புதன், 20 ஜனவரி, 2021

திமுக கூட்டணி நிலவரம்.. 180 தொகுதிகளில் உதயசூரியன்?

டிஜிட்டல் திண்ணை:  திமுக கூட்டணி நிலவரம்: ஸ்டாலின் சொல்லும் மெசேஜ்
minnambalam.com : ொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. “திமுகவின் அவசர மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 19ஆம் தேதி, இரவு தேனி மாவட்டத்திற்குச் சென்று இரவு தங்கிவிட்டு இன்று கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார், ஆனால் தேனி மாவட்ட பயணத்தை ரத்து செய்துவிட்டு, இன்று 20ந் தேதி சென்னையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நாளை ஜனவரி 21ஆம் தேதி, மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளார்.  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி சம்பந்தமாக பேசவிருப்பதாகவும் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.   அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற திமுக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் முன்னிலைப் படுத்தப்பட்டதை அடுத்தும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றித்தான் இரு கட்சிகளிலும் பேச்சாக இருக்கிறது. புதுச்சேரி விவகாரத்தில் திமுக மேற்கொண்டிருக்கும் பணி கட்சி பணிகளை தவிர தேர்தல் பணி அல்ல என்று மு க ஸ்டாலின் இந்து ஆங்கில பத்திரிக்கைக்கு நேற்று பேட்டி கொடுத்திருந்தார்.

ஆனபோதும் புதுச்சேரியில் திமுக எடுத்த முடிவை தமிழ்நாட்டிலும் எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கட்சித் தலைமைக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில்தான் 21ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க இருக்கிறது. திமுகவின் மொத்தமுள்ள சுமார் 70 மாவட்டச் செயலாளர்களில் 50க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கூட்டணி தேவையில்லை என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள். ‘காங்கிரசை நாம் தூக்கி சுமக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சியோடு தேர்தலில் நின்றால் களத்தில் நமக்கு அவர்களால் எந்த பலனும் இல்லை’ என்பதே மாவட்ட செயலாளர்களின் நிலைப்பாடு.

அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு குறைந்தபட்சம் 20 அதிகபட்சம் 40 என்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில்... திமுக போட்டியிட விரும்பும் தொகுதிகளை, அதுவும் பல்வேறு மாவட்டங்களில் திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு கேட்டுப் பெற்றால், திமுக மாவட்ட செயலாளர்கள் தாங்கள் விரும்பும் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட்டு பெற்றுக் கொடுக்க முடியாமல் போய்விடும். இந்தமுறை திமுகவுக்கு களம் சாதகமாக இருக்கும் நிலையில் எக்காரணத்தை முன்னிட்டும் காங்கிரசிடம் அந்த வாய்ப்பை நாம் இழந்துவிடக் கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட செயலாளர் கூட்டத்திலும் இதையே வலியுறுத்த அவர்கள் தயாராக இருக்கிறார்கள்

அதேநேரம் திமுகவில் இருக்கும் எம்பிக்களோ இந்த விஷயத்தில் வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். ’ காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை நாம் வெறும் மாநில அளவை மட்டும் வைத்து பார்க்க கூடாது. திமுக இந்திய அளவில் தற்போது முக்கிய கட்சியாக பார்க்கப்படும் நிலையில் காங்கிரஸ் கூட்டணியை நாம் தேசிய ஸ்கேலை வைத்துதான் அளவிட வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரள அதிக வாய்ப்பு உள்ளன. ஏனெனில் 2019 தேர்தலில் காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து பாஜகவை எதிர்க்க தவறிவிட்டதால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. 2024 தேர்தலில் அந்தத் தவறு மீண்டும் நடக்காது.

அப்போது தமிழகத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அந்த நிலையில் காங்கிரஸ், மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி மத்தியில் ஏற்படும்போது அதில் திமுகவும் இடம்பெற வேண்டும். இப்போது காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் என்பதை காரணம் காட்டி உறவை முறித்துக் கொண்டால் அது தேசிய அளவில் நமக்கு இழப்பாகி விடும். எனவே காங்கிரஸ் கட்சியை குறைந்தபட்ச சீட்டுகளோடு சமாதானப்படுத்தி, கூட்டணி வைத்திருப்பதே நமக்கு நல்லது என்று தெரிவிக்கிறார்கள்.

திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் சொல்வதைத்தான் ஸ்டாலின் கேட்கிறார் என்றும்.. . அதன்படியே காங்கிரஸ் கூட்டணியை வெட்டி விடவும் ஸ்டாலின் தயாராகி விட்டார் என்றும் திமுகவிலேயே சில குரல்கள் ஒலிக்கின்றன. அதுகுறித்து சீட்டைக் குறைத்தார் பிகே... ஒ.கே. சொன்னார் ஸ்டாலின் என்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்... ஸ்டாலினுக்கு நெருக்கமான சில நலம் விரும்பிகள்... ‘பிரசாந்த் கிஷோர் ஆலோசனை என்ற அளவில் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதை கட்சித் தலைவர் என்ற முறையில் ஏற்கவும் நிராகரிக்கவும் ஸ்டாலினுக்கு உரிமை உண்டு. ஏற்கனவே பலமுறை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பற்றி ஸ்டாலின் தெளிவு படுத்தியிருக்கிறார். அவர் நம்மிடம் சில ஆலோசனைகளை சொல்கிறார். அதை நாம் நம் கட்சிக்கும் கள நிலவரத்துக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவுதான்’ என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

எனவே பிரசாந்த் கிஷோர் கூறும் அனைத்தையும் ஸ்டாலின் ஏற்றுக் கொள்ள மாட்டார். ஏற்கனவே மின்னம்பலத்தில் குறிப்பிட்டிருந்தபடி காங்கிரசுக்கு 15 இடங்கள் என்ற அளவிலிருந்து 20 இடங்கள் என்ற அளவுக்கு ஸ்டாலின் உயர்த்தி இருக்கிறார். இதை ஒட்டியே காங்கிரஸுடனான கூட்டணி அமையும். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 180 தொகுதிகளில் உதயசூரியன் களம் காண வேண்டும் என்பது ஸ்டாலினுடைய எண்ணம். மீதி உள்ள 54 தொகுதிகள் தான் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும். இதுவே ஸ்டாலினுடைய தற்போதைய திட்டம். இதை ஒட்டிதான் மாசெக்கள் கூட்டத்தின் போக்கு இருக்கும் என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: