திங்கள், 17 பிப்ரவரி, 2020

ரயிலில் சிவனுக்கு மினி கோயில்!

ரயிலில் சிவனுக்கு மினி கோயில்! மின்னம்பலம் : புதிதாக இயக்கப்பட்ட ரயிலின் ஒரு பெட்டியில் கடவுள் சிவனுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாரணாசி, மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன், இந்தூர் அருகேயுள்ள ஓம்காரேஸ்வர் கோயில் ஆகிய மூன்று புனிதத் தலங்களையும் இணைக்கும் நாட்டின் மூன்றாவது தனியார் ரயிலான ‘மகாகால்’ எஸ்பிரஸின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் நேற்று துவக்கிவைத்தார்.
இந்த நிலையில் புதிய ரயிலில் கடவுள் சிவனுக்கு மினி கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் குளிரூட்டப்பட்ட மூன்றாவது வகுப்பு பி5 பெட்டியில் 64ஆவது பெர்த்தில் சிவனுடைய படம் வண்ணத் தோரணங்களுடன் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. புனித தினங்கள் மற்றும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிரார்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பெர்த்தில் பயணிகள் யாரும் முன்பதிவு செய்ய முடியாது எனவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

மேலும், “தெய்வத்திற்காக இந்த இடம் காலியாக இருக்கும். சிவனுக்கு ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டு காலியாக விடப்படுவது இதுவே முதல்முறை. உஜ்ஜைனில் மகா காலுக்கு இறைவன் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஒரு கோயில் கூட இருக்கையில் வரையப்பட்டுள்ளது” என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் பிடிஐக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
எனினும் இதுதொடர்பாக விளக்கம் அளித்த ஐஆர்சிடிசி, “புதிய மகாகால் எக்ஸ்பிரஸ் ரயில் வெற்றிகரமாக இயங்குவதற்காகவும், பூஜை செய்வதற்காகவும் மட்டும் ரயிலின் ஊழியர்கள் தற்காலிகமாக சிவனுடைய புகைப்படத்தை மேலே வைத்திருந்தனர். ரயிலின் தொடக்க ஓட்டத்திற்காக மட்டுமே இவ்வாறு செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
லேசான பக்தி இசை, ஒவ்வொரு பெட்டியிலும் அர்ப்பணிப்புள்ள இரண்டு தனியார் காவலர்களுடன் வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் இந்த ரயிலில் சைவ உணவுகள் மட்டுமே விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
த.எழிலரசன்

கருத்துகள் இல்லை: