சனி, 22 பிப்ரவரி, 2020

நைனார் நாகேந்திரன் நடத்த முயன்ற கட்டப் பஞ்சாயத்து

savukkuonline.com : நைனார் நாகேந்திரன் நடத்த முயன்ற கட்டப் பஞ்சாயத்து தமிழக பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்ற சிக்கலில் இறுதியாக இருக்கும் இரு பெயர்களில் ஒருவர் நைனார் நாகேந்திரன்.   மற்றொருவர் எச்.ராஜா.    எச்.ராஜாவை நியமிக்க வேண்டும் என்று, கட்சியில் பலரின் ஆதரவு அவருக்கு இருந்தாலும், கட்சி தலைமை நைனார் நாகேந்திரனை நியமித்தால் என்ன என்று நினைக்கிறது.  நைனார் நாகேந்திரன் முக்குலத்தோர் சாதியை சேர்ந்தவர் என்பது ஒரு காரணம்.  மேலும் அவரை தலைவராக்கினால், அதிமுகவிலிருந்து பல தலைவர்களை பிஜேபிக்கு அழைத்து வருவார் என்பது மற்றொரு காரணம். ஆனால் எச்.ராஜா தரும் அழுத்தம் காரணமாக ஆறு மாதத்துக்கு மேல், தமிழகத்துக்கு யாரை தலைவராக போடுவது என்று பிஜேபி தலைமை தலையை பிய்த்துக் கொண்டு உள்ளது.
நைனார் நாகேந்திரன் இப்போது எந்த பெரிய பொறுப்பிலும் இல்லை. ஆனாலும், கட்டப் பஞ்சாயத்து செய்து வருகிறார்.   இவருக்கு பதவி கிடைத்தால் என்ன ஆகும் என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

நெல்லையை சேர்ந்த புத்தக நிறுவனம் டான் பப்ளிகேஷன்ஸ்.  முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு, கைடு, மாதிரி வினாத்தாள்கள் போன்ற புத்தகங்களை தயாரித்து வெளியிடுவது இந்நிறுவனத்தின் பணி.  சுரா புக்ஸ் என்பது மற்றொரு நிறுவனம்.   சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், பள்ளி பாடநூல்கள் இல்லாமல், கல்லூரி, போட்டித் தேர்வுகள் என்று பல நூல்களை அச்சடித்து வெளியிட்டு வருகிறது.
இப்படி தொழில் தொந்தரவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கையில், டான் புத்தக நிறுவனம் ஒரு பெரும் சிக்கலை சந்திக்கிறது. அவர்கள் ஆசிரியர்களை வைத்து, பாடநூல்களுக்கான கையேட்டை தயாரித்து வெளியிட இருக்கும் நிலையில் சரியாக ஒரு வாரத்துக்கு முன்னதாக, சுரா புக்ஸ் அச்சு அசலாக, அதே புத்தகத்தை வெளியிட்டு விடும்.   இதற்கு பிறகு டான் பப்ளிகேஷன்ஸ் அந்த புத்தகத்தை வெளியிட்டால், இவர்கள்தான் சுரா பதிப்பகத்தை பார்த்து காப்பியடித்ததாக பேசப்படும்.    இதனால், தொழிலில் பல நஷ்டத்தை சந்தித்து வந்தது டான் புக்ஸ் நிறுவனம்.

யாரோ, இங்கிருந்து தகவலை திருடி எதிரி நிறுவனத்துக்கு தருகிறார்கள் என்பது தெரிந்தாலும், யார் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.   தலையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், டான் புக்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர்,  மற்றொரு பதிப்பகத்துக்கு வேலைக்கு செல்கிறார்.  அப்போது வேறொரு இடத்தில் வேலை கிடைத்த விபரத்தை அவரோடு பணியாற்றும் டேனியல் சுந்தர் என்பவரிடம் சொல்கிறார்.  டேனியல் சுந்தர், எங்கே புதிய பணி என்ற விபரத்தை கேட்டுக் கொண்டு, அவரிடம், புதிய பதிப்பகம் தயாரிக்கும் புதிய புத்தகங்களின் மென்நகலை (soft copy) ஒரு பென் ட்ரைவில் நகலெடுத்து, அவர் சொல்லும் நபரிடம் கொடுத்தால், மாதா மாதம் சம்பளம் போல அவர் வங்கிக் கணக்குக்கு பணம் வந்து விடும் என்றும், யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
அந்த ஊழியர் மனசாட்சி உள்ளவர்.  நேர்மையானவர்.   நேரடியாக நிர்வாகத்திடம் சென்று, டேனியல் சுந்தர் தன்னிடம் என்ன கூறினார் என்பதை கூறி விடுகிறார்.   நிர்வாகத்தினர், டேனியல் சுந்தரின் வங்கிக் கணக்கை ஆராய்ந்ததில், சுரா புக்ஸ் நிறுவனத்தினர், மாதா மாதம் டேனியல் சுந்தருக்கு பணம் அனுப்பி வரும் விபரம் தெரிய வருகிறது.
உடனடியாக காவல் துறையில் புகார் அளிக்கின்றனர்.  காவல் துறை, டேனியல் சுந்தர் மற்றும் சுரா நிறுவனத்தின் மீது, நம்பிக்கை மோசடி, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்கின்றனர்.

இந்த இடத்தில்தான்,  நைனார் நாகேந்திரன் உள்ளே வருகிறார்.  சுரா புக்ஸ் நிறுவனத்தினர், டான் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம் தங்கள் சார்பாக பேசும்படியும், கேட்டுக் கொள்கின்றனர்.   அதன்படி, நைனார் நாகேந்திரன் டான் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தினரிடம், வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படியும், எவ்வளவு பணம் வேண்டுமோ, அவ்வளவு பணம் தருவதாகவும் கூறுகிறார்.
ஆனால், டான் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தினர், வழக்கை வாபஸ் பெற முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.   ‘இது எங்களின் பல ஆண்டுகால உழைப்பு.   இதில் நாங்கள் அடைந்த பண நஷ்டம் என்பது வேறு.  ஆனால் எங்களின் உழைப்புத் திருட்டை மன்னிக்க முடியாது” என்று உறுதியாக மறுத்து விட்டனர்.
நைனார் நாகேந்திரனும், சுரா பதிப்பகத்தினரிடம் முடியாது என கைவிரித்து விட்டார்.   இந்த பஞ்சாயத்தை செய்து வைப்பதற்காக சுரா பதிப்பகத்தினரிடம் நைனார் நாகேந்திரன் பணம் பெற்றாரா என்பது குறித்த தகவல்கள் இல்லை.
இந்நிலையில், ஜனவரி மாதம் டேனியல் சுந்தர் முன் ஜாமீன் கோரி நெல்லை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்று விடுகிறார்.  இந்த முன் ஜாமீன் மனுவை ரத்து செய்யுமாறு  கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், 7 பிப்ரவரி 2020 அன்று,  உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
அவ்வாறு முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த பிறப்பித்த  உத்தரவில் நீதிபதி, “இது மிக மிக மோசமான குற்றச்சாட்டு.   டேனியல் சுந்தர் CTP மிஷின் ஆப்பரேட்டராக இருந்துள்ளார்.  இவர்தான் கம்ப்யூட்டரிலிருந்து புத்தகமாக அச்சடிக்கும் பணியை செய்துள்ளார்.  தொடர்ந்து இவருக்கு பணம் வந்துள்ளதும், இவர் ஈமெயில் மூலமாக தகவல்களை சுரா புக்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளதற்கும் போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று பதிவு செய்துள்ளார்.
டேனியல் சுந்தர் மற்றும் சுரா புக்ஸ் நிர்வாகத்தினர் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்,  இந்த விவகாரத்தில் ஒரு குற்றம் நடந்துள்ளது.   பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.  இதில் நைனார் நாகேந்திரனுக்கு என்ன வேலை ?   இது போன்ற கோரிக்கையோடு யாராவது அணுகினார்கள் என்றால் கூட, நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று சொல்வதுதானே முறையாக இருக்கும் ?
பதவிக்கு வரும் முன்பே இத்தகைய செயலில் ஈடுபடும் நைனார் நாகேந்திரன் போன்றோர், பதவி கிடைத்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்

கருத்துகள் இல்லை: