்.

தாலிபன்கள் காந்தஹாரை ஒரு முக்கிய புள்ளியாகப் பார்க்கிறார்கள். இந்நகரத்தை தங்களின் தற்காலிக தலைநகராக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். ஒருவேளை காந்தஹார் அவர்கள் வசமானால், அப்பிராந்தியத்தில் இருக்கும் ஐந்து அல்லது ஆறு மாகாணங்களும் அவர்கள் வசமாகிவிடும் என்கிறார் குல் அஹ்மத் கமின்.

தாலிபன்கள் நகாரத்தின் பல முனைகளில் இருக்கின்றனர். இந்த நகரத்தில் அதிக மக்கள் வாழ்வதால், தாலிபன்கள் முழுமையாக நுழைந்தால் கூட அரசுப் படைகளால் கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது என்கிறார் கமின்.

    ஆப்கானிஸ்தான் நகரங்களை நோக்கி முன்னேறும் தாலிபன்கள்: ஊரடங்கு போட்ட அரசாங்கம்
    பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ஆஃப்கன் தூதர் மகள்: 'கடும் சித்திரவதை' - என்ன ஆனது?

ஆப்கானிஸ்தானில் ஐந்து வெவ்வேறு இடங்களில் போர் நடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகளுக்கு ஆதரவாக இப்போதும் வான் வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் கூட விமான நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு மாவட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக வளாகத்துக்கு வெளியே காவலுக்கு இருந்த ஒரு வீரர் கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார். தாலிபன்கள் வேண்டுமென்றே நடத்திய தாக்குதல் இது என ஐ நா சபை கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை மக்கள் பாதுகாப்பான இடங்களாகக் கருதுகின்றனர். சிலரோ தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்களைக் கையில் எடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் போர் இன்னும் மோசமடையலாம் என ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் தாமஸ் நிக்லசன் கூறியுள்ளார். தாலிபன்களின் மன நிலை முன்பு இருந்ததைப் போல தங்கள் இஸ்லாமிய அமீரகத்தை மீண்டும் நிறுவுவதாக இருக்கலாம் என அச்சப்படுவதாகக் கூறியுள்ளார் அவர்.

மேற்குலகப் படைகள் பின்வாங்கப்பட்டது, ஆப்கானிஸ்தான் அரசுப் படையின் மனவலிமையை பாதிக்கலாம் என கூறியுள்ளார் பிரிட்டனின் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் ஜெனரல் டேவிட் ரிச்சர்ட்ஸ்.

தாலிபன்கள் தொடர்ந்து தங்கள் தாக்குதல் மூலம் முன்னேறி வருவதால், வரும் மாதங்களில் பெரிய நெருக்கடி ஏற்படலாம் என மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.

நவம்பர் 2001-ல் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தானில் இருந்த தாலிபன்களின் ஆட்சியை ஓடுக்கியது. மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகளுக்கு பயிற்சி அளித்து அவர்களைத் தயார்படுத்திய போதும், தாலிபன்கள் மீண்டும் ஒன்றிணைந்து வலிமை பெற்றனர்.

கடந்த பிப்ரவரி 2020-ல், ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச படைகளைப் பின்வாங்க, தாலிபன்களுடன் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக் கொண்டார். 2021ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க படைகள் செப்டம்பர் மாதத்துக்குள் பின்வாங்கப்படும் என அறிவித்தார்.

கருத்துகள் இல்லை: