செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

மாநிலங்களவை சீட் எவ்வளவு முக்கியம் தெரியுமா? – கடுப்படித்த அமித் ஷா; அமைதிகாத்த அ.தி.மு.க

ந.பொன்குமரகுருபரன் vikatan :
அமித் ஷாவுடன் அ.தி.மு.க தலைவர்கள்

அமித் ஷாவுடன் அ.தி.மு.க தலைவர்கள் உள்ளாட்சி கேரட்டை நம்பி, அ.தி.மு.க-வின் மூட்டைகளை பொதி சுமப்பதற்கு பா.ஜ.க தயாராக இல்லை என்பதே கமலாலயத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்.

தி.மு.க-வின் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு அஸ்திரம் பாய்ந்திருக்கும் நிலையில், அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்குப் படையெடுத்து திரும்பியிருக்கிறது அ.தி.மு.க டீம். ஜூலை 26-ம் தேதி தன்னைச் சந்தித்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவிடம், எந்தவித உத்தரவாதத்தையும் பிரதமர் மோடி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சோர்ந்து போனவர்கள் அடுத்தநாளே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து, அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் மீது தி.மு.க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுப் புலம்பியிருக்கிறார்கள். அமித் ஷாவும் பாசிட்டிவ்வாக எந்த பதிலும் சொல்லவில்லையாம்.

மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்
மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்

இந்தச் சந்திப்புகளின் போது உடனிருந்த கட்சி மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “புதிய வேளாண் சட்டம், பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து பா.ஜ.க-வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இரு அவைகளும் முடங்கியுள்ளன. இந்தச் சூழலில், நாங்கள் சென்று சந்தித்ததால் பிரதமர் பெரிய ஆர்வம் காட்டவில்லை. காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டம், கூடுதல் தடுப்பூசி ஒதுக்கக் கோரிக்கை என்று இந்த சந்திப்பின்போது சில கோரிக்கைகளை நாங்கள் அளித்திருந்தாலும், பிரதானமாகப் பேசப்பட்டது தி.மு.க-வின் நடவடிக்கையும், சசிகலா விவகாரமும்தான். ஆனால், எங்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகப் பிரதமர் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. ‘எதையாவது சாப்பிடுகிறீர்களா?’ என்றவர், பிற்பாடு அ.தி.மு.க தொடர்பாக நிலுவையிலிருக்கும் வழக்குகள் பற்றி கேட்டார். இறுதியாக, ‘நான் விசாரிக்கிறேன்’ என்று சொல்லி வழியனுப்பிவிட்டார். பிரதமருடனான இந்தச் சந்திப்பு திருப்தியளிக்காததால், அமித் ஷாவை சந்தித்து நிலைமையை எடுத்துச் சொல்வதென முடிவெடுக்கப்பட்டது.

சசிகலா கேள்வியைத் தவிர்த்த எடப்பாடி பழனிசாமி; கட்சியில் இணைக்க டெல்லி நிர்பந்தமா?

ஜூலை 27 -ம் தேதி காலை அமித் ஷாவைச் சந்தித்தோம். பிரதமரிடம் பேசியதை அமித் ஷாவிடமும் கூறினோம். அமைதியாகக் கேட்டுக் கொண்டவர், ‘இதில் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்றார். அதற்கு பதிலளித்த வேலுமணி, ‘உள்ளாட்சி அமைப்புகளில் பல நூறு கோடி ரூபாய் மத்திய அரசின் நிதிப் பங்களிப்பாகக் கிடைக்கிறது. தமிழக அரசு இதைப் பயன்படுத்தும் விதத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் அளிக்கும் நிதிக்கு உரிய கணக்கைக் கேளுங்கள். சென்னையில் புதிதாக 2,400 கோடி ரூபாயில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படுமென தி.மு.க-வினர் அறிவித்திருக்கிறார்கள். இதற்கான நிதி, மத்திய அரசு அளிக்கும் நிதி தொகுப்பிலிருந்து மடைமாற வாய்ப்பிருக்கிறது. தவிர, தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க-வினருக்கு பெரும் நிதி வேண்டும். ஆனால், அதற்கான சோர்ஸ் இல்லை. மத்திய அரசை நம்பித்தான் அவர்களும் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் அளிக்கும் நிதியின் மீது கணக்குக் கேட்டால், உங்கள் மீது பயம் வரும். உங்களுடன் கூட்டணியிலிருக்கும் எங்களை தேவையில்லாமல் தொடுவதைத் தவிர்ப்பார்கள்’ என்றார்.

பன்னீர் - அமித் ஷா
பன்னீர் – அமித் ஷா

தி.மு.க-வினர் மீது மத்திய விசாரணை அமைப்புகளில் நிலுவையிலிருக்கும் வழக்குகளை வேகப்படுத்தவும் கோரினோம். கொங்குநாடு அரசியல் பற்றிய பேச்சு எழுந்தபோது, ‘அதை விடுங்கள்’ என்று அமித் ஷாவே தட்டிக் கழித்துவிட்டார். மாநிலங்களவை எம்.பி-க்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தாங்கள் எம்.எல்.ஏ-க்களாக வெற்றிப் பெற்றதால், தங்கள் எம்.பி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். இதைக் குறிப்பிட்டுப் பேசிய அமித் ஷா, ‘மாநிலங்களவையில் உங்களுக்கு இருந்த இரண்டு இடத்தை ஏன் விட்டுக் கொடுத்தீர்கள்? இன்று நம் கூட்டணிக்கு 142 இடங்கள்தான் மாநிலங்களவையில் இருக்கின்றன. ஒவ்வொரு எம்.பி இடமும் எவ்வளவு முக்கியமானது தெரியுமா?’ என்று கேட்டதும், அ.தி.மு.க தலைவர்களுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை.

நாடாளுமன்றத்தில் ஆவேசமடைந்த மோடி|ராகுல் காந்தியின் மொபைல் ஒட்டுக்கேட்பு|#Quicklook

கடைசியாக சசிகலா சம்பந்தமாகப் பேச்சு வந்தபோது, ‘அந்தம்மா ஆடியோவெல்லாம் வெளியிடுறதா கேள்விப்பட்டேன். அவங்க வெளியிட்டா வெளியிடட்டும், நீங்க ஏன் கவலைப்படுறீங்க? பி பார்ம்ல கையெழுத்துப் போடுற உரிமை உங்க இரண்டு பேர்கிட்டதானே இருக்கு’ என்றார் அமித் ஷா. அதை அ.தி.மு.க தலைவர்கள் ஆமோதித்ததோடு, தனக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் சசிகலா நிதி திரட்ட முற்படுவதைப் பற்றிக் கூறினர். ‘விசாரிக்கிறேன்’ என்றதோடு அமித் ஷாவும் விடைக் கொடுத்தார். ஆக, டெல்லி பயணம் பரபரப்பைக் கிளப்பியதைத் தவிர, எதிர்பார்த்த ரிசல்ட்டைத் தரவில்லை” என்றனர்.

அமித் ஷாவுடன் அ.தி.மு.க குழு
அமித் ஷாவுடன் அ.தி.மு.க குழு

அமித் ஷாவைப் பார்த்த முடித்த கையோடு, மெட்ரோ ரயில் மூலமாக டெல்லி விமானநிலையம் வந்து சென்னைக்குத் திரும்பிவிட்டார் ஓ.பி.எஸ். தமிழ்நாடு இல்லத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கும் சிலருடன் ஆலோசித்த பிறகே சேலம் திரும்பியிருக்கிறார். 2022 தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் வரவிருக்கிறது. 2022 ஜூன் மாதம் இறுதிக்குள் ஏழு மாநிலங்களவை இடங்கள் பஞ்சாப்பில் காலியாகின்றன. அதே காலக்கட்டத்திற்குள் உத்தரப் பிரதேசத்தில் 13 மாநிலங்களவை இடங்கள் காலியாகின்றன. உத்தராகாண்ட்டில் ஒரு இடம் காலியாகிறது. இந்த மாநிலத் தேர்தல்களில் பெரு வெற்றியை பா.ஜ.க பெற்றால் மட்டுமே, காலியாகவிருக்கும் இந்த 21 மாநிலங்களவை இடங்களையும் பிடிக்க முடியும். அப்போதுதான் மாநிலங்களவையில் தங்கள் விருப்பப்படி எதிர்ப்பில்லாமல் திட்டங்களை நிறைவேற்ற முடியும். பா.ஜ.க இப்படித் திட்டமிட்டு காய் நகர்த்தும் சூழலில், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் கேட்டார்கள் என கைவசம் இருந்த மாநிலங்களவை எம்.பி இடங்களை அ.தி.மு.க கைவிட்டதை பா.ஜ.க மேலிடத்தால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள்.

அ.தி.மு.க டெல்லி காவடி பின்னணி - “காப்பாத்துங்க!”

அ.தி.மு.க தலைவர்களின் டெல்லி விசிட் குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர், “அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்படுவதில் எந்த லாபமும் இல்லை என டெல்லி கருதுகிறது. சசிகலாவை ஓரங்கட்டி, இரட்டை இலைக்கு கையெழுத்திடும் உரிமையை இரண்டு தலைவர்களுக்கும் உறுதி செய்தாகிவிட்டது. இதற்கு மேல், அவர்கள் கட்சிப் பஞ்சாயத்தில் பா.ஜ.க தலையிடுவதால் எங்களுக்கு என்ன லாபம் இருக்கப் போகிறது? தி.மு.க-வை கருத்தியல் ரீதியாகவும், திட்டங்கள் தொடர்பாகவும் விமர்சித்து எதிர்ப்பு அரசியல் செய்யத்தான் பார்க்கிறோம். அ.தி.மு.க தலைவர்கள் கேட்டுக் கொண்டார்களே என, தேவையில்லாமல் தி.மு.க-வினர் மீதிருக்கும் வழக்குகளைத் தோண்டி நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், பிற்பாடு அது பா.ஜ.க-வுக்கு எதிரான அஸ்திரமாகத்தான் மாறும். இது தேவையில்லாத தலைவலி. நடப்பது நடக்கட்டும், தமிழக அரசியல் நீரோட்டத்தைப் பொருத்து வியூகத்தை வகுத்துக் கொள்ளலாம் என்று டெல்லி நினைக்கிறது. இது புரியாததால், டெல்லி வரை படையெடுத்து வெறும் கையோடு அ.தி.மு.க-வினர் திரும்பியிருக்கிறார்கள்” என்றார்.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா – நரேந்திர மோடி

அ.தி.மு.க-வுக்காக தி.மு.க-வை தேவையில்லாமல் தொட வேண்டாம் என்பதே டெல்லியின் தற்போதைய முடிவாக இருக்கிறதாம். அரசியல் கணக்கில் தங்களுக்கு லாபம் இல்லாத எதையும் செய்வதற்கு மோடி, அமித் ஷா இருவருமே தயாராக இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைத் தருகிறோம் என்று ஆசையைக் கிளறிவிட்டு, அதன்மூலமாக பா.ஜ.க-வை தங்கள் வழிக்குக் கொண்டுவர அ.தி.மு.க தலைவர்கள் சிலர் முயற்சிக்கிறார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில் 50 சீட், 38 சீட் என்று பேசி கடைசியில் 20 சீட் மட்டுமே அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. அதிலிலும் நான்கில் மட்டுமே பா.ஜ.க-வினர் வெற்றி பெற்றனர். இந்த அனுபவம் இருப்பதால், உள்ளாட்சி கேரட்டை நம்பி அ.தி.மு.க-வின் மூட்டைகளை பொதி சுமப்பதற்கு பா.ஜ.க தயாராக இல்லை என்பதே கமலாலயத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்.

கருத்துகள் இல்லை: