திங்கள், 17 பிப்ரவரி, 2020

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் விமர்சனம் .. அவர் பேசியது ... வீடியோ .

மின்னம்பலம் :   பட்டியலினத்தோர் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியவை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "திராவிட இயக்கம் ஒழிந்தால்தான் தமிழகத்திற்கு நன்மை என்று பேசுகிறான் என்று சொன்னால் அவனுக்கு அந்த தைரியத்தை தந்தது யார்? இந்தியாவிலேயே தமிழகம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணம் திராவிட இயக்கம்தான். ஏழெட்டு தாழ்த்தப்பட்டவர்கள் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என சித்தரிக்கப் பார்க்கிறார்கள். திமுகக்காரன் கோயிலுக்குச் செல்லவில்லை என்றால் அய்யருக்கு வருமானமே இல்லை. திமுகவின் வட்டச் செயலாளர் கோயிலுக்கு போனால் 100 ரூபாய் போடுவான். கவுன்சிலர் போனால் 500 ரூபாய் போடுவான். எம்.எல்.ஏ போனா ஆயிரம் ரூபாய் போடுவான். ஏன் நான் கூட கையில் கயிறு கட்டியிருக்கிறேன்” என்றவர் தனது பேச்சை பத்திரிகையாளர்களை நோக்கி நகர்த்தினார்.

“பத்திரிகைகாரர்களுக்கு வேறு வேலை இல்லை. பிரஷாந்த் கிஷோரை நரேந்திர மோடி, அரவிந்த் கேஜ்ரிவால் பயன்படுத்திய போதெல்லாம் எதுவும் சொல்லவில்லை. அவர் திமுகவுடன் இணைந்ததும் வயிற்றெரிச்சல் காரணமாக அதைப்பற்றி மட்டுமே பேசுகிறார்கள். டிவிகாரனுங்க போல அயோக்கியனுங்க உலகத்துல எவனும் கிடையாது. மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியாவைப் போல டிவி சேனல்கள் இயங்குகின்றன” என்று கடுமையாக விமர்சித்தார் ஆர்.எஸ்.பாரதி.

4 நிமிடம் வரை உள்ள அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலலானதோடு, ஆதிதிராவிடர்கள் நீதிபதியானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்றும், பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசியதாகவும் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஆர்.எஸ்.பாரதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதித் தமிழன் இன்று (பிப்ரவரி 17) வெளியிட்ட அறிக்கையில், “ஆர்.எஸ் பாரதி, வாய்க்கு வந்தபடி மிகக் கேவலமாக பத்திரிகையாளர்களையும் செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களையும் தரக்குறைவாக பேசும் காணொலி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. திமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ் பாரதி நிதானம் தவறி தரம் தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “வார்த்தைகளில் வரம்பு மீறிய ஆர்.எஸ் பாரதி தனது தரக்குறைவான பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்ற செயல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியதோடு, “பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதை எப்போதும் ஏற்கிறோம். விமர்சனங்களையும் ஏற்கிறோம்.அதே நேரத்தில் தனிப்பட்ட தாக்குதல்களை, தரக்குறைவான அவதூறுகள் அநாகரீக பேச்சுக்களை வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற தரக்குறைவான பேச்சுக்களை பொதுவாழ்வில் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இந்த நிலையில் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த ஆர்.எஸ்.பாரதி, “பிப்ரவரி 14ம் தேதி சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நான் பேசிய சில வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும், “என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்துவது அல்ல. கலைஞர் அம்மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை எடுத்து கூறுவதே ஆகும்” என்று விளக்கியுள்ளார்.
ஆனாலும், தாழ்த்தப்பட்டோரைப் பற்றி பேசியதற்காக மட்டும்தான் வருத்தம் தெரிவித்துள்ளார். இன்னும் பத்திரிகையாளர்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் பத்திரிகையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
த.எழிலரசன்

கருத்துகள் இல்லை: