சனி, 22 பிப்ரவரி, 2020

கேரளா.. மதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பில் சேர்க்க மறுத்த பள்ளி


மாலைமலர் :கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் மதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பில் சேர்க்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நசீம். இவரது மனைவி தன்யா. இந்த தம்பதியின் மகனை 1-ம் வகுப்பில் சேர்க்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளிக்கு சென்ற நசீம் தனது மகனை அந்த பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டார்.
விண்ணப்பத்தை அவர் நிரப்பியபோது அதில் மதம் என்று இருந்த இடத்தில் மதம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். அதை பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தார். அப்போது அதை சரிபார்த்த தலைமையாசிரியர் என்ன மதம் என்று குறிப்பிடாவிட்டால் அவரது மகனை பள்ளியில் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டார்.
ஆனால் மதம் பற்றி விண்ணப்பத்தில் குறிப்பிட முடியாது என்பதில் நசீம் உறுதியாக இருந்தார். பள்ளி நிர்வாகமும் தனது முடிவில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டது.

 மாணவனை பள்ளியில் சேர்க்கும்போது மதத்தின் பெயரை குறிப்பிட வேண்டியது கட்டாயம் இல்லை என்று ஏற்கனவே கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறும் வகையில் இந்த பள்ளி நிர்வாகம் செயல்பட்டதால் அது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இந்த தகவல் கேரள கல்வி மந்திரி ரவீந்திரநாத் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் இதுபற்றி விசாரணை நடத்தும்படி பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரும் விசாரணை நடத்தினார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம் நசீமை தொடர்பு கொண்டு அவரது மகனை மதத்தை குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அந்த பள்ளியில் தனது மகனை சேர்க்க விருப்பம் இல்லை என்றும் வேறு பள்ளியில் தனது மகனை சேர்க்க முடிவு செய்து உள்ளதாகவும் நசீம் கூறினார்

கருத்துகள் இல்லை: