வெள்ளி, 22 ஜனவரி, 2021

நாதஸ்வரத்திற்கு புது வடிவம் கொடுத்த மேதை நரசிங்கம்பேட்டை பிரம்மஸ்ரீ ரங்கநாத ஆசாரி

Image may contain: 1 person, text that says 'Narasingampettai Brahmasri Ranganath Achari'
கம்மாளர் களஞ்சியம் ;· நரசிங்கம்பேட்டை பிரம்மஸ்ரீ ரங்கநாத ஆசாரி நாதஸ்வரம்  என்றதும் மனத்தில் தோன்றும் பெயர் மேதை ராஜரத்தினம் பிள்ளையினுடையதுதான். அவரின் நீங்காப் புகழுக்கு அவருடைய அதீத கற்பனையும், அதை வெளிக்காட்டக் கூடிய அற்புதத் திறனும் காரணங்கள் என்றாலும் இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது அவர் வாசித்த வாத்யம். ராஜரத்தினம் பிள்ளை வாசிக்கத் தொடங்கிய காலத்தில் அளவில் சிறிய, ஐந்து கட்டை ஸ்ருதியில் ஒலித்த திமிரி நாயனம் என்கிற வகை நாதஸ்வரமே உபயோகத்திலிருந்தது. திமிரி நாயனத்தில் அனைத்து ஸ்வரங்களையும் துல்லியமாக வெளிப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக சுத்த மத்தியம ஸ்வரத்தை வாசிக்க கலைஞர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
1945-ல் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நரசிங்கம்பேட்டையில் இருந்த ரங்கநாத ஆசாரி என்பவர். இரண்டு கட்டை ஸ்ருதியில் வாசிக்கக் கூடிய, அளவில் சற்று பெரிய நாகஸரத்தை வடிவமைத்தார். அடுத்த ஊரான திருவாவடுதுறையில் இருந்த ராஜரத்தினம் பிள்ளையைச் சந்தித்து தன் கண்டுபிடிப்பைக் காட்டினார். வாசித்துப் பார்த்த ராஜரத்தினம் அனைத்து ஸ்வரங்களும் துல்லியமாய் சேருவதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார்.. சுத்த மத்யமத்தை இடைஞ்சலின்றி வாசிக்க முடிந்ததால் அதுவரை கடக்க முடியாத எல்லைகளை எல்லாம் அவரது வாசிப்பு கடக்கத் தொடங்கியது. தன்னுடனே இருந்து தனக்கு மட்டுமே இந்த வாத்தியத்தை அளிக்குமாறு ரங்கநாத ஆசாரியைக் கேட்டுக் கொண்டார் ராஜரத்தினம்.
 
தன் வாழ்வின் கடைசியில், ஒரு கடிதம் ஒன்றை ராஜரத்தினம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசும், மற்ற நாதஸ்வர கலைஞர்களும் ரங்கநாத ஆசாரிக்கு ஆதரவு வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளார். ராஜரத்தினம் பிள்ளைக்குப் பின் அந்த வாத்யத்தை மேதை காருக்குறிச்சி அருணாசலத்துக்கு அளித்தார் ரங்கனாத ஆசாரி. 
 
‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் ‘சிங்கார வேலனே தேவா’ பாடலில் காருக்கிறிச்சி வாசித்ததும் அந்தப் பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. அப்போது அந்தப் பாடலின் வெற்றிக்கு காரணம் தன் வாசிப்பு மட்டும் காரணமல்ல, ரங்கநாத ஆசாரியின் நாதஸ்வர  வாத்தியமும் காரணம் என்று உலகுக்கு தெரியப்படுத்தினார் அருணாசலம். 
 
அதோடு தன் செலவில் ஒரு வைர மோதிரம் ஒன்றையும் ரங்கநாத ஆசாரிக்கு அணிவித்து மகிழ்ந்தார். அதன் பின்னரே, அனைத்து கலைஞர்களும் ரங்கநாத ஆசாரியின் கண்டுபிடிப்பை உபயோகப்படுத்தத் தொடங்கினர். அவர் கண்டுபிடித்த வகையிலேயே இன்றைய நாதஸ்வரங்கள் செய்யப்படுகின்றன. ரங்கநாத ஆசாரியின் பிள்ளைகள் இன்றளவும் நரசிங்கம்பேட்டையில் நாகஸ்வரம் செய்து வருகின்றனர்.
ஒரு ஆளுமையின் நூற்றாண்டு, அவரின் பங்களிப்பைத் திரும்பிப் பார்க்க ஓர் அரிய வாய்ப்பு. ரஙநாத ஆசாரியின் நூற்றாண்டான இந்த வருடத்தில் அவரின் பங்களிப்பின் மேல்போதிய வெளிச்சம் விழ இசைத்துறை கடமைப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர் பட்டம். 24/10/2019

கருத்துகள் இல்லை: