வியாழன், 26 ஏப்ரல், 2018

ஊடகங்களில் பார்ப்பனர்களின் கோரப்பிடி நழுவுகிறது ..? ஆழி செந்தில்நாதன் .. தன்னாட்சி தமிழகம்

பிராமணர்கள் மீடியாகள் மேல் வைத்திருந்த பிடி எப்படி நழுவுகிறது என்று
ஆழி செந்தில்நாதனின் அருமையான பதிவு....அவசியம் வாசியுங்கள் நண்பர்களே...
"நமது ஊடகவியலர்களின் உரிமைக்காக எழுந்துநிற்போம்!
தமிழ் ஊடகவியலர்கள் பலர் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இச்சூழலில் அவர்களை நோக்கி நேசக்கரம் நீட்ட வேண்டிய கடமையை நம் அனைவருக்கும் உணர்த்துவதற்காக இந்தப் பதிவு.
ஒரு சொந்தக் கதையிலிருந்தே தொடங்குகிறேன்.
நான் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை (இதழியல்-தொடர்புப்பாட்டியல்) முடித்து இந்தியா டுடேயில் பயிற்சிநிலை துணை ஆசிரியராக சேர்ந்தது 1995 இல். அன்று முதல் இன்றுவரை, ஊடக உலகில் உள்ளேயோ சற்று விளிம்பிலோ இருந்துவந்திருக்கிறேன். 95 வாக்கில் ஊடகத்துறையில், நாடார் சமூகத்தினரால் நடத்தப்படும் பத்திரிகைகளைத் தவிர, வேறு இடங்களில் பார்ப்பனரல்லாதோரின் பங்கு என்பது மிக மிக மிகக் குறைவு.
இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்ப்பனரல்லாத மேல்-இடைநிலைச் சாதியினர் சிலர் இருந்தார்கள். ஆனால் தலித்களையோ வன்னியர்களையோ வேறு பல விவசாயம் சார்ந்த சாதியினரையோ பார்ப்பது என்பது சாத்தியமே இல்லாமலிருந்தது. தமிழ்ப்பத்திரிகைகளியே நிலைமை இப்படி என்றால், இந்துவிலோ எக்ஸ்பிரஸிலோ தில்லி பத்திரிகைகளின் சென்னை அலுவலகங்களிலோ நிலைமை எப்படி இருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான சென்னை correspondents பார்ப்பனர்களாகவோ மலையாளிகளாகவோ இருப்பார்கள்.
இந்தியா டுடேயின் தென்னிந்திய தலைமையகம் என்பது மலையாளிகளால் நிறைந்திருந்தது. அதன் REGIONAL EDITORS ஆக இருந்தவர்கள் எல்லோரும் அமர்நாத் கே மேனன், கோவிந்தன் குட்டி, ராஜீவ் மேனன், அசோக் தாமோதரன் என மலையாளிகள் தான். ரிசப்ஷனிஸ்ட் தொடங்கி அட்மின், சேல்ஸ், மார்க்கெட்டிங், PANTRY உள்பட எல்லாமே மலையாளிகளின் வசம். இந்தியா டுடே இங்கிலீஷில் மலையாளிகளும் மயிலாப்பூர்வாசிகளும்தான். தமிழில் மட்டும் மூன்று நான்கு மாநிறத் தோலர்கள் இருப்பார்கள்.
மெயின்ஸ்ட்ரீம் பத்திரிகைகளில் பிறகு மெல்ல மெல்ல பார்ப்பனரல்லாதோர் நுழைய ஆரம்பித்தார்கள்.
தூர்தர்ஷனும் ஆகாஷ்வாணியும் எப்படி இருந்துவந்தது என்பதைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. முதலில் சன் டீவியும் பிறகு பிற தனியார் தொலைக்காட்சிகளும் உருவானபோது ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. இந்த ஊடகங்களில் பார்ப்பனரல்லாதோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. ஆனால் பார்ப்பனர்கள் அப்போதும்கூட பெரிய சதவீத இடங்களை அடைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகாலமாக நிறைய தொலைக்காட்சி நிறுவனங்கள் – குறிப்பாக செய்தி சேனல்கள் – தொடங்கப்பட்ட பிறகு பெருமளவிலான செய்தியாளர்கள் தேவைப்பட்டனர். இந்த மாற்றம் நடந்த காலகட்டம் என்பது தமிழ் ஊடக உலகில் ஒரு நிலைமாற்றக் காலகட்டமாகும்.
ஊடகத்துறையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தோடு, ஊடகப் பயிற்சித்துறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. நான் எம்ஏ படித்த தொண்ணூறுகளின் தொடக்கத்தில், சென்னையில் சென்னைப் பல்கலைக்கழகம், லயோலா, கிறிஸ்தவக் கல்லூரி, கோவையில் பிஎஸ்ஜி, மதுரையில் ம.கா. பல்கலை., நெல்லை மனோன்மணியனார் பல்கலை. என ஒரு சில இடங்களில்தான் ஊடகப் பயிற்சியே கிடைத்தது.
ஆனால் 2000களில் நூற்றுக்கணக்கான கல்லூரிகளில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறையும் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்புகளும் ஏற்பட்டன. மறைந்த நண்பர் ஆன்டோ பீட்டர் போன்றவர்கள் தமிழ்நாடெங்கும் தனிப்பயிற்சி முறையில் ஊடகவியலைக் கற்றுக்கொடுத்தார்கள். மற்றொரு புறம் குறும்படப் பயிற்சிகளை அளித்துவந்தார்கள் நிழல் திருநாவுக்கரசு போன்ற இடதுசாரி தோழர்கள்.
இந்த மிகப்பெரிய ஊடகக் கல்வி பரவலினூடாக ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஊடகத் திறன்களைப் பெற்றார்கள். இதில் விகடனின் மாணவர் பயிற்சித்திட்டமும் மிக முக்கியமானதாகும்.
அடுத்தது இணைய ஊடகம்: இந்தியாவில் இணைய ஊடகம் அறிமுகமான காலத்திலேயே, அது முதலில் வந்தது தமிழில்தான். தமிழின் முதல் இணைய ஊடகங்களில் ஒன்றான கணியன்.காம் என்கிற இணைய தளத்துக்கு தன்னார்வ ஆசிரியராக (1996 – 97 இல்) நான் பணியாற்றியிருக்கிறேன். பல இணைய ஊடகத் தொழில்நுட்பச் செயல்பாடுகளில் பங்கேற்றுவந்த என்னால் இன்னொன்றையும் சொல்லமுடியும். New Media என்று அழைக்கப்படும் இணைய ஊடகத்தின் திறமைகளை புயல்வேகத்தில் கற்றுக்கொண்ட நமது பிள்ளைகள் இன்று அந்த துறையில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அச்சு இதழியிலிலும் தொலைக்காட்சி ஊடகத்திலும் பார்ப்பன ராஜ்யத்தை மீறிச் செல்வதற்கு பல தசாப்தங்கள் ஆகியிருக்கலாம். ஆனால் இணைய ஊடகத்தைப் பொறுத்தவரை, அப்படி இல்லை. அது ஒரு ஊடகமாக உருவாகும் போதே நமது இளம்தலைமுறை அதில் நுழைந்துவிட்டது. அதன் அடுத்த பரிமாணமான சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை சொல்லத்தேவையில்லை.
இந்நிலையில் மெல்ல மெல்ல பெரிய ஊடக ப்ராண்ட்களில் நம்மவர்கள் இடம்பிடித்தார்கள். தகுதியுடனும் திறமையுடனும்தான்! அது பிபிசியாக இருந்தாலும்சரி, அம்பானியின் நியூஸ் 18 ஆக இருந்தாலும் சரி, நமது இளைய தலைமுறையினர் மிகச்சிறப்பாக செயல்பட்டுவருகிறார்கள்.
பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், காணொளிகள், சமூக ஊடகங்கள் ஆகிய செய்தித்தொடர்புப்பாட்டியல் களங்களில் இன்று தமிழ்ச் செல்வங்களின் வெற்றியைக் கண்டு களிக்க கண்கோடி வேண்டும்.
பார்ப்பனீய மூளைகளுக்கு இது பிடிக்குமா? பக்ஷிராஜன் அனந்திகிருஷ்ணன்களால் இதை சீரணிக்கமுடியுமா? பாஜக மீடியா ஓநாய்களாலும் இதைச் சகித்துக்கொள்ளமுடியுமா?
காலம் அவர்கள் பக்கம் இல்லைதான். ஆனால் மோடியின் காலம் அவர்களுக்கு தோதாக இருக்கிறது. தொலைக்காட்சி விவாத மேடைகளை எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் அனைத்து விவாத அரங்குகளையும் ஆக்ரமித்தார்கள். எல்லாத் தொலைக்காட்சி ஊடக மேடைகளிலும் ரைட் ராயலாக நுழைந்து “மசாலா” அரைத்துக்கொண்டிருந்தார்கள் (வார்த்தைக்கு நன்றி: மோடி). திமிர்பிடித்த உடல்மொழிகளைக் காட்டி, ஆணவத்தோடு பேசிக்கொண்டிருந்தார்கள். வீரபாண்டியன்களையும் மதிமாறன்களையும் விரட்டினார்கள். நெறியாளரைப் பார்த்து "நீ முட்டாள்" என்று அவமானப்படுத்தினார்கள்.
இவ்வளவுக்கும் பிறகு, தொலைக்காட்சி விவாதமேடைகள் இப்போது அவர்களுடைய மிகப்பெரிய தோல்வி மேடையாக மாறிக்கொண்டிருக்கிறது. இனி எல்லா சேனல்களிலும் ரங்கராஜ் பாண்டேக்கள் வந்து கோலோச்சினாலும் நிலைமை மாறப்போவதில்லை.
ஒரு சில நெறியாளர்களைத் தவிர, பெரும்பாலான நமது நெறியாளர்கள் இப்போதெல்லாம் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
எந்த சேனல்களையும் சமூக ஊடங்களையும் வைத்து திடீர் வெற்றிகளைப் பெற்றார்களோ அந்த மின்னணு வெளியும் சமூக ஊடக வெளியும் இப்போது இந்துத்துவாதிகளுக்கு எதிராகப் போய்க்கொண்டிருக்கிறது.
கடந்த சில வாரங்களில் தமிழர்கள் சமூக ஊடகங்களில் அடித்துத்துவைத்த #IndiaBetraysTamilnadu மற்றும் #GoBackModi இணையப் பரப்புரைகள் சைபர் சங்கிகளுக்கு சங்கு ஊதிவிட்டது.
பொறுத்துக்கொள்வார்களா? ஊடகங்களில் தங்களுடைய பிடி நழுவுகிறது என்பதைத் தெரிந்தவுடன் இப்போது ஊடகங்களில் வேலை செய்யும் நம் மக்கள் மீது அவர்களது பொறாமைத்தீ பார்வை திரும்புகிறது. ஓபிஎஸ் ஈபிஎஸ்ஸை இம்பொடென்ட் என்று திட்டிய குருமூர்த்தியைப் போல புலம்புகிறார்கள். அதுதான் எஸ் வி சேகரின் வார்த்தைகளில் பெண் நிருபர்கள் மீதான வன்மமாக உருவாகிறது. பக்ஷிராஜன் அனந்தக்கிருஷ்ணனை பிபிசிக்கு லெட்டர் எழுத வைக்கிறது.
நமது நண்பர்களும் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். ஊடக நிறுவனங்களின் அதிபர்களைப் பொறுத்தவரை அவர்கள் பாஜக – அதாவது ஆளும்கட்சி – ஆதரவு என்ற நிலையில் இருப்பார்கள். அந்த நிர்பந்தத்தின் கீழாகவே நெறியாளர்களும் செயல்பட்டிருக்கலாம். ஆனால் முடிந்த அளவுக்கு நமது ஊடகவியலாளர்கள் – அந்த நிர்பந்தத்தையும் மீறி – உண்மையின் பக்கம் நின்றிருக்கிறார்கள், வாதிட்டிருக்கிறார்கள். நாமும் அவர்களுடைய வரம்புகளை புரிந்துகொண்டு பேசவேண்டும்.
இங்கே ஒரு உண்மைக்கதையைச் சொல்லவிரும்புகிறேன்:
நான் இந்தியா டுடேயில் 2012 இல் காப்பி எடிட்டராக பணியாற்றியபோது, ஒரு முறை மே 17 இயக்கத்தின் கடற்கரை நினைவேந்தல் நிகழ்வு குறித்து பெரிய கட்டுரை எழுதியிருந்தேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் உருத்திரகுமாரனின் பேட்டியொன்றையும் வெளியிட்டிருந்தேன். உடனடியாக, இந்தியா டுடேயின் தமிழ்ப் பொறுப்புக்கான ‘தரநிர்ணய பரிசோதகராக’ செயல்பட்டுவந்த ஒரு பார்ப்பனர், இந்தியா டுடே தலைமை ஆசிரியருக்கு புகார் அளித்தார். இந்தச் செய்தியாளர் (அதாவது நான்) புலிகளின் “மொழியிலேயே” எழுதுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்! (தில்லி எடிட்டோரியல் அதை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).
இன்று அதைத்தான் ஆரிய நாஜியும் பார்ப்பனீய முழுமூடரும் மயிலாப்பூர் சண்டியருமான பக்ஷிராஜன் அனந்தகிருஷ்ணன் செய்திருக்கிறார். பிபிசிக்கு புகார் செய்கிறாராம்! பிபிசி தமிழில் தமிழ்த்தேசியம் குறித்து வருகிற கட்டுரைகளைப் பார்த்து அரண்டு போய், பிரிட்டிஷ் அரசாங்கம் தனித்தமிழ்நாட்டை ஊக்குவிக்கிறதா என்று அலறுகிறார்கள். நாஜி சார், பிரிட்டிஷ்காரன்தான் எங்களை தில்லியோடு முடிச்சுப்போட்டான். அவனே அவிழ்த்துவிட்டு போகிறான் என்றால் போகட்டுமே!
அப்புறம் லண்டன்ல உங்களவா மட்டும் இல்ல, எங்களவாவும் இருக்கா!
உண்மை என்னவென்றால் பிபிசி இதழாளர்கள் இதழியல் நெறிமுறைக்கு உட்பட்டுதான் இந்த தொடரை வெளியிடுகிறார்கள். இதில் பணியாற்றும் சில பத்திரிகையாளர்கள் தமிழ்த்தேசியம் மீது கடுமையான விமர்சன பார்வையைக் கொண்டவர்களும்கூட. ஆனால் ஒரு காலகட்டத்தில் உருவாகிறப் போக்குகளைக் கவனித்து, தொடர் கட்டுரைகளை வெளியிடுவது என்பது மிகவும் சாதாரணமான ஒரு இதழியல் பணி. இதழியல் அறமும்கூட. தமிழ்த்தேசியம் பற்றி அல்லாமல், தமிழ்நாட்டில் இந்துவத்துவத்தின் வளர்ச்சி என்று நாலு கட்டுரைகளை பிபிசி தமிழ் இதழாளர்கள் வெளியிட்டிருந்தால், நம்ம நாஜி சார் லண்டனுக்கு போஸ்ட்கார்டு போடுவாரா?
நம்மைப் பொறுத்தவரை, ஒரு நூற்றாண்டுகால விழிப்புணர்வினூடக உருவான தமிழ் மறுமலர்ச்சி யுகத்தின் குழந்தைகள் இந்தப் பத்திரிகையாளர்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்காக நிற்கவேண்டும்.
தமிழ் ஊடகவியலர்களுக்கு நாம் உறுதுணையாக இருந்தாகவேண்டும். தமிழ்ச்சமூகம் தன் பிள்ளைகளுக்காக எழுந்து நிற்கவேண்டும்.
எத்தகைய பகைமைச்சூழலில் அல்லது எத்தகைய பாசிச அபாயமுள்ள காலகட்டத்தில் இவர்கள் தங்கள் கடமைகளை ஆற்றிவருகிறார்கள் என்பதை நாம் அறியவேண்டும்.
நான் நன்கு அறிவேன்.
குறைகள் பல இருந்தாலும், இது குறைகாணும் நேரமல்ல. கல் வீச்சை விட சொல் வீச்சு பெரிது. இது உரிமை கொல்லப்படும் நேரம். அச்சுறுத்தல் காலம். நமது ஜனநாயக வெளிகள் ஒவ்வொன்றாக மறைந்துவரும் வேளையில், இந்த ஊடகவியலர்களுக்கான உரிமை, வேலைப்பாதுகாப்பு ஆகியவற்றுக்காக மட்டுமின்றி. நமக்கான ஊடகவெளிக்காவும், ஊடகங்களின் நமக்கு கிடைத்தாக வேண்டிய சுதந்திரத்துக்காகவும் நாம் இவர்களோடு கைகோர்த்து நிற்கவேண்டும்."
#SaveTamilJournos
- ஆழி செந்தில்நாதன்
ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சித் தமிழகம்"

கருத்துகள் இல்லை: