வியாழன், 26 ஏப்ரல், 2018

சென்னை ஐஐடிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.. இடஒதுக்கீடு பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை

Chinniah Kasi : சென்னை ஐஐடிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை ! சென்னை, ஏப். 24- பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டு முறையை பின் பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐஐடி நிர்வாகத்தை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.சென்னை ஐஐடியின் இயக்குநராக ராமமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஐஐடியின் முன்னாள் போராசிரியரான முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்த அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு செவ்வாயன்று (ஏப்ரல் 24) நீதிபதி `ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஐ.ஐ.டி. பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெற்ற நியமனத்தில் நடந்துள்ள மோசடிகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதேபோல, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், மேற் கொண்டுள்ள பணி நியமனத்தை ரத்து செய்யவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, இடஒதுக் கீட்டு முறையை பின்பற்றாமல் பணி நியமனங்கள் மேற்கொள் ளப்பட்டிருந்தால், ஐ.ஐ.டி. அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் ஐஐடியின் பணி நியமனங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டு விசாரணை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை: