பூர்வீகம்
தமிழகத்திலுள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நங்காபுரம் அகராபுரம் பகுதிதான் ரங்காச்சாரியின் பூர்வீகம். அவர் மைசூர் சமஸ்தான மருத்துவராகப் பணிபுரிந்தவர். இவரது மனைவியின் பெயர் கமலாம்பாள். இந்த தம்பதியின் மூத்த மகள் ஜெயலஷ்மி, இரண்டாவது மகள் ஜெயசீதா, மூன்றாவதாகப் பிறந்த மகன் ஜெயராமன். ஜெயராமனுக்கும் மைசூர் அருகிலுள்ள நரசிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயம்மாளுக்கும் 1935, மார்ச்சில் திருமணமானது. அதே ஆண்டு இறுதியில் ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான், வாசுதேவன்.
இதற்கிடையில் 1937-ல் வேலை விவகாரமாக பெங்களூரு சென்ற ஜெயராமன், தனது தூரத்து உறவினரான கமலாம்மா என்பவரின் மகளான வேதம்மாளுடன் திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழத் தொடங்கியிருக்கிறார். அதேசமயம் ஜெயராமனின் முதல் மனைவி ஜெயம்மாள் குழந்தையுடன் தனது தாய்வீடு திரும்பிவிடுகிறார்.
மர்ம மரணம்
ஜெயராமன்- வேதம்மா தம்பதிக்கு ஆதரவாக, ஜெயராமனின் இரண்டாவது அக்கா ஜெயசீதாவும் அவரது கணவரும் இருந்துள்ளனர். ஆனால் வேதம்மா தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க முயற்சி செய்து, பல ஆண்களுடன் நட்பு பாராட்டியது பிடிக்காமல், தன் முதல் மனைவியிடமே திரும்பினார் ஜெயராமன்.
இதற்கிடையில்தான் 5-11-1951 அன்று நள்ளிரவு காரில் பெங்களூருலிருந்து மைசூர் திரும்பிய ஜெயராமன், லட்சுமிபுரத்திலுள்ள அவரது லலிதா விலாஸ் இல்லத்தில், படுக்கையறையில் இறந்துகிடந்தார். விஷயம் காவல்துறை வரைக்கும் போனது. முதல் மனைவி ஜெயம்மாளும் அவரது உறவினர்களும் அவர் குடித்த மதுவில் வைரத்தைப் பொடியாக்கித் தூவிக் கொடுத்ததால் ஜெயராமன் கொல்லப்பட்டதாக புகார் கொடுத்தனர். ஜெயராமனின் இரண்டாவது மனைவி வேதம்மாவின் தாய்மாமன் வகை உறவினர் வேணுகோபால் என்பவர் அன்றைக்கு போலீஸில் செல்வாக்குள்ள டி.எஸ்.பி.யாக இருந்தார். அதனால் ஜெயராமனின் வழக்கு தற்கொலை வழக்காகவே முடிவுக்கு வந்தது.
பைசலான சொத்துத் தகராறு
இதற்கு முன்பே ஜெயராமனின் முதல் மனைவி, அவரது பெயரிலிருந்த சொத்துக்களில் தனக்கும் தன் மகனுக்கும் உரிமை கேட்டு மைசூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் (1949-50). இந்த வழக்கில் ஜெயராமன், அவரது மனைவி வேதம்மா (எ) சந்தியா, இவர்களின் மகன் ஜெயக்குமார், மகள் ஜெயலலிதா எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.
பின்னர் டிஐ.ஜி. வேணுகோபால் தலையீட்டில், மைசூர் சரஸ்வதிபுரம் மூன்றாவது கிராசிலிருந்த ஜெயவிலாஸ் என்ற பங்களா ஜெயக்குமாருக்கும், லட்சுமிபுரம் ரோட்டிலிருந்த ஜெயவிலாஸ் என்ற பங்களா ஜெயலலிதாவுக்கும், சரஸ்வதிபுரத்திலிருந்த மற்றொரு பங்களா முதல் மனைவி மகன் வாசுதேவனுக்கும் கொடுப்பதென பெரியவர்கள் பேசிமுடித்து பைசல் செய்தனர்.
இதற்கிடையில் விமான பணிப்பெண்ணாக இருந்த வேதம்மாவின் தங்கை அம்புஜா (எ) சௌந்தரவல்லி, மும்பையில் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு, பின் அவரை கைவிட்டுவிட்டு பெங்களூரு வந்தார். விமான பயணத்தின்போது லலிதா, ராகினி, பத்மினி போன்ற திரைப்பட நடிகைகளுடன் அறிமுகத்தை சம்பாதித்துக்கொண்டு, திரைப்பட வாய்ப்பு கேட்டு சென்னை போனார். கூடவே வேதம்மாவும் சென்னைக்கு வந்தார்.
ஒரு நடிகையின் கதை
ஜெயராமனின் முதல் மனைவி மகன் வாசுதேவன். வாசுதேவனின் மனைவி வேதவல்லி. அவர்களுக்கு வேணுகோபாலன் என ஒரு மகன். 1991-ல் 18 வயதிலேயே விபத்தொன்றில் வேணுகோபால் இறந்துவிட்டார். ஜெயராமனின் முதல் மனைவியும் வாசுதேவனின் அம்மாவுமான ஜெயம்மாள் 1995-ல் இறந்துபோகிறார்.
மைசூர் மாவட்டம், திருமுக்கூடல் நரசிபுரம் வட்டத்திலுள்ள ஸ்ரீரங்கராஜபுரத்திலிருக்கும் வாசுதேவனை மிகுந்த முயற்சிக்குப் பின் சந்தித்தோம்.
""ஜெ. எனது தங்கை என்பது சிவாஜி உள்ளிட்ட பெரிய நடிகர்களுக்குத் தெரியும். ஆனால், என் அப்பா மரணம் தொடர்பாக சந்தியா மீது இருந்த கோபத்தால் ஜெ.விடம் அறிமுகமாகிப் பேசுவதைத் தவிர்த்தோம். 2001-க்குப் பிறகு நக்கீரன் உள்பட பல இதழ்களில் என்னைப் பற்றிய செய்திகள் வந்தன. 2014-ல் கன்னடபிரபா செய்தித்தாளில், ஜெயலலிதாவின் தாய் சந்தியாவுக்கு இரண்டாவது குழந்தை ஒன்று உண்டு என்றும், அதன் பெயர் ஷைலஜா என்றும் செய்தி வந்தது. இதையடுத்து நான் ஷைலஜாவைத் தொடர்புகொண்டேன். அவரும் என்னைத் தொடர்புகொள்ள முயற்சி செய்திருக்கிறார்.. நான் பேசிய அன்றே மாலை, என்னைப் பார்க்க ஷைலஜாவும் அவரது மகள் அம்ருதாவும் வந்தனர்.
என் அப்பா சாகும்போது சந்தியா வயிற்றில் மூன்று மாத கருவாக இருந்த ஷைலஜா, பிறந்தபிறகு, சினிமா துறையைச் சேர்ந்த தாமோதரன் பிள்ளை என்பவரிடம் கொடுத்து வளர்த்தாகவும், ஆந்திராவைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவருக்கு ஷைலஜாவை திருமணம்செய்து வைத்ததாகவும், அவர்களின் குழந்தைதான் அம்ருதா என்று சொன்னார்கள்.
37 வயதாகும் அம்ருதாவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. அவரது கணவர் அமெரிக்காவில் உள்ளார் என தெரியவந்தது. முகஜாடையும், உறவினர்கள் சொன்ன தகவல்களின் அடிப்படையிலும் ஷைலஜா சந்தியாவின் மகளாக இருக்கலாமென்ற நம்பிக்கை வந்தது. அதன்பின் அடிக்கடி என்னோடு பேசினார்கள். எனக்குக் கொஞ்சம் பணஉதவியும் செய்தனர்.
ஜெயலலிதா இறந்தபிறகு கடந்த மார்ச் மாதம் என்னை பெங்களூருக்கு அழைத்துக்கொண்டு சென்றனர். அப்போது என் தாத்தாவழி உறவினர்களான ரவீந்திரநாத் மற்றும் அவரது மனைவி ரஞ்சனிநாத் ஆகியோரிடம் ஷைலஜாவையும் அம்ருதாவையும் அறிமுகம் செய்து வைத்தேன். இப்போது அம்ருதா, ரஞ்சனிநாத் இருவருமே என்னைத் தொடர்புகொள்வதில்லை. நான் கூப்பிட்டாலும் ராங்நம்பர் என்று சொல்லிவிடுகிறார்கள்.
எங்களது இரண்டாவது அத்தை ஜெயசீதாவின் கணவர் சம்பத்துக்கு சுசீலா என்று ஒரு குழந்தை இருந்தது. அவரும் இறந்துவிட்டார். இப்போது, ஜெ.வுக்கு பிரசவம் நடந்தது உண்மை என்று சொல்லும் லலிதா என்பவரும் ஜெயசீதாவின் மகள் என்கிறார். இதிலும் எந்த அளவுக்கு உண்மையுள்ளது என்பது தெரியவில்லை'' என்று உறவுமுறைகளை விளக்கமாகச் சொன்னார் வாசுதேவன்.
அம்ருதா ஜெ. மகளா?
டி.என்.ஏ.வைப் பரிசோதனை செய்து தன்னை ஜெ.வின் மகளென அறிவிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் அம்ருதா தாக்கல் செய்த மனுவில், As per the birth certificate issued by registrar of births and deaths in Bangalore my date of birth is 14-8-1980. My place of birth is Vanivilas Hospital. My mother name is shylaja. My father's name is Sarathy… என நீள்கிறது. அதாவது தனது பிறப்புச்சான்றிதழில் அப்பா பெயர் சாரதி, அம்மா பெயர் ஷைலஜா என்றும் தன் பெயர் மஞ்சுளா என்கிற அம்ருதா என பதிவாகியிருப்பதையும், தான் பிறந்தது பெங்களூரு வாணிவிலாஸ் மருத்துவமனை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் அபிடவிட்டில் அம்ருதா சுட்டிக்காட்டுகிறார். பெங்களூருவில் ஜெ.வுக்கு பிரசவம் நடந்ததாக அவரது உறவினர் லலிதா சொல்லவில்லை. சென்னை மயிலாப்பூரில் நடந்ததாக பேட்டி அளித்துவருகிறார்.
லலிதாவும், ரஞ்சனி ரவீந்திரநாத்தும் ஜெ.வுக்கு நான் பிறந்தசமயத்தில் குழந்தையா பார்த்திருக்காங்க. இது ரகசியம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதால் யார்கிட்டயும் சொல்லாம மறைச்சுட்டாங்க’ என அபிடவிட்டில் தெரிவிக்கப்படுகிறது.
அம்ருதா சார்பில் வழக்குத் தொடர்ந்திருக்கும் வழக்கறிஞர்கள் துரைராஜ், வெங்கடேஷ் ஆகியோரை பெங்களூரு வரை தேடிச் சென்றும் பேசவில்லை. அவர்களுடன் இருந்த மற்ற வழக்கறிஞர்களை தனியாகச் சந்தித்துப் பேசினோம். “"1980-ல பெங்களூரு வாணிவிலாஸ் மருத்துவமனையில பிறந்த மஞ்சுளா எப்படி மயிலாப்பூர் போனாங்க. மஞ்சுளா பிறந்தது மயிலாப்பூரிலா? பெங்களூருவிலா? பெங்களூருவுல இருக்கிற ஜெ. பெரியம்மா எப்படி மயிலாப்பூர்ல வந்து பிரசவம் பார்த்தார், மஞ்சுளாங்கிற தன் பெயர் சைவ மரபுப்படி இருக்குனு சொல்லி, 26-4-2010 அன்று வைஷ்ணவ மரபுப்படி அம்ருதா மாத்தினாங்க, பேர் மாத்தினவங்க, அந்த சான்றிதழ்ல தன்னோட அப்பா- அம்மா பெயரை ஷோபன்பாபு- ஜெயலலிதானு மாத்தலையா?' என அவர்களிடம் நம் கேள்விகளை முன்வைத்தோம். முதலில் தயங்கியவர்கள், பிறகு உண்மைகளைக் கொட்ட ஆரம்பித்தார்கள்.
""அம்ருதா சொல்லும் பொய்கள் ஒன்றிரண்டு இல்லை'' என அடுக்க ஆரம்பித்தார்கள். ""அம்ருதா ஷைலஜா- சாரதி தம்பதியோட மகள்தான். பெங்களூருவில்தான் பிறந்தார். ஜெ. உயிரோட இருக்கும்போதே, அம்ருதா நிறைய பொய் சொல்வார். இரண்டு கண்டெய்னர்ல 500, 1000 ரூபாய் நோட்டுக்களா பல ஆயிரம் கோடி அனுப்பிவெச்சாங்க. இதை சசிகலா கும்பல் தெரிஞ்சுக்கிட்டு கண்டெய்னர்களை வழிமறிச்சாங்க. அதுக்காக துப்பாக்கிச் சூடு நடந்தது. அதுல இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டாங்கனு அம்ருதா சொல்வாங்க.
இன்னொரு சமயம் தன்னோட கிங்கேரி கிராமத்துக்கு திடீர்னு புர்கா போட்டுக்கிட்டு நைட் 12 மணிக்கு ஜெ. வந்தாங்க. அப்போ எங்க வீட்டுல இருந்த கொஞ்சூண்டு பாலை குடிச்சுட்டுப் போனாங்கன்னு சொல்லுவாங்க. இவ்வளவு ஏன் சுப்ரீம் கோர்ட்ல கொடுத்துருக்கிற அபிடவிட்லயே, ஜெ. அமெரிக்காவுக்கு சிகிச்சை எடுத்துக்கப் போனதா சொல்லியிருக்காங்க. அதுபோல ஷைலஜா அடிக்கடி போயஸ் கார்டன் போய்வந்ததா சொல்வாங்க.
ஒருமுறை அம்ருதா போயஸ்கார்டன் வந்தப்ப, ஜெ.வோட வளர்ப்பு மகன் சுதாகரன் அவர்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ண முயற்சி பண்ணதாகூட சொல்லியிருக்காங்க. ஜெ. அண்ணன் மகன் தீபக், அம்ருதா பேரைச் சொல்லி நிறைய காசுவாங்கினதாவும், அதுமூலம் அமெரிக்காவுல பெரிய ஹோட்டல் வாங்கியிருக்கிறதாவும் அபிடவிட்லயும், வெளியிலயும் நிறைய பொய் சொல்லியிருக்காங்க.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு நடந்துக்கிட்டிருந்த சமயம், ஜான் மைக்கேல் டி குன்கா கோர்ட்ல பெஞ்ச் கிளார்க்கா வேலை பார்த்துக்கிட்டிருந்த பிச்சமுத்துவைத் தேடிப் போனாங்க. சென்னை ஜி.ஆர்.டி. நகைக்கடையில ஜெ. தங்க, வைர நகைகளை வாங்குறது வழக்கம். அதுல ஒரு வைர நகை மஞ்சுளாங்கிற பேர்ல வாங்கியிருக்காங்களானு கன்ஃபர்ம் பண்ணச் சொன்னாங்க. அதேபோல பெங்களூரு பக்கத்துல 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை, சொத்துக்குவிப்பு வழக்குக்குப் பயந்து, அந்த நிலத்துல குடியிருக்கிற பலரோட பேருக்கு மாத்திக் கொடுத்தாங்கன்ற சந்தேகத்துல, அந்த சொத்தை பத்தியும் தெரிஞ்சுக்க லாயர் துரைராஜோட துணையோட பிச்சமுத்தை தேடிப்போனாங்க. அப்புறம்தான் கடைசியா நான் ஜெ. மகள்னு வேஷம் போட்டுக்கிட்டு சுப்ரீம்கோர்ட்ல போய் மனுத்தாக்கல் பண்ணுனாங்க.
இந்த அம்ருதாவுக்கு ஏற்கெனவே பிரகாஷுங்கிறவரோட திருமணம் நடந்துருச்சு. அந்த திருமணத்தை ஜெ. எதிர்த்ததாகூட அம்ருதா சொல்லிக்கிட்டிருந்தாங்க. இப்ப அந்த பிரகாஷ் அவங்ககூட இல்லை'' என அடுக்கிக்கொண்டே சென்றனர்.
வைரநகை, 5000 கோடி சொத்து விவகாரம் தொடர்பாக அம்ருதா அணுகினாரா எனத் தெரிந்துகொள்ள குன்கா கோர்ட் பெஞ்ச் கிளார்க்காய் இருந்த பிச்சமுத்துவைச் சந்தித்தோம். ""இரண்டு மூன்று முறை வந்து என்னைப் பார்த்தார். அப்படியெல்லாம் நகையோ, சொத்தோ இல்லைனு சொல்லி அனுப்பிட்டேன்'' என மஞ்சுளா தன்னை அணுகியதை கன்ஃபர்ம் செய்தார் பிச்சமுத்து.
இது வேற மாதிரி
அம்ருதாதான் ஜெயலலிதாவின் மகள் என துரைராஜ் தாக்கல் செய்த சுப்ரீம் கோர்ட் அபிடவிட்டில் கையெழுத்துப் போட்டவர் ரஞ்சனி ரவீந்திரநாத். வில்லேஹள்ளி கிராமத்தில் மண்ணீருகெட்டா பகுதியில் மந்திரி டெரஸ் என்ற பெயருடன் அவரது வீடு இருந்தது. அவரது வீட்டை அணுக முயற்சித்தபோது, செக்யூரிட்டி அணுகவேவிடாமல் துரத்தினார். அவரது செல்போன் எண்ணான 99164 02755-ல் தொடர்புகொண்டபோதும் அவரைப் பிடிக்கமுடியவில்லை.
அடுத்தகட்டமாக ஜெ.வுக்கு பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வந்ததாகக் கூறும் எல்.எஸ். லலிதாவைத் தேடி பசவணக்குடிக்குச் சென்று சந்தித்தோம். ""எங்கம்மா பேர் ஜெயசீதா. எனக்கும் ஜெ.வுக்கும் 2 வயதுதான் வித்தியாசம். ஜெ.வோட அம்மா போக்கு பிடிக்காம ஜெயராமன் இறந்துபோனாரு. அந்தக் கோபத்துல எங்க குடும்பம், அவங்க குடும்பத்தோட எந்தத் தொடர்பையும் வெச்சுக்கல. ஜெயராமன் இறந்தபிறகு சந்தியா கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸோட தம்பி கெம்புராஜ் அர்ஸோட கோயிங் ஸ்டெடில இருந்தாங்க. சந்தியாவுக்கும் செம்புராஜுக்கும் பிறந்தவங்கதான் ஷைலஜா. 1976-ல சந்தியா இறந்துட்டாங்க. 1980-ல மயிலாப்பூர்ல என்னோட பெரியம்மா ஜெயலட்சுமியம்மா, ஜெ.வுக்கு பிரசவம் பார்க்க ஒரு குழந்தை பிறந்துச்சு. அந்தக் குழந்தையைப் போய் நான் பார்த்துட்டு வந்தேன்.
ஷைலஜாகிட்ட அம்ருதாதான் ஜெ. மகள்னு சில மாசத்துக்கு முன்னாடி ரஞ்சனி ரவீந்திரநாத் வந்து சொன்னாங்க. அவங்களாலதான் இப்ப கேஸும் போடப்பட்டிருக்குது. நான் ரஞ்சனி ரவீந்திரநாத் கூட போய் அபிடவிட் கொடுத்துட்டு வந்தேன். வழக்கறிஞர் துரைராஜ்தான் அந்த அபிடவிட்ட தயார் பண்ணார்.
நான் ஜெயலலிதாவை குழந்தை பிறந்தப்பவும், 1980-க்குப் பின்னால ஒரு கல்யாணத்துலயும்தான் பார்த்தேன். ஜெ.வோட பூர்விகம் ஸ்ரீரங்கம் கிடையாது. எங்க எல்லாரோட பூர்விகம் மைசூர்தான். ஜெயலலிதா, ஷைலஜா வீட்டுக்கு வந்ததா ரஞ்சனிதான் எனக்குச் சொன்னா, நான் பார்த்ததில்லை. ஷைலஜாவோட பொண்ணுதான் அம்ருதான்னு நாங்க நம்பிட்டிருந்தோம். அம்ருதா தவிர ஷைலஜாவுக்கு ஒரு வளர்ப்பு மகனும் உண்டு. இப்போ ஜெ. மகள் அம்ருதான்னு செய்தி வந்தப்புறம் ரஞ்சனி ரவீந்திரநாத் என்கிட்ட பேசறதையே தவிர்த்துட்டார்'' என்றார்.
ஜெ. தரப்பு உறவினர்கள் பலரிடமும் விசாரித்ததில், ஜெ.வுக்குப் பிறந்தவர் அம்ருதா அல்ல என்று சொல்பவர்களே அதிகம். அம்ருதாதான் ஜெ. மகளா என உறுதி செய்யமுடியவில்லை என்கிறார்கள் மற்றவர்கள். ஜெ. இணைந்து வாழ்ந்த ஷோபன் பாபு குடும்பத்திடம் விசாரிக்கலாம் என அவரது மகன் கருணாசேஷனைத் தேடிப்பிடித்து தொடர்புகொண்டோம். புகைப்படக் கலைஞரான அவர், ""எங்கப்பாவுக்கும் ஜெ.வுக்கும் குழந்தை பிறந்ததா அப்பப்ப செய்திகள் வந்துக்கிட்டுதான் இருக்கு. ரொம்ப நாள் முன்னால ஆண் குழந்தை பிறந்ததா செய்தி வந்தது. இப்ப பெண் குழந்தை இருக்கிறதா செய்தி வருது. அவருக்கு அப்படி ஏதும் குழந்தையிருந்திருந்தா எங்களுக்குத் தெரியவந்திருக்கும். எனக்குத் தெரிந்தவரை எங்க குடும்பத்தைத் தவிர, யாருக்கும் அப்பா மூலமா குழந்தை பிறக்கலை. அதனால இந்தச் செய்திகளை நினைச்சுக் கவலைப்படலை'' என்றார் நிதானமாய்.
அம்ருதாவின் தரப்பையறிய அவரது வீட்டுக்குப் போனோம். வீட்டில் அவர் இல்லை என்றார்கள். செல்போனில் தொடர்புகொண்டோம். ஸ்விட்ச் ஆப் என்றது. பெங்களூருவில் நட்சத்திர ஓட்டலில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அம்ருதா, அதன்பின் சென்னைக்கு கிளம்பி, பாதுகாப்பாகவும் வெளித் தொடர்புகளை தவிர்த்தபடியும் இருக்கிறார்'' என்கிறார்கள் ஜெ. உறவினர்கள்.
மரணமடைந்து ஓராண்டு கடந்தும் ஜெ.வைச் சுற்றும் மர்மங்கள் ஓயவில்லை.
-தாமோதரன்பிரகாஷ், பெ.சிவசுப்ரமணியம், ஜெ.பி.
படங்கள்-ஸ்டாலின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக