புதன், 21 ஜூலை, 2021

அமைச்சர் துரைமுருகன் மீது ஜாதிய வன்கொடுமை புகார்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி உத்தரவு

 Veerakumar- Oneindia Tamil :வேலூர்: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சாதிய வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க வேலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கூறியுள்ளது.
வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவர்தான் புகார்தாரர். தமிழக நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் மீது டெல்லியிலுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், நில அபகரிப்பு, ஜாதிய வன்கொடுமை தொடர்பாக இவர் புகார் அளித்துள்ளார். சுப்பிரமணியின் புகாரில், அமைச்சர் துரைமுருகனின் உறவினர்கள் சிலரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.கற்களை வீசி தாக்குதல் தனது புகார் மனுவில் சுப்பிரமணி கூறியுள்ள பரபரப்பு குற்றச்சாட்டு இதுதான்: ஐயா, நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். இந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள எனது முகவரியில் அமைந்து இருக்கக்கூடிய கட்டிடத்தில் ஏணிப்படி கட்டி வருகிறேன். ஆனால், எனது நிலத்தில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று கூறி, தமிழ்நாடு மாநில அமைச்சர் துரைமுருகனின் உறவினர்கள் , முருகன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் என்னை மற்றும் எனது சகோதரரை கற்களை வீசி தாக்கினர். இந்த வருடம் மே மாதம் 28ஆம் தேதி மற்றும் 29-ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் இந்த தாக்குதல் நடைபெற்றது.

எப்.ஐ.ஆர் பதிவு செய்யாத காவல்துறை இது தொடர்பாக 2 புகார்கள் காவல்நிலையத்தில் எனது தரப்பில் வழங்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு புகாருக்கு மட்டும் சிஎஸ்ஆர் காவல்துறையில் வழங்கப்பட்டது. திருவலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் ஆகியோரிடம் தாக்குதல் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஆதாரங்களையும் வழங்கிய பிறகும் கூட இதுவரை எனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. காட்பாடி டிஎஸ்பி பழனி இடமும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காவல்துறை மிரட்டல் இதனிடையே, எனது நிலத்தில் இருக்கும் மரங்களை வெட்ட கூடாது என்றுதான் திருவலம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மிரட்டல் விடுத்தார். எனது புகாரை ஏற்றுக் கொள்ளாததோடு, என்னையே காவல்துறை மிரட்டுகிறது. எனது புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு புகாரை அனுப்பி வைத்தேன். அவர் டிஎஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக ஜூன் மாதம் 26ஆம் தேதி கடிதம் எழுதினார் . ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக நான் எனது புகாரை, டிஜிபி , தலைமைச் செயலாளர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு கூட அனுப்பி வைத்தேன்

என் மீது புகார் அளித்து மிரட்டல் இந்த நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜூலை மாதம் 14ம் தேதி மற்றும் 15ம் தேதி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் என்னிடம் விசாரணை நடத்தியபோது அனைத்து விவரங்களையும் நான் அவரிடம் சமர்ப்பணம் செய்தேன். ஆனால், இன்றுவரை எனது புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் திடீரென்று எனது மீது முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். நான் வழங்கிய புகாரை திரும்பப் பெற்றுக் கொள்ளாவிட்டால் எனது மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்

போலீஸ் உடந்தை நாராயணன் திமுக எம்எல்ஏ மற்றும் தற்போதைய அமைச்சரான துரைமுருகன் உடன் சேர்ந்து கொண்டு என் மீதும் எனது சகோதரர்களும் பொய்யான புகார்களை பதிவு செய்துள்ளார். ஆளுங்கட்சியாக திமுக இருக்கிறது. அதன் அமைச்சராக துரைமுருகன் இருக்கிறார். துரைமுருகனின் குடும்பத்தினர் முருகன் உள்ளிட்டோரும் திமுக கட்சியில் இருக்கிறார்கள். கிருஷ்ணன் மகன், பெருமாள் காட்பாடி தாலுகா இளைஞர் திமுகவில் செயலாளராக இருக்கிறார். இதன் காரணமாகத்தான் காவல்துறையினர் என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

துரைமுருகன் மீது வன்கொடுமை புகார் எனவே போலீஸ் எஸ்பி மட்டத்திலான ஒரு அதிகாரி தலைமையில் சிறப்பு மற்றும் தலையீடு இல்லாத விசாரணை நடத்தப்பட வேண்டும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான ஜாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எனது புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். துரைமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது ஜாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். எனக்கும் எனது குடும்பத்துக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் . சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன், போலியான வழக்குகளை என் மீது பதிவு செய்து இருப்பதால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் சுப்பிரமணி தெரிவித்திருக்கிறார்.

கலெக்டருக்கு உத்தரவு இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்ரமணி வழங்கிய புகாரில் அமைச்சர் துரைமுருகன் அவரது உறவினர்கள் முருகன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் பெயர் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனை காப்பாற்ற கொண்டு வரப்பட்ட கடுமையான சட்டப் பிரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: