புதன், 11 மார்ச், 2020

திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்

திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்நக்கீரன் : திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைவை தொடர்ந்து, கட்சியில் மூத்த நிர்வாகியான துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆவது உறுதி என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது. சென்னை: தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைவை தொடர்ந்து அவரது படத்திறப்பு விழா அறிவாலயத்தில் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் தி.மு.க.வினர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை மறுநாளில் இருந்து மீண்டும் கொண்டாட தொடங்குகின்றனர். பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
தி.மு.க.வில் கட்சி தலைவருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பதவி பொதுச் செயலாளர் பதவியாகும். தற்போது இந்த பதவியை மு.க.ஸ்டாலின் கூடுதல் பொறுப்பாக நிர்வகித்து வருகிறார்கட்சியில் மூத்த நிர்வாகியாக அனுபவம் வாய்ந்தவராக துரைமுருகன் உள்ளதால் அவர் பொதுச்செயலாளர் ஆவது உறுதி என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது.


துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆகும்பட்சத்தில் அவர் வகித்து வரும் பொருளாளர் பதவி டி.ஆர். பாலு அல்லது ஐ.பெரியசாமிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான அறிவிப்பு சில மாதங்களில் வெளியாகுமா? அல்லது கட்சி தேர்தலை முறைப்படி நடத்தி அதன் பிறகு தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடத்தி அறிவிப்பு வெளியிடப்படுமா? என்பது இனி மேல்தான் தெரிய வரும்.

தற்போது கிளை கழக அளவில்தான் தேர்தல் நடைபெறுகிறது. இனிமேல் தான் ஒன்றிய, நகர, பேரூர், மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும்.

எனவே அதன்பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு பெயர் அறிவிக்கப்படுமா? அல்லது முன் கூட்டியே பெயர் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க.வில் பொதுச்செயலாளரை நியமித்ததும் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு மேலும் சிலரை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பட்டியலில் பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் இடம் பெறக்கூடும் என தெரிய வந்துள்ளது

கருத்துகள் இல்லை: