செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

மீண்டும் மருத்துவர்கள் போராட்டம்... .. தமிழகம் முழுவதும்

தமிழகம் முழுவதும் மீண்டும் மருத்துவர்கள் போராட்டம்!மின்னம்பலம் : பணியிட மாற்றம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும், அரசு மருத்துவர்களுக்குக் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப் படுத்த வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பவில்லை என்றால் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். மீண்டும் பணிக்குத் திரும்பிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ எனச் சொல்லப்படும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசும், பணி மாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டு வந்தன. இதில் 35 பெண் மருத்துவர்கள் உட்பட 118 பேர் கிராமப் பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்த நிலையில், தற்போது வரை மருத்துவர்களின் கோரிக்கைக்கு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், பணியிட மாற்றம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அரசு மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. இதில் மீண்டும் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. என்ன மாதிரியான போராட்டம் மற்றும் தேதி ஆகியவை குறித்து சேலத்தில் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையை அரசு கடைப்பிடிப்பதாகவும் அச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை: