புதன், 21 ஜூலை, 2021

விற்பவர்கள் முதலாளிகள்... அதை வாங்க வக்கற்றவர்கள் தொழிலாளிகள். வாங்குபவர்கள் நடுத்தர வர்கம்

May be an image of 2 people and text
May be an image of சுமதி விஜயகுமார் and standing

சுமதி விஜயகுமார் :  எனக்கு தெரிந்து முதன்முதலில் டிவி விளம்பரத்தில் , தன் கடைக்காக தானே தோன்றி  விளம்பரம் கொடுத்தவர் வசந்த் & கோ உரிமையாளர்.
அதற்கடுத்து திருச்சி மங்கள் & மங்கள் உரிமையாளர். மங்கள் & மங்கள் உரிமையாளர் ,
முதலில் பாத்திரங்களை தள்ளு வண்டியில் வீடுவீடாக விற்பனை செய்தார் என்று அம்மா சொல்ல கேட்டதுண்டு.
எனக்கு  தெரிந்து,  மலைக்கோட்டை எதிரில் ஒரு சிறிய கடையாக இருந்தது.
இப்போது அது விரிவடைந்து பலமாடி கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.
இது போல் உழைப்பால் உயர்ந்தவர்கள் , பிறகு அந்த துறையில் கோலோச்சுவது அரிது கிடையாது.
இது போல் ஒவ்வொரு ஊரிலும் உதாரணங்கள் இருக்கும்.
இப்போது சரவணா ஸ்டோர்ஸ் , லலிதா நகை கடையை தொடர்ந்து போத்திஸ் உரிமையாளரும் விளம்பரத்தில் வருகிறார்.


அதிலும் போத்திஸ் உரிமையாளர் , துணி விற்பனையுடன்  புதிதாக நகை விற்பனையும் துவங்கி உள்ளதாக கூறி மக்கள் ஆதரவு கோருகிறார்.
இதில் தவறேதும் இல்லை. எனக்கு தெரிந்து தொழில் துறையில் இருக்கும் நண்பர்கள் பலரும் GST , பண பதிப்பிளப்பிற்கு பிறகு தொழில் முன்பு போல இல்லை என்றே தெரிவித்தார்கள். இதில் மோடி ஆதரவாளரும் அடங்குவர். இவையெல்லாம் போதாதென்று காரோண பொது தொற்றினால் lockdownல் நாடே வீட்டினுள் அடங்கி இருந்தது. புலம் பெயர் தொழிலார்கள் ஊர் திரும்பி செல்ல , தமிழ்நாட்டில் தொழில் இன்னும் கடுமையான பதிப்பிற்குள்ளாகி இருந்தது. வளரும் நாடகிலும் மாநிலமாகிலும் அதில் முக்கியமான ஒரு துறை கட்டுமானம். அதில் செலவிடும் பணம் தான் மக்களிடையே பண புழக்கத்தை அதிகரிக்கும். திமுக ஆட்சியேற்ற கொஞ்ச நாளில் சிமெண்ட் விலை அதிக விலைக்கு விற்கப்படுகிறது அதனால் அரசு அதை கட்டுப்படுத்தி நெறிமுறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஒரு துறை என்றில்லாமல் ஏறக்குறைய அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டன. 

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கிறோம்.
இப்படியான ஒரு சூழ்நிலையில், லலிதா jewellery புதிதாக கிளை திறக்க போகிறார்கள், போத்திஸ் புதிதாக நகை வியாபாரம் செய்ய போகிறார்கள். நாடே தத்தளித்து கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு மட்டும் புது கடைகள் திறக்க பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதோடு மட்டும் இல்லாமல், அந்த கடைகளில் வாங்க மக்கள் இருக்கிறார்கள் அதை நம்பி தான் இவர்கள் கடைகளை திறக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விற்பவர்கள் முதலாளிகள் என்றால் , அதை வாங்க வக்கற்றவர்கள் தொழிலாளிகள். வாங்குபவர்கள் நடுத்தர வர்கம். 

இந்த நடுத்தர வர்க்கத்திடம் இருந்துதான் பெரும் முதலாளிகள் தொழில்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். மளிகை , துணி, நகை என்று இன்று பல துறைகளும் பெரு முதலாளிகள் கைகளில் தான். இப்போது புதிய மீன் பிடி சட்டத்தின் கீழ் மீன் தொழிலும் பெரும் முதலாளிகள் கையில் செல்ல இருக்கிறது. மின்துறை, குடிநீர் விநியோகம், சாலை வசதி என்ற அரசு பொது துறைகளும் பெரு முதலாளியின் கைகளுக்கு செல்ல இருக்கிறது.

உலகம் இப்படி சுழன்று கொண்டிருக்க, இன்னொரு புறம், கம்யூனிச சோசியலிச சித்தாந்தந்தை தகர்க்கும் வேலையையும் சேர்த்தே செய்கிறது முதலாளித்துவ வர்கம். Netflix ல் The Russian Revolution என்ற ஆவணப்படம் பார்க்க நேர்ந்தது. அதில் ரஷ்ய புரட்சியை தவிர மத்ததெல்லாம் பேசுகிறார்கள். அதாவது Tsar மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை கூறிவிட்டு மக்கள் தாங்களே கிளர்ந்தெழுந்த சமயம் அதை லெனின் உபயோகித்து கொண்டார் என்று கூறுகிறார்கள்.
லெனின் வருகிறார், பின்பு மறைந்துவிடுகிறார், பிறகு மீண்டும் வருகிறார், அவ்வளவு தான் என்கிறார்கள். லெனின் பொய் பேசி இருக்கிறார். Tsar குடும்பத்தை, குழந்தைகள் உட்பட புரட்சியாளர்கள் படு கொலை செய்கிறார்கள், அது லெனின்கு தெரியாமல் நடத்திருக்க சாத்தியமில்லை என்கிறார்கள். லெனின்னையே அப்படி சித்தரித்தவர்கள், அதற்கு பின்னர் வந்த ஸ்டாலின் பற்றி என்ன சொல்லி இருப்பார்கள் என்று நான் சொல்ல தேவையில்லை.

அடுத்து Genius of Modern World.  அதில் முதல் பகுதியாய் கார்ல் மார்ஸ் பற்றி இருந்தது. மார்ஸ் பிறந்தது, வளர்ந்தது, காதல், திருணம், வேலை, நாடுகடத்தல் என்று எல்லாம் பேசுகிறது. மார்ஸ், ஜென்னியின் காதல் உலகம் அறிந்தது. ஆனால் மார்ஸ்கு இன்னொரு தொடர்பும் இருந்தது. மேலும் மார்ஸ்கு ஒரு வகையான சரும நோய் இருந்ததாகவும் கூறுகிறார்கள். மார்ஸ்ன் கையெழுத்து நன்றாக இருக்காது. குளிக்க மாட்டார், இஷ்டம் போல் தூங்குவார் எந்திருப்பார். அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. எந்த முதலாளித்துவத்தை எதிர்த்து தன் இளமை, காதல், குழந்தைகள், வசதியான வாழ்க்கையை துறந்தரோ, இறுதி நாட்களில் அந்த முதலாளித்துவ வாழ்க்கையை வாழ முயற்சித்தே உயிர் துறந்தார் என்பதாக நிறைவடைகிறது.

மேற்சொன்ன இரண்டு படங்கள் மட்டும் தான் நான் பார்த்தவை. கம்யூனிச சித்தாந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இத்திரைபடங்களை பார்த்தால் அவர்களுக்கு என்ன எண்ணம் உண்டாகும் என்று நான் சொல்ல தேவையில்லை. கம்யூனிச தோல்வியாய் USSR உடைந்ததையும், இந்நாள் சீனாவையும் தான் காண்பிப்பார்கள். அடக்குமுறைக்கும் கொடுங்கோள் ஆட்சிக்கும் ஹிட்லரையும் ஸ்டாலினையும் தான் உதாரணம் தருவார்கள்.முதலாளித்துவ நாடுகளை பற்றி மூச்சு கூட விடமாட்டார்கள்.
இடதுசாரி தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் இளைய தலைமுறையிடம் சேர்ப்பதற்கு சாமானியனின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் சமூக வலைத்தளங்கள் மட்டுமே. கோடி கோடியாய் செலவு செய்து எடுக்கப்படும் இது போன்ற குப்பை படங்களை சொற்ப பணத்தில் வாங்கும் dataகள் துடைத்தெரியட்டும்.

கருத்துகள் இல்லை: