புதன், 25 ஏப்ரல், 2018

நடிகைகளின் சம்மதத்தோடுதான் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன ... பாலிவுட் பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான்

திரையுலகில் பாலியல் கொடுமை: மீண்டும் சர்ச்சை!மின்னம்பலம் :திரைத் துறையில் நடைபெறும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே கூறிவருகின்றனர். எனவே இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவுக் குரல்கள் அதிகரிப்பதும் தவறான செயல்களில் ஈடுபடுவோர் மக்கள் முன் அம்பலப்பட்டுவருவதும் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் திரைத் துறையில் நடிகைகளின் சம்மதத்தோடுதான் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான் தெரிவித்துள்ளார். 2000 பாடல்களுக்கும் மேலாக நடன இயக்கம் செய்துள்ள சரோஜ், மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 69 வயதான சரோஜ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்தக் கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அனைத்து இடங்களிலும் பாலியல் கொடுமைகள் நடைபெறுவதால் திரைத் துறையைக் குற்றம் சாட்ட வேண்டாம் எனக் கூறியுள்ளார். “ஆதாம் காலத்திலிருந்து இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. இது புதிதல்ல. பெண்களை தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தத்தான் செய்வார்கள். பாலிவுட்டில் அவ்வாறு நடைபெறுவது நூற்றாண்டைக் கடந்த வழக்கம். பாலிவுட்டில் மட்டும்தான் அத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கூறுவது ஏற்புடையது அல்ல. அரசு அதிகாரிகளே பாலியல் வற்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார்கள். ஆனால் நாம் ஏன் சினிமா துறையையே குறை கூறிக்கொண்டிருக்கிறோம்?” என்று கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு பாதிப்புக்குள்ளாகும் நடிகைகளையே காரணமாகக் குறிப்பிடுகிறார். “பாலிவுட்டில் நடிகைகளின் ஒப்புதலுடன்தான் அத்தகைய பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறதே. பாலிவுட்டில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுவதில்லையே? எல்லாமே ஒரு பெண்ணைப் பொறுத்ததுதான். தவறானவர்களின் கைகளில் சிக்கக் கூடாது என ஒரு பெண் விரும்பினால் அவள் அத்தகைய நிலைமைக்கு ஆளாக மாட்டாள். திறமையிருந்தால் ஏன் ஒரு பெண் அவளை விற்க வேண்டும்? சினிமாத் துறையைக் குற்றம் சொல்ல வேண்டாம். எல்லாமே நம் கைகளில்தான் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
சரோஜின் இந்தக் கருத்துக்கு உடனடியாக எதிர்ப்புகள் வரத் தொடங்கின. திரைத் துறையைச் சார்ந்த பலரும் இதற்கு மறுவினை ஆற்றிவருகின்றனர். இந்நிலையில் சரோஜ் கான் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மீண்டும் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் “எனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏன் இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: