
அவர்களை கைது செய்த காவல் துறையினர் தனியார் திருமண மண்டபங்களில் தங்கவைத்து சிறிது நேரத்திற்குப் பிறகு விடுவித்தனர். போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர்கள் மாலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவது வழக்கம் என்ற நிலையில், முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது தொடர்பாக விசாரித்தோம்...
இஸ்லாமியர்களின் போராட்ட அறிவிப்பு வெளியானதும் போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச் செல்ல வாகனங்கள், தங்க வைக்க திருமண மண்டபங்கள், அவர்களுக்கான மதிய உணவு உள்ளிட்டவற்றுக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்துவைக்கும்படி காவல் துறை மேலிடத்திலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, மாவட்டத்திலுள்ள உளவுப் பிரிவு அதிகாரிகள் (எஸ்பிசிஐடி) 1000-2000 பேர் தான் போராட்டத்திற்கு வருவார்கள் என்று உத்தேசமாக ஒரு புள்ளிவிவரத்தை அதிகாரிகளுக்கு அளித்துள்ளனர். அதுபடியே கைது செய்யப்பட்டவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும் தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிவாசல்கள் 40, 000 உள்ளன. ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் ஜமாத் கமிட்டி இருக்கும். ஒவ்வொரு ஜமாத்துக்கும் முத்தவல்லி ஒருவர் இருப்பார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பே ஊர்காரர்களிடம் முத்தவல்லிகள், ‘இஸ்லாமியர்கள் அனைவரும் சிஏஏ போராட்டத்தில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். சொந்த ஊரில் கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும் கூட வேறு எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். கைது செய்தாலும் அதற்கு தயாராக செல்ல வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையறிந்த காவல் துறை தரப்பு தங்கள் பகுதிக்குட்பட்ட முக்கிய இஸ்லாமிய பிரதிநிதிகளை அழைத்து இரவோடு இரவாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பே போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படியும், அதிகளவிலான கூட்டத்தை கூட்ட வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட நிர்வாகிகள், திட்டமிட்டபடி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள்.
இதனையடுத்து, இரவோடு இரவாக கூடுதல் திருமண மண்டபங்கள், வாகனங்கள் மற்றும் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று காலை காவல் துறையினரே எதிர்பார்க்காத அளவுக்கு தமிழகம் முழுவதும் போராட்டக்காரர்கள் திரண்டதால் செய்வதறியாது திகைத்தனர். விஷேஷ நிகழ்ச்சிகளுக்குச் சென்றவர்கள் பலரும் தாங்கள் இருந்த பகுதியில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து அவசர அவசரமாக, ’கைது செய்துள்ளவர்களை விடுவித்து கலைந்துபோகச் சொல்லிவிடுங்கள். முக்கிய நிர்வாகிகளை மட்டும் புகைப்படம் எடுத்து, அவர்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யுங்கள்’ என்று வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்துதான் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டவர்கள் சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டனர்.
இன்று காலை சட்டமன்ற முற்றுகை: போலீஸ்- போராட்டக் காரர்கள் வியூகங்கள்! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த செய்தியில், “எதிர்பார்ப்பதைவிட அதிக கூட்டம் வரும் என்பதால் போலீசார் கைது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம் என இஸ்லாமியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் கூறியிருந்தார்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.
மின்னம்பலம் டீம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக