ஞாயிறு, 17 ஜனவரி, 2021

ராகுலின் அடுத்த தமிழகப் பயணத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இருக்குமா?

ராகுலின் அடுத்த தமிழகப் பயணத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இருக்குமா?

minnambalam :காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தமிழகத்துக்கு வருகிறார்.

கடந்த ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் அன்று மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ராகுல் காந்தி. இதற்காக தனி விமானத்தில் மதுரை வந்த அவர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, கிராமத்துப் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உடனடியாக மதுரையில் இருந்து டெல்லி திரும்பிவிட்டார்.   திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி. சென்ற முறை போல் அல்லாது சுருக்கமான பயணமாக இல்லாமல் மூன்று நாட்கள் பயணமாக கோவைக்கு வருகிறார்.

கோவை, திருப்பூர் பகுதிகளில் சிறு குறு தொழில்முனைவோர்களையும் தொழில் தரப்பினரையும் சந்தித்து உரையாடுகிறார்.

புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுத்து அதற்கான அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் காய்களை நகர்த்தி வருகிறது. நாளை ஜனவரி 18ஆம் தேதி புதுச்சேரியில் திமுக மாநில நிர்வாகிகளின் கூட்டம் இதுவரை இல்லாத விதமாக அரக்கோணம் எம்.பி தலைமையில் நடைபெறுகிறது.

ஜெகத்ரட்சகனே புதுச்சேரி திமுகவின் முதல்வர் வேட்பாளர் என்றும் அதனால் அவரை முன்னிறுத்தவே அவர் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டு இருப்பதாகவும் திமுகவினர் தெரிவிக்கிறார்கள். புதுச்சேரி காங்கிரசாருக்கும் தமிழக காங்கிரசாருக்கும் இந்த தகவல் தெரிந்த நிலையில் இது பற்றித் தலைமையிடம் தெரிவித்துள்ளனர்.

தமிழகக் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் இந்த விஷயம் குறித்து பேசியபோது...

"திமுகவின் புதுச்சேரி முடிவு பற்றி இன்னும் வெளிப்படையாக அறிவிப்பு வரவில்லை. அதே நேரம் அங்கே திமுக தனித்துப் போட்டியிடுவதற்கான அறிகுறிகள் தென்படுவது உண்மைதான். புதுச்சேரியை அடிப்படையாக வைத்தே தமிழகத்திலும் திமுக முடிவு எடுக்கும். ஆனால் அது அந்தக் கட்சிக்குத்தான் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும்.

பாஜகவின் நெருக்கடிக்கு நேரடியாக ஆட்படாமல் மறைமுகமாக பாஜகவோடு ஒரு சமரச போக்கை செய்துகொள்வதற்கான உத்தியாகவே திமுகவின் இந்த நடவடிக்கையை எங்கள் டெல்லி மேலிடம் பார்க்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்தை காங்கிரஸிடம் இருந்து தான் கைப்பற்றா விட்டாலும் வேறு யாராவது கைப்பற்றினால் சரிதான் என்று நினைக்கிறது பாஜக.

அதனால்தான் புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களை குறிவைத்து தன் பக்கம் இழுக்க முயற்சி செய்யும் பாஜக,. இன்னொரு பக்கம் திமுக-கங்கிரஸ் கூட்டணியை பிரித்து வைக்க எல்லாவித ஏற்பாடுகளையும் செய்கிறது.

ஜெகத்ரட்சகன் மீதான மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் வழக்கினைக் காரணம் காட்டி இந்த முயற்சியை பாஜகவே எடுத்திருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் திமுகவின் முடிவு வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட பிறகு தான் இது பற்றி கருத்து சொல்ல முடியும். ஒருவேளை திமுக காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் உடைந்தாலும் காங்கிரஸ் புதுச்சேரியில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

வரும் 23ஆம் தேதி ராகுல் தமிழகம் வரும்போது புதுச்சேரி நிலவரம் தமிழகத்திலும் எதிரொலிக்குமா, இல்லையா என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விடும்" என்கிறார்கள்.

வேந்தன்

 

கருத்துகள் இல்லை: