சனி, 7 ஆகஸ்ட், 2021

திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்!

 நியூஸ்18 தமிழ்  :மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டவர் கோவையைச் சேர்ந்த மகேந்திரன். 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்டு 1.50 லட்சம் வாக்குகள் பெற்றார். பின்னர், 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பின்னர் கமல்ஹாசனிடம் ஜனநாயகத் தன்மை இல்லை என்று கூறி கட்சியிலிருந்து முதல் ஆளாக மகேந்திரன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சந்தோஷ் பாபு குமரவேல் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.


இந்நிலையில் சமீபத்தில் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது, எங்கு தலைமை சரியாக உள்ளதோ அங்குதானே தொண்டர்கள் இணைவார்கள். நான் அரசியலுக்கு வந்தபோது செயல்பாடு அடிப்படையில் ஒரு தலைவரைத் தேர்வு செய்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்தேன். ஆனால், அந்த நம்பிக்கை நிறைவேறவில்லை. பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக கடந்த 2 மாதங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று மகேந்திரன் கூறியிருந்தார்.

இதேபோல், மகேந்திரன் முன்பே திமுகவில் இணைந்திருந்தால் கொங்கு பகுதியில் திமுக வெற்றி பெற்றிருக்கும்’ என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மனம் திறந்து பாராட்டினார். அப்போதே, மகேந்திரனுக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என பேச்சு எழுந்தது.

தொடர்ந்து, மகேந்திரனுக்கு திமுகவின் ஐடி விங்-இல் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவியது. திமுக ஐடி விங் இன் தலைவராக தற்போது நிதித்துறை அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். அவரது பணியை குறைக்கும் வண்ணம் மகேந்திரனுக்கு ஐடி விங்-இன் இணை அல்லது துணை பொறுப்புகள் வழங்கப்படும் என தகவல்கள் வந்தன.

இந்நிலையில், தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: