புதன், 20 ஜனவரி, 2021

சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் 15 பேர் பலி! குஜராத்தில்

    minnambalam ": குஜராத்தில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிதி உதவியை அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்திருப்பது கொசம்பா கிராமம். அங்கு, ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் வந்து வேலை செய்துவிட்டு, நேற்று முன்தினம் சாலையோரம் நடைபாதையில் கண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு தாண்டிய நிலையில், கிம் என்ற இடத்தில் இருந்து மாண்ட்வி என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டர் டிராலி மீது பயங்கரமாக மோதியது. அந்த வேகத்தில் லாரியானது சாலையில் இருந்து விலகி, சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறி ஓடியது. இதில், தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் உடல்கள் நசுங்கின.... 

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்தனர். அவர்கள் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். 3 பேர் மீட்டு, சூரத் மாநகராட்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்தனர். பலியான 15 பேரில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவார்கள். படுகாயம் அடைந்த மேலும் 3 பேர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

லாரியை ஓட்டி வந்த டிரைவரும், கிளீனரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இருவரும் குடிபோதையில் லாரியை ஓட்டியதாக தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த துயர சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி பலியோனோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிதி உதவி அறிவித்துள்ளார்.

குஜராத்தில் நடந்த விபத்தில் தனது மாநிலத்தை சேர்ந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் 15 பேர் பலியானது குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: