செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூடு..!

 நக்கீரன்  - செல்வகுமார் :  தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், நாகை மீனவர் தலையில் குண்டு பாய்ந்தது பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்,
10 மீனவர்கள் கடந்த 28ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று (01.08.2021) மாலை கோடியக்கரைக்குத் தென்கிழக்கே இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில்,
அங்கு அதிவேகமாக வந்த இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு மீனவர்களின் விசைப்படகுகளைக் குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பார்த்திடாத மீனவர்கள், அதிர்ச்சியடைந்து படகுகளில் படுத்துக்கொண்டனர்.


இலங்கை கடற்படையினரின் இந்தத் துப்பாக்கி தாக்குதலில் படகு பெரும் சேதாரம் ஆகியுள்ளது. அதுமட்டுமின்றி அக்கரைப்பேட்டையச் சேர்ந்த மீனவர் கலைச்செல்வன் என்பவரின் தலை மீது குண்டு பாய்ந்தது. இதனால் அவரது உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறி படகிலேயே மயங்கி விழுந்துள்ளார். அதன் பின் கலைச்செல்வனை காப்பாற்ற, மற்ற மீனவர்கள் படகைக் கரை நோக்கி திருப்பினர். ஆனாலும் அந்தப் படகை விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டி வந்துள்ளனர்.
 
தப்பினால் போதும் என வேகமாக கரை சேர்ந்துள்ளனர் மீனவர்கள். ஆனாலும் இலங்கை கடற்படையினரின் ஆத்திரம் குறைந்திடாமல், அந்தப் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்களின் பல படகுகளைக் குறிவைத்து மீண்டும் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு தாக்குதலைக் கண்டு நிலைகுலைந்த மீனவர்கள் அனைவரும், தப்பித்தால் போதும் என்கிற நிலையில் அவசர அவசரமாக கரை திரும்பியுள்ளனர்.

இந்தநிலையில், குண்டடிபட்ட நாகை அக்கரைப்பேட்டை மீனவர் கலைச்செல்வனை நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் மீனவரின் தலையில் உள்ள குண்டு சிராய்ப்பு துகள்களை அகற்றி அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.

 

நாகை மீனவர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சம் கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: