ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

சிஏஏ: நூலகத்தில் புகுந்து படிக்கும் மாணவர்களை தாக்கிய போலீசார்.. சி சி டி வி வீடியோ


 மின்னம்பலம்:  ஜாமியா பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் புகுந்து மாணவர்களை போலீசார் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டெல்லி ஜாமியா மிலியா, அலிகார் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். டிசம்பர் மாதம் 15ஆம் தேதி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, தடியடி பிரயோகங்களில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இதனால் கொந்தளித்த மாணவர்கள் நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிராக தீவிரப் போராட்டங்களைக் கையிலெடுத்தனர்.
இந்த நிலையில் சிஏஏ போராட்டத்திற்குப் பிறகு ஜாமியா பல்கலைக் கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது காவல் துறையினர் கொடூர தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக் கழகத்தின் பழைய வாசிப்பு அறையில் மாணவர்கள் அமர்ந்து படித்துகொண்டிருக்கிறார்கள். அப்போது முகத்தில் கவசம் அணிந்துகொண்டு உள்ளே நுழையும் காவல் துறையினர், படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களை லத்தியைக் கொண்டு சரமாரியாகத் தாக்குகின்றனர். தாக்குதலுக்கு பயந்து பல மாணவர்கள் அங்கும் இங்கும் ஓடுகின்றனர்.
இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்த தாக்குதல் சம்பவத்தில் 49 வினாடி சிசிடிவி காட்சிகளை, தற்போது மாணவர்கள் நிர்வகிக்கும் ஜாமியா ஒருங்கிணைப்பு கமிட்டி தற்போது சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லி காவல் துறையும், அமித் ஷாவும் நூலத்திற்குள் காவல் துறையினர் நுழையவில்லை என்றும், மாணவர்களை தாக்கவில்லை என்று பொய் சொன்னார்கள். தற்போது டெல்லி காவல் துறை மாணவர்களை எப்படி மிகவும் மோசமாக தாக்கியிருக்கிறது என்பதைப் பாருங்கள். ஒரு மாணவர் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், ஒரு போலீஸ்காரர் அந்த மாணவரை தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “இந்த வீடியோவை பார்த்த பிறகும், ஜாமியா மாணவர்களை தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசின் நோக்கம் அம்பலமாகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
த.எழிலரசன்

கருத்துகள் இல்லை: