சனி, 7 ஆகஸ்ட், 2021

தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் தாரகை கே.தவமணி தேவி!

http://www.aanthaireporter.com/wp-content/uploads/2020/02/devi-feb-10a.jpg

aanthaireporter.com :தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி கே.தவமணி தேவி!
ஆம்.. இன்றளவும் தமிழ் திரை உலகின் முதல் கவர்ச்சி கதாநாயகி என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரிவர்… இத்தனைக்கும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தந்தை கதிரேச சுப்பிரமணியன் கண்டியில் நீதியரசராக இருந்தவர்… தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்த்து சீனியர் பி.ஏ., பட்டம் பெற செய்தவர்… ஆனாலும் நடிப்பில் உள்ள மோகத்தால் தந்தையின் அனுமதியை போராடிப் பெற்று சினிமாவில் நடிக்க தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டவர். எல்லிஸ் ஆர்.டங்கன் தனது ‘சதி அகல்யா’(1937) படத்தில் கதாநாயகியாக தவமணிதேவியை அறிமுகம் செய்தார்… உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே கால் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி இவர்.



அழகான குரலும், பார்த்தவுடன் கவரும் தோற்றமும், பழகும் விதமும், கதைக்கும் தன்மையும் தவமணி தேவிக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இவர் குறித்து நம்ம செய்தியஆளர் கட்டிங் கண்ணையாவிடம் கேட்ட போது, “டி.ஆர்.சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா கலையகத்தை உருவாக்கி அந்த நிறுவனத்துக்கான முதல் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் அதில் நடிக்கும் வாய்ப்பு தவமணி தேவிக்குக் கிடைத்தது. சதிஅகல்யா என்ற அந்தத் திரைப்படத்தில் தவமணிக்கு அகலிகை வேடம். இந்தத் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் டி.ஆர்.சுந்தரம் பத்திரிகையாளர்களை அழைத்து தனது படத்தின் கதாநாயகியான தவமணிதேவியை அறிமுகப் படுத்தினார். கூடவே பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக டி.ஆர்.சுந்தரம் கொடுத்த தவமணியின் புகைப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஆகி போனார்கள். ஆம்.. நீச்சல் உடையில் ஒய்யாரமாக சாய்ந்திருந்த தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் அவர்களது புருவங்களை உயர வைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத்தான் .. தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரமானபோது அது பலரது பார்வை யைக் கவர்ந்தது. வசிட்டரின் மனைவியான அகலிகையாக நடிக்கப் போகும் பெண் இப்படி உடுத்தலாமா? என்பது போன்று பல விதமான விமர்சனங்களும் கூடவே எழுந்தன. 1930களில் ஒரு ஆசியப் பெண்ணை நீச்சல் உடையில் பத்திரிகைகளில் காண்பது அதுவே முதல் தடவையாக இருந்திருக்கும். இது போதாதா தவமணி தேவி பிரபல்யமாவதற்கு?

சதிஅகல்யா படப்பிடிப்பு தொடங்க முன்னரே தவமணி தேவி மிகப் பிரபல்யமாகி விட்டிருந்தார். ஆகவே 1937இல் வெளியான மொடேர்ன் தியேட்டர்ஸின் சதிஅகல்யா பெரு வெற்றி பெற்றதுக்கு தனியாகக் காரணம் எதுவும் சொல்லத் தேவையில்லை

மேலும் 1941இல் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மற்றுமொரு திரைப்படம் வேடாவதி அல்லது சீதாஜனனம். இதில் இவர் சீதையாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை திரையுலகம் தனது முக்கியமான குறிப்பில் இட்டிருக்கின்றது. காரணம் என்னவெனில் அன்று திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத எம்.ஜி.ஆர். இதில் இந்திரஜித்தாக சிறு வேடம் ஏற்று நடித்திருந்தார். ஆக எம்.ஜி.ஆர். படப்பட்டியலில் வேடாவதியும் இணைந்து கொண்டது.

தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வித்யாபதி. யூபிட்டர் பிக்ஸர்ஸ் சார்பில் ஏ.ரி.கிருஸ்ணசாமி எழுதி இயக்கியிருந்தார். ஆண்களைக் கவருவதற்காகவே இந்தத் திரைப்படம் தயாரிக்கப் பட்டதாக அன்று இந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் திரைப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற பாத்திரத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் ஆங்கிலத் தலைப்புகளுக்காவும் பாடல்களில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்காவும் பட்டிமன்றங்களும் விவாதங்களும் வைத்துக் கொள்கிறோம். தமிழ் இனி செத்துவிடும் என்று தலையில் வேறு அடித்துக் கொள்கிறோம். 1946இல் வெளிவந்தை வித்யாபதி படத்தில் தவமணி தேவி பாடி ஆடிய பாடல் இப்படி வருகிறது,

அதோ இரண்டு Black eyes!
என்னைப் பார்த்து Once, twice!
கண்ணைச் சிமிட்டி Dolly!
கை கட்டி Calls me!
Is it true your eyes are blue?
I’ll fall in love with you!
I will dance for you!

இந்தப் பாடலில் வரும் ஆங்கில வரிகளை தவமணி தேவியே எழுதியதாக பின்னாளில் இயக்குனர் கிருஷ்ணசாமி ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

கர்நாடக சங்கீதத்தையும், பரத நாட்டியத்தையும் முறையாகப் பயின்றவர். இவரது சிறந்த குரல் வளத்திற்காக இலண்டன் பிபிசி வானொலி இவருக்கு ‘நைட்டிங் கேர்ள்’ என்ற பட்டத்தைத் தந்துள்ளது.

இவர் 1940 களிலேயே ஒரு படத்திற்கு ரூ.16 ஆயிரம் சம்பளம் வாங்கியவர். சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் அன்றைய நாளில் ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளம் ரூ.4000/- மட்டுமே…

மேலும் 1941-இல் வெளிவந்த ‘வன மோகினி’ திரைப்படத்தில் காட்டுவாசிப் பெண்ணாக புலித்தோல் ஆடை அணிந்து நடித்தார். கவர்ச்சியாக இருந்த அந்த ஆடையும் நடிப்பும் அவரை தமிழ் திரை உலகின் முதல் கவர்ச்சி கதாநாயகியாக பட்டம் சூட்டியது… இந்தப்படத்தில் எம் கே ராதா நாயகனாக நடித்தார்.. சந்துரு என்கிற யானை பிரமாதமான சாகசங்களை செய்து காட்டி ரசிகர்களை கவர்ந்தது… தவமணிதேவியின் குரலில் இந்தப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கிறங்கசெய்தது … இதனால் இவர் “சிங்களத்துக் குயில்” என அழைக்கப்பட்டார்…இசை அமைத்தவர் ராம்சித்தல்கர்.. பின்னாளில் இவர் சி ராமசந்திரா என அழைக்கப்பட்டார் …

கே.தவமணி தேவி நடித்த படங்கள் —

“சதி அகல்யா, வித்யாபதி, சகுந்தலை, ஆரவல்லி சூரவல்லி, வேதவதி (அல்லது) சீதா ஜனனம், வனமோகினி, நாட்டிய ராணி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, பக்த காளத்தி, ஷியாம் சுந்தர்”

இப்பேர்பட்ட கே.தவமணி தேவி தனது 76- வது வயதில் (10-2- 2001) ராமேஸ்வரத்தில் மரணம் அடைந்தார்

தவமணி தேவி மறைந்த நாளையொட்டிய சிறப்புப் பதிவு 

.hindutamil.in  : சினிமாவில் சின்ன துரும்பைக் கிள்ளிப் போடுவதென்றால் கூட, ஏழுகடல் ஏழு மலை தாண்டி வட இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டும். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற ‘மாயாலோக’ த்தை சேலத்தில் உருவாக்கி, இந்தத் தேவையற்ற அலைச்சலைப் போக்கியவர் ‘செல்லுலாய்டு சீமான்’ டி.ஆர்.சுந்தரம். ஒரு டாக்கீயை உருவாக்க அனைத்து வசதிகளையும் அங்கே நிர்மாணித்த பிறகு, 1937-ல் அவர் தயாரித்து, இயக்கி, வெளியிட்ட முதல் படம் ‘சதி அகல்யா’. அதில்தான் அறிமுகப்படுத்தப்பட்டார் ‘சிங்களக் குயில்’ கே. தவமணிதேவி.

பரபரப்பான பத்திரிகையாளர் சந்திப்பு

இந்தப் படத்தின் பூஜை 1936-ல் நடந்தபோது, அதைத் தொடங்கிவைத்தவர் அன்றைய காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமதி ருக்மணி லட்சுமிபதி. பூஜை முடிந்து படப்பிடிப்பு தொடங்கவிருந்த சில தினங்களுக்கு முன் மதராஸிலிருந்து பத்திரிகையாளர்களைச் சேலத்துக்கு வரவழைத்தார் சுந்தரம். ‘சதி அகல்யா’ படத்தின் கதாநாயகியைப் பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். பதினைந்து வயதே நிரம்பிய தவமணிதேவி, இலங்கைப் பெண்களின் கலாச்சார உடையில் பத்திரிகையாளர்களைக் கைகூப்பி வணங்கினார். சிங்களம் கலந்த தமிழில் கொஞ்சிக் கொஞ்சி பதில்கள் கூறினார். பதின்மம் விலகாத தன் கற்கண்டுக் குரலால் ஒரு ஆங்கிலப் பாடலை பாடிக் காட்டினார். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பின் ‘சதி அகல்யா’ படத்தில் ரிஷி பத்தினி அகலிகையாக நடிக்கவிருந்த தவமணி தேவியின் புகைப்படங்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டன. அதில் நீச்சல் உடையில் ஒய்யாரம் காட்டிய தவமணி தேவியைக் கண்டு பத்திரிகையாளர்கள் ஆடித்தான் போனார்கள். பன்னிரண்டு முழம் சேலை கட்டும் தமிழ்நாட்டுக்குள் இப்படியொரு துணிச்சல் பெண் இலங்கையிலிருந்து நுழைந்தால் எப்படியிருக்கும்!

நீச்சல் உடைப் புகைப்படங்களால் ‘சதி அகல்யா’ படம் வெளியாகும் முன்பே ‘கிளாமர் குயின்’ஆகப் பிரபலமாகிவிட்டார் தவமணி தேவி. அப்படியிருக்க தெய்வீகத் தன்மைகொண்ட அகலிகை வேடத்தில் அவரை நடிக்கவைக்க இந்தத் திருச்செங்கோட்டுக்காரருக்கு எவ்வளவு துணிவு வேண்டும்’ என்று ஆச்சரியமாகப் பேசிக்கொண்டார்கள் அன்று. ‘ஒருகால் அகலிகையை கவர்ச்சியாகச் சித்தரிப்பாரோ’ என்று அனுமானம் செய்தவர்கள், படம் வெளியானபோது ஏமாந்துபோனார்கள்.

திடுக்கிட வைத்த மேனகை

ஆனால் அடுத்தடுத்து நடிக்த படங்களில் அவர் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். வெகு சில படங்களே நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவின் முதல் ‘கவர்ச்சிச் கன்னி’யாக மட்டுமல்ல, டி.ஆர்.ராஜகுமாரிக்கு முன் முதல் கனவுக் கன்னியாகவும் ஆனார் தவமணி தேவி. எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி முதன்முதலாக நடித்த ‘சகுந்தலை’யில் ‘மேனகை’யாகத் தோன்றினார். மார்பில் கச்சை கட்டிக்கொண்டு, ‘மேகத்துயில்’ என அன்று வர்ணிக்கப்பட்ட, உடல் வெளியே தெரியும் மெல்லிய ‘ட்ரான்ஸ்பரண்ட் ஜார்ஜெட்’ துணியால் ஆன பாவாடை அணிந்து, விஸ்வாமித்திர முனிவரின் கடும் தவத்தைக் கலைக்க இவர் ஆடிய நடனம், திரையரங்குகளில் வெப்ப அலைகளை உருவாக்கியது.

வனமோகினியும் ராஜகுமாரியும்

அடுத்து வெளியான ‘வனமோகினி’யில் தனது செல்ல யானையுடன் காட்டில் வாழும் பெண்ணாகக் கவர்ச்சி உடையில் தோன்றி கதிகலங்கவைத்தார் தவமணி தேவி. கவர்ச்சி உடை என்றால் மலேயா, மாலத்தீவு, ஹவாய் போன்ற தேசங்களில் பெண்கள் அணியும் ‘சாரத்தை’(sarong) என்ற பூப்போட்ட நீளமான துணியை உடலில் சுற்றி கழுத்தில் முடிச்சிட்டுக்கொள்ளும் ஆடையை தவமணி அணிந்திருந்தார். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே அப்படியொரு ஆடையைக் கதாநாயகி அணிந்தது அதுவே முதல்முறை. ‘வனமோகினி’யில் பத்துக்கும் அதிகமான பாடல்களைத் தன் இனிய குரலால் பாடி அசத்திய தவமணிதேவி, அந்தப் படம் வெளியான அதே ஆண்டில் வெளியான ‘வேதவதி அல்லது சீதா கல்யாணம்’ படத்தில், ‘வனமோகினி’க்கு நேர் எதிராக சீதையின் வேடத்தில் வந்தார். அதில் இந்திரஜித்தாகச் சிறுவேடத்தில் நடித்திருந்த எம்.ஜி.ராமச்சந்தர், பின்னர், ‘ராஜகுமாரி’யில் கதாநாயகனாக அறிமுகமானர். காலம் எல்லாவற்றையும் நீர்க்குமிழியாக மாற்றிவிடுகிறது. இப்போது ‘ராஜகுமாரி’ படத்தில், எம்.ஜி.ராமச்சந்தரைத் தன் அழகால் மயக்கமுயலும் சர்ப்பத்தீவின் விஷாராணியாக காமக் கதாபாத்திரம் ஒன்றை தவமணிதேவிக்கு வழங்கியது.

திறமைகளின் மொத்த உருவம்

தவமணிதேவியை அன்றைய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவர்ச்சி பிம்பமாகச் சித்தரித்தார்கள். அவரை வைத்து தங்கள் கல்லாவை நிரப்பிக்கொண்டார்கள். அவரிடமிருந்து கவர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்க வைத்தார்கள். ஆனால் பரதம், கண்டி நடனம், ராக் அண்ட் ரோல், பாலே உள்ளிட்ட பல நடனங்கள் கற்றவர்தவமணிதேவி. சிறந்த பாடகி. ஆங்கிலத்தில் கவிதையும் பாடலும் எழுதும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆடை வடிவமைப்பு, ஒப்பனைக்கலை ஆகியவற்றை அறிந்தவர். யாழ்ப்பாணத்தின் இணுவில் பிறந்து வளர்ந்து 5 வயதுமுதல் அங்கே நடனமும் பாட்டும் கற்று, தங்கத் தட்டில் உண்டு வளர்ந்த தவமணிதேவியின் தந்தை கதிரேசன் சுப்ரமணியம் கொழும்பு நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றியவர். தவமணிதேவியின் தாய் மாமா பாலசிங்கம், இலங்கை வெள்ளைக்கார அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர். 15 படங்களே நடித்த தவமணிதேவி, புதிய நடிகைகளின் வரவால் 1962-ல் சினிமாவிலிருந்து முற்றாக விலகி கோடிலிங்க சாஸ்திரியை மணந்து ராமேஸ்வரத்தில் குடியேறி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தவர், தனது 81-வது வயதில் மறைந்தார்.

படங்கள் உதவி: ஞானம்

1

கருத்துகள் இல்லை: