புதன், 4 ஆகஸ்ட், 2021

கவிஞர் தேன்மொழிதாஸ் .. திரையில் பூக்கும் அத்திப்பூக்கள்

May be a closeup of 1 person and outdoors

Lenin Ernesto  :   தமிழ்த் திரையிசை பாடல்கள் பெரும்பாலும் ஆண்களால் கட்டமைமக்கப்பட்டது. விதிவிலக்காக மட்டுமே சில பெண் பாடலாசிரியர்கள் இருந்தனர்.
பெண்பாடலாசிரியர்களின் பெயரை கூறச் சொன்னால் தாமரை, உமாதேவி என்பதோடு பலரும் தடுமாற தொடங்கிவிடுவர்.
ஆனால், நிறைய பெண்கள் பாடல் எழுதியுள்ளனர் அவர்களில் முக்கியமானவர் தேன்மொழிதாஸ்.
இவரது பாடல்களில் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று கண்களால் கைது செய் படத்தில் இடம்பெற்ற 'தீக்குருவி' பாடல்.. காதலும் காமமும் கலந்த  அப்பாடலில் அவரது வரிகள் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியிருக்கும்...
குறிப்பாக தகர வரிசையிலமைந்த சொற்களை கொண்டு அமைத்த வரிகள்
"தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
தீப்பொழுதினில்
தீண்டுகிறாய் தந்திரனே" ஒவ்வொரு சொல்லுமே தகர சொல்லாய் அமைத்திருப்பார்.. அது சந்தத்தையே அழகாக்கிவிடும்...
அதே போல அவரது சிறந்த பாடல்களில் ஒன்று சரவணா படத்தில் இடம்பெற்ற 'காதல் வந்தும் சொல்லாமல்'


இந்தப் பாடல் வரிகளில் சொல்லாத காதல் அதன் பிரிவு என அவர், அத்தனை வலிகளையும் வார்த்தைகளில் தந்திருப்பார்...

"இதயத்திலே ஒரு வலி
இமைகளிலே பலதுளி
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்" என்றும்
"காதல் கதறி இங்கு அழுகிறதே இரண்டு
கண்ணும் அதில் கருகாதா" என வார்த்தைகளை கண்ணீர் முக்கி எடுத்து தந்திருப்பார்...
எனக்குத் தெரிந்து ஒரு தொலைக்காட்சி தொடரின் பாடல், சினிமா பாடல்களை மிஞ்சும் அளவுக்கு வெற்றி பெற்றதும், ரிங்டோனாகா பலரது கைப்பேசிகளில் ஒலித்ததும் தேன்மொழி தாஸின் பாடலான 'என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு' பாடல்தான்...

செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு" என்கிற இந்த வரியை எடுத்துக் கொள்ளுங்கள் தனிமையின் துயரை இதைவிட சிறந்ததாக திரைப்பாடலில் பதிவு செய்துவிட முடியாது என்பதை மட்டும் உரக்க சொல்லிக் கொள்வேன்...
ஒருதலைக்காதல் எல்லாவற்றுக்கும் இருக்கக்கூடிய தவிப்பு.. நான் உன்னை பைத்தியக்காரத்தனமா காதலிக்கிறேன் ஆனா அது எதையும் என்னால உன்கிட்ட சொல்ல முடியலங்குறதுதான்...
இத இந்தப் பாடல்ல "என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் உன்னிடத்தில் கொண்டு வரத் தெரியவில்லை. காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு"னு சொல்லிருப்பாங்க.. வரிகள் எல்லாமே எளிமையான வரிகள்தான் அது சொல்ற அர்த்தம் ரொம்ப பெருசு...
"இலையைப் போல் என் இதயம் தவறி விழுதே" , "காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு.. காதலிக்க அங்கு நேரமில்லையா" னு இந்தப் பாடலோட ஒவ்வொரு வரியவும் கொண்டாட எனக்கு இந்த கட்டுரை பத்தாது...
தேன்மொழியுடைய பாடல்கள்ல எனக்கு மிகப்பிடித்த பாடல் எதுனா கண்ண மூடிட்டு "நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே"னு சொல்லிடுவேன்...
பள்ளி அல்லது கல்லூரி காலத்தில் ஏற்படக்கூடிய அந்த காதல் உணர்வு ரொம்ப அழகானது.... அது மறக்க முடியாத நினைவா நம்ம மனசுல இருக்கும்...


காதல் வந்ததும் அந்த பொண்ணோ பையனோ நம்மை ஒருதடவை பாத்துட்டு போனா அந்த உணர்வு எப்படி இருக்கும், அதை தேன்மோழி எப்படி சொல்றாங்கன்னா "நதிமேலே ஒற்றைக் காலில் மழையாடும் ஆனந்தமாய் கனவு ஊறும் மனசுக்குள்ளே காதல் வந்து ஒற்றைக் காலில் சுற்றி சுற்றி மூழ்கடிக்குதே"
"தேர்வு அறை முழுதும் தேவதையே உன் நினைவு
நாளை விடுமுறையாம் காதல் வதை உன் பிரிவு"
பரிட்சை எழுத உக்காந்துட்டு காதலியவே நினைச்சிட்டு இருக்குறது... அய்யய்யோ நாளைக்கு லீவா.. அவளை பாக்க முடியாதேனு ஏங்குறது...

இதையெல்லாம் அனுபவிக்காம கல்லூரிய கடந்து வந்தவன் யாருமே இருக்க முடியாதுங்குறதும் அப்படி இருந்தவனுக்கு இந்த வரியோட ஆழம் புரியும்ங்குறதும் என் எண்ணம்...
"கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது
சுவாசம் உன் பெயரை என்னுள்ளே பாடியது"னு
அழகழகான வரிகளால அந்தப் பாடலை நிறைச்சிருப்பாங்க தேன்மொழி தாஸ்
ரொம்ப அதிகமான பாடல்கள் எழுதல.. ஆனா எழுதுன எல்லாமே முத்து...
அழகான.. வலியான.. எந்தவகையான உணர்வுக்கும் பாடல் எழுதக்கூடிய ஒருத்தர்தான் தேன்மொழிதாஸ்...
தமிழ்த் திரையுலகுக்கு கிடைச்ச வெகுசில பெண்பாடலாசிரியர்கள்ல அற்புதமான பாடலாசிரியர் தேன்மொழிதாஸ் என்பது மறுக்க முடியாத உண்மைகள்ள ஒண்ணு.

கருத்துகள் இல்லை: