புதன், 5 செப்டம்பர், 2018

ஆசிரியர் வீரமணி ::பாஜகவினர் தரம் தாழ்ந்து பேசும் பேச்சுகள் மீது நடவடிக்கை உண்டா?

tamilthehindu :பாசிச பாஜக ஒழிக என்ற
மாணவியின் முழக்கத்தை பாஜக தமிழக
தலைவர் தமிழிசை பொருட்படுத்தியிருக்கத் தேவையில்லை என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கனடா நாட்டில் உள்ள மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகப் படித்துக் கொண்டிருக்கும் லூயிஸ் சோபியா தூத்துக்குடியைச் சார்ந்தவர்.<>இது ஒரு பெரிய விஷயமா?
அவர் திங்கள்கிழமை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்தபோது, அதே விமானத்தில் பயணித்த தமிழக பாஜக தலைவருடன் உரையாடலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நடைபெறும் கருத்தாளர், எழுத்தாளர் கைதுகள் பற்றி, இளைய தலைமுறையினரிடம், ஜனநாயக நாட்டில் இப்படி கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிராக பொய் வழக்குகளைப் போட்டு கைது செய்வது, சிறையில் தள்ளுவது ஜனநாயகத்தின் மாண்புக்கு ஒவ்வாதது; பாசிசப் போக்கு என்று பரவலாகப் பரவியுள்ள நிலையில், அந்த மாணவி, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று ஓங்கிக் குரல் எழுப்பியுள்ளார்.

இது ஒரு பெரிய விஷயமே அல்ல. இதை தமிழிசை, தக்க வகையில் அம்மாணவியிடம் பதில் கூறி, அவரிடம் அக்கருத்து சரியில்லை என்று முடிந்தால் உணர்த்தியிருக்கலாம்; அல்லது அதைப் பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம்.
பாஜகவுக்குப் பெருமையா?
ஆனால், இப்பிரச்சினை குறித்து காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்ட பிறகும், இதனை மிகவும் பெரிதாக்கி, அம்மாணவி பற்றி புதுக்கற்பனைகளில் எல்லாம் ஈடுபட்டு, கைது செய்ய வைத்தது, பாஜகவுக்கோ அல்லது தமிழிசைக்கோ பெருமை சேர்க்காது. பல பேட்டிகளின்போது, செருப்பு, ஷூ வீசியவர்களைக் கூட பல மாற்றுக் கட்சித் தலைவர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறி, உயர்ந்தே இருக்கிறார்கள்.
இதில் தமிழிசை பாஜக ஆட்சி பற்றி இளைய தலைமுறை, வெளி உலகம் எப்படிக் கருதுகிறது என்ற உணர்வினைப் புரிந்து, அந்த எண்ணம் பரவலாக ஏற்பட்டிருப்பதை மாற்றுவது எப்படி என்று சிந்தித்திருப்பாரேயானால், அதுவே சரியான அணுகுமுறையாகும்.
பாஜகவினர் எப்படி எப்படியெல்லாம் வசைபாடுகிறார்கள்?
பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா போன்ற பலரும் தரக்குறைவான விமர்சனம், பெருந்தலைவர்களைக் கூட ஒருமைச் சொற்களில் தகாத முறையில் பேசிய ஒலிநாடாக்கள் விவகாரம் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, ஏதும் நடவடிக்கை மேற்கொள்ளாத தமிழக அரசின் காவல்துறையினர் இந்த மாணவி விஷயத்தில் மட்டும் இப்படி கைது நடவடிக்கையில் ஈடுபடுவது எவ்வகையில் நியாயம் ஆகும்?
அவைக் குறிப்பிலிருந்து பிரதமர் மோடியின் உரையே நீக்கப்பட்டதே!
பிரதமர் மோடியின் மாநிலங்களவைப் பேச்சினை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவே நீக்கிடும் வரலாறு கண்டிராத போக்கு தழைத்துள்ள நிலையில், ஒரு மாணவி உணர்ச்சிவசப்பட்டு முழக்கமிட்டதற்காக சிறை என்றால், நம் நாட்டின் ஜனநாயகம் எப்படி உள்ளது என்பதை உலகத்திற்கே எடுத்துக்காட்டுவதாக ஆகியுள்ளது. தமிழிசையின் புகாரை ஏற்ற தூத்துக்குடி புதுக்கோட்டை காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்டவரின் தந்தை கொடுத்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத ஒருதலைப்பட்சப் போக்கு நியாயம்தானா? இது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
மாணவியை விடுதலை செய்க
கைது செய்யப்பட்ட மாணவி லூயிஸ் சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது ஆறுதல் அளிக்கிறது. உடனடியாக அந்த மாணவியை விடுதலை செய்து, தங்களுக்கு ஏற்பட்டுள்ள கறையைப் போக்கிட வேண்டும். நீதிமன்றங்கள் தலையில் குட்டிய பிறகு விடுதலை செய்வதைத் தவிர்ப்பது நல்லது” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: