ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

மதுரை மருத்துவக் கல்லூரியில் வெளிச்சத்துக்கு வந்த ‘ராகிங்’ கொடுமை

சீனியர் மாணவர்கள் எதிரே வரும்போது ‘சல்யூட்’ அடிக்க வேண்டும். தலை நிமிர்ந்து அவர்களை பார்க்கவே கூடாது. தினமும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை விடுதிக்குள் நுழைந்து எங்களை (முதலாம் ஆண்டு மாணவர்கள்) அவர்கள் முன்பு நிமிர்ந்து பார்க்காமல் தலைகுனிந்து நிற்க சொல்கிறார்கள். மீசை வைக்கக்கூடாது, பனியன் போடக் கூடாது, முழுக்கை சட்டைப் போடக்கூடாது என்கிறார்கள். மொபைல் போன்களை அணைத்து வைக்கக் கூடாது, எந்த நேரத்தில் அழைத்தாலும் உடனே அவர்களின் அறைக்கு செல்ல வேண்டும். தினமும் அவர்களுக்கு குடிநீர் பிடித்துக் கொடுப்பது முதல் அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்ய வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் விடுதியின் கதவு மூடப்பட்டாலும் சீனியர் மாணவர்கள் அழைத்தால், அவர்கள் தங்கியுள்ள இரண்டாம் மாடி அறைக்கு சுவர் கிரீல் கதவுகளை பிடித்து மேலே ஏறிச் செல்ல வேண்டும். இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டுகிறார்கள்.
tamil.thehindu.com மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை, அவர்கள் விடுதிக்குள் நுழைந்து  ‘ராகிங்’ செய்த 2-ம் ஆண்டு மாணவர்கள் 20 பேர் 6 மாதம் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கல்லூரி விடுதியில் இருந்து 2 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நீண்ட காலத்துக்குப் பிறகு அரசு மருத்துவக் கல்லூரியில்  ‘ராகிங்’ நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த காலத்தில் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் முதல் கலைக்கல்லூரிகள் வரை ‘ராகிங்’ கொடுமை அதிகமாக இருந்தன. கடந்த 1996-ம்  ஆண்டு ராகிங் கொடுமையால் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்  தமிழகத்தையே உலுக்கியது.
அதன்பிறகு ராகிங் தடுப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு கல்லூரிகளில் அந்தந்த கல்லூரி ‘டீன்’ தலைமையில் பேராசிரியர்கள், காவல்துறை அதிகாரி, வழக்கறிஞர், சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளர்கள் அடங்கிய ராகிங் தடுப்புக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. அந்த கமிட்டி, ராகிங் என்ற பெயரில் ஜூனியர் மாணவர்களிடம் வரம்பு மீறும் சீனியர் மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கும் அளவுக்கு  நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது.
அதனால், தற்போது கல்லூரிகளில் ‘ராகிங்’ கட்டுப்படுத்தப்பட்டு முதலாம் ஆண்டு மாணவர்கள் நிம்மதியாக கல்லூரிகளில் சென்று படித்து வந்தனர்.
சமீபகாலமாக மருத்துவக் கல்லூரிகளில்  மீண்டும் மெல்ல மெல்ல ‘ராகிங்’ தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதைப்பற்றி ஜூனியர் மாணவர்கள் வெளிப்படையாக  புகார் தெரிவிக்க தயங்கியதால் சீனியர் மாணவர்களின் அத்துமீறல் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மாணவர்கள் 20 பேர், முதலாமாண்டு மாணவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களை ராகிங் செய்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இரவு 9 மணிக்கு மேல் முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதி பூட்டப்பட்டிருக்கும். அப்போது சீனியர் மாணவர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று ராகிங் கொடுமை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஜூனியர் மாணவர்கள் கடந்த 30-ம் தேதி இரவு டெல்லி ராகிங் தடுப்பு கமிட்டியிடம் இ-மெயிலில் புகார் செய்துள்ளனர். அந்த கமிட்டி, புகார் அனுப்பிய மாணவர்கள் பெயர்களை வெளிப்படுத்தாமல், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன், மதுரை மாநகர காவல் ஆணையருக்கு தகவல் தெரிவித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி நிர்வாகம், கல்லூரி விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு மாணவர்களிடம் நேற்று விசாரணை நடத்தியது. அதில், அந்த மாணவர்கள், ஒரு மாதமாக தினமும் மாலை, இரவு நேரத்தில் 2-ம் ஆண்டு மாணவர்கள் 20 பேர் விடுதிக்குள் புகுந்து ராகிங் செய்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர்.
கல்லூரி வார்டன்களிடமும் டீன் மருதுபாண்டியன் விசாரணை நடத்தினார். அவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதிக்குள் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புகுந்த வீடியோ ஆதாரத்தை  கொடுத்து அந்த 20 பேர் பெயர் பட்டியலை வழங்கினர்.
இதையடுத்து, நேற்று மாலை மருத்துவக்கல்லூரி ‘ராகிங்’ தடுப்பு கமிட்டி,  டீன் மருதுபாண்டியன் தலைமையில் கூடியது. இதில், முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் எழுதிக் கொடுத்த புகார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
அதில் அந்த மாணவர்கள், ‘‘சீனியர் மாணவர்களுடைய ‘ராகிங்’ கொடுமையால் எம்பிபிஎஸ் படிக்கவே  அச்சமாக இருக்கிறது.
அவர்கள் எப்போது கூப்பிடுவார்கள், என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை’’ என அச்சம் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து ‘டீன்’ மருதுபாண்டியன் கூறியதாவது: முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதிக்குள் சீனியர் மாணவர்கள் நுழைவதே தண்டனைக்குரியது. ஆனால், அவர்கள் அத்துமீறி நுழைந்ததோடு ‘ராகிங்’  செய்துள்ளனர். இதை மன்னிக்க  முடியாது. ‘ராகிங்’ செய்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 20 பேர் 6 மாதத்துக்கு கல்லூரியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுகின்றனர். அவர்கள் 2 ஆண்டுகளுக்கு கல்லூரி விடுதியில் இருந்தும் ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுகின்றனர்.
அந்த மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை  மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்
படும். இந்த நடவடிக்கையால் அந்த 20 மாணவர்களும் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வை எழுத முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
என்ன ‘ராகிங்’ செய்தார்கள்?
முதலாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் தடுப்பு கமிட்டியிடம் எழுதிக் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது:
சீனியர் மாணவர்கள் எதிரே வரும்போது ‘சல்யூட்’ அடிக்க வேண்டும். தலை நிமிர்ந்து அவர்களை பார்க்கவே கூடாது. தினமும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை விடுதிக்குள் நுழைந்து எங்களை (முதலாம் ஆண்டு மாணவர்கள்) அவர்கள் முன்பு நிமிர்ந்து பார்க்காமல் தலைகுனிந்து நிற்க சொல்கிறார்கள். மீசை வைக்கக்கூடாது, பனியன் போடக் கூடாது, முழுக்கை சட்டைப் போடக்கூடாது என்கிறார்கள். மொபைல் போன்களை அணைத்து  வைக்கக் கூடாது, எந்த நேரத்தில் அழைத்தாலும் உடனே அவர்களின் அறைக்கு செல்ல வேண்டும். தினமும் அவர்களுக்கு குடிநீர் பிடித்துக் கொடுப்பது முதல் அவர்கள் சொல்லும் வேலைகளைச்  செய்ய வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் விடுதியின் கதவு மூடப்பட்டாலும் சீனியர் மாணவர்கள் அழைத்தால், அவர்கள் தங்கியுள்ள இரண்டாம் மாடி அறைக்கு சுவர் கிரீல் கதவுகளை பிடித்து மேலே ஏறிச் செல்ல வேண்டும். இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது  என்று மிரட்டுகிறார்கள். இவ்வாறு அவர்கள் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

கருத்துகள் இல்லை: