சனி, 9 டிசம்பர், 2017

கபாலீஸ்வரருக்கு 7.5 கிலோ தங்க நாகாபரணம்: காஞ்சி சங்கராச்சாரியார்கள் தானம்

tamilthehindu :சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மூலவர் கபாலீஸ்வரருக்கு 7.5 கிலோ எடையுள்ள தங்க நாகாபரணத்தை காஞ்சி சங்கராச்சாரியார்கள் நேற்று சமர்ப்பித்தனர்.
சென்னையில் உள்ள பழமை யான கோயில்களில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலும் ஒன்று. இது திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர்களால் பாடப்பெற்ற திருத்தலமாகும். இந்த கோயில் 63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் மனதால் பூஜித்து முக்தி அடைந்த பெருமை கொண்டது. ரூ.2.75 கோடி மதிப்பில் இங்கு எழுத்தருளியுள்ள கபாலீஸ்வரருக்கு ரூ.2.75 கோடி மதிப்புள்ள 7.5 கிலோ எடை கொண்ட தங்க நாகாபரணம் சமர்ப்பிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்காக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகிய இருவரும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு நேற்று காலை வருகை புரிந்தனர். அவர்களுக்கு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

பஞ்சகவ்ய பூஜை

இதையடுத்து, கோயிலின் அலங்கார மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க நாகாபரணத்துக்கு காஞ்சி சங்கராச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். மேலும், விநாயகர் பூஜை மற்றும் புண்யாகவாசனம் பஞ்சகவ்ய பூஜை ஆகிய பூஜைகளும் நடத்தப்பட்டன. பின்னர், அந்த நாகாபரணம் மண்டபத்தில் இருந்து மூலவர் சன்னதிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்

மூலவர் சன்னதியில் கபாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சங்காராச்சாரியார்கள் தங்க நாகாபரணத்தை அணிவித்தனர். பின்னர், தீபாராதனை காட்டப்பட்டது.
மயிலாப்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நட்ராஜ் உட்பட பல்வேறு முக்கிய நபர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் விழாவுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயிலின் தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, அப்போலோ மருத்துவமனை குழும துணைத் தலைவர் பி.பிரீத்தா ரெட்டி மற்றும் உம்மிடி பங்காரு ஸ்ரீஹரி சன்ஸ் நிறுவனம் இணைந்து தங்க நாகாபரணத்தை கோயிலுக்கு கடந்த மாதம் காணிக்கை யாக வழங்கியது குறிப்பிடத் தக்கது

கருத்துகள் இல்லை: