புதன், 4 ஆகஸ்ட், 2021

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு தண்டனை; 2 பேருக்கு இரட்டை  ஆயுள் தண்டனை; கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு - Dinakaran

 மாலைமலர் :டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஐயப்பன் அப்ரூவர் ஆனதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
சென்னையை சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வைத்து கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.
டாக்டர் சுப்பையாவை தலை, கழுத்து, கை, என்று 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் என்ற இடத்தில் உள்ள பல கோடி சொத்துக்காக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.


இந்த வழக்கில் பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வப்பிரகாஷ், ஐயப்பன் என்று 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 2 பேர் வக்கீல்கள், 2 பேர் ஆசிரியர்கள், ஒருவர் அரசு டாக்டர், ஒருவர் என்ஜினீயர், மற்றவர்கள் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் ஆவர். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூவராக ஆகிவிட்டார்.

இந்த வழக்கு சென்னை முதலாவது செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வக்கீல் விஜயராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டபட்டவர்களுக்கு ஆதரவாக வக்கீல்கள் கோபாலகிருஷ்ணன், சந்திர சேகர், ரகுமான் உள்பட பலர் ஆஜரானார்கள்.  இந்த வழக்கின் இறுதி கட்ட வாதம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அல்லி தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அல்லி இன்று காலையில் பிறப்பித்தார். அதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் பிற்பகல் அறிவிக்கப்பட்டது. அப்போது, முக்கிய குற்றவாளிகளான பொன்னுசாமி, வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேரி புஷ்பம், கூலிப்படையை சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனதால் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருப்திகரமாக உள்ளது என சுப்பையாவின் மனைவி தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: