திங்கள், 2 ஜனவரி, 2017

30வது நாள் காரியம் முடிந்ததும் சசிகலா முதல்வர் ஆகிறார் ! வசந்த சேனையின் ரவுண்டு ஆரம்பம்?

சசிகலா சொன்ன 30வது நாள் காரியம் என்பது ஜனவரி 4ஆம் தேதி முடிகிறது. அது முடிந்தபிறகு சசிகலா முதல்வராகப் பதவியேற்க வாய்ப்பிருக்கிறது. நாம் ஏற்கனவே சொன்னபடி, ஜனவர் 12ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்று, ஜனவரி 14ஆம் தேதி பொங்கலுக்கு முதல்வர் வி.கே.சசிகலா வாழ்த்துச் சொல்வார். அதற்கான ஏற்பாடுகள்,,,,?
‘‘புத்தாண்டில் எப்படியாவது சசிகலாவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என அதிமுக-வினர் போயஸ் கார்டன் பகுதியில் ஏராளமாகக் குவிந்திருந்தனர். அதேபோல அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் கூட அதற்கான ஏற்பாடுகளுடன் தயாராக இருந்தனர். போயஸ் கார்டனில் இருந்து அமைச்சர்களுக்கு போன் வந்திருக்கிறது. ‘அம்மா இறந்து இன்னும் 30 நாட்கள் கூட முடியல. இந்த நேரத்துல புத்தாண்டு கொண்டாடுவதோ, வாழ்த்துச் சொல்வதோ சரியாக இருக்காது. யாரும் கார்டனுக்கு வர வேண்டாம். வாழ்த்தும் சொல்ல வேண்டாம்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். இந்த தகவல் அனைத்து நிர்வாகிகளுக்குமே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் காலையில் போயஸ் கார்டன் பகுதியில் கூட்டம் இருந்தாலும், சசிகலா யாரையும் சந்திக்கவில்லை என்ற தகவல் அவர்களுக்கும் பரவிய பிறகு அந்தப் பகுதி முழுக்கவே வெறிச்சோடிக் கிடந்தது.

ஜெயலலிதா இருந்தவரை அவருக்கு முதல் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது சசிகலாதான். அதேபோல சசிகலாவுக்கு ஜெயலலிதா வாழ்த்துச் சொல்வாராம். இது, ஜெயலலிதா இல்லாத புத்தாண்டு. நீண்டநேரம் ஜெயலலிதா போட்டோவைப் பார்த்தபடியே கார்டனில் சசிகலா உட்கார்ந்திருந்தாராம். இளவரசி மட்டுமே இப்போது சசிகலாவுக்கு அருகே சென்று உரிமையோடும் அன்போடும் பேசும் நபராக இருக்கிறார். அவர்தான் சசிகலாவை ஆறுதல்படுத்தி அழைத்து வந்து சாப்பிடவைத்தார் என்று சொல்கிறார்கள் கார்டன் விவரமறிந்தவர்கள்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அடுத்த மெசேஜும், கார்டன் தொடர்புடையதாகவே இருந்தது. ‘‘கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பதுபற்றி சசிகலா தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அதேபோல, கட்சிக்குள் உள்கட்சிப் பூசலும் நிறைய இருப்பது சசிகலாவுக்குத் தெரியாமல் இல்லை. இதையெல்லாம் எப்படிச் சமாளிப்பது என யோசித்தவர், ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதாவது, அமைச்சரானவர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தால் இரண்டு பதவிகளில் ஒன்றைத் தருவது என்பதுதான் சசிகலா திட்டம். அதேபோல, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்ற ஐடியாவையும் யோசித்திருக்கிறாராம். எல்லாம் ஜனவரி 12ஆம் தேதிக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்கிறார்கள்!” என்பது அடுத்த மெசேஜ்.

அதே நேரத்தில் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸும் தயாராக இருந்தது. “அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை இன்று போயஸ் தோட்டத்தில் தம்பிதுரை சந்தித்துப் பேசினார். அப்போது, முதல்வராக சசிகலா பதவியேற்பது தொடர்பாக சில டிஸ்கசன் நடந்ததாகச் சொல்கிறார்கள். ‘30 நாள் காரியம் முடியாமல் எதுவும் செய்யக்கூடாது. அதன்பிறகு என்ன செய்யணுமோ அதைச் செய்யலாம். இதனால பன்னீருக்கு எதுவும் வருத்தம் இல்லையே?’என்று சசிகலா விசாரித்தாராம். அதற்கு தம்பிதுரை, ‘இல்லம்மா... நான் அவருகிட்ட பேசிட்டேன். அவருக்கு எந்த வருத்தமும் இல்ல. நீங்கதான் முதல்வராக இருக்கணும்னு அவரும் நினைக்கிறாரு. முதல்வராக இருந்துட்டு அடிக்கடி இங்கே வரவேண்டாம்னு அவரு நினைக்கிறாரு. மற்றபடி அவருக்கு முழுச் சம்மதம். இதுல தேவையில்லாம சிலர் குழப்பம் பண்றாங்க. அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்ல’ என்று சொல்லியிருக்கிறார் தம்பிதுரை. ‘எதுவும் சிக்கல் இல்லாமல் பாத்துக்கோங்க!’ என்று சசிகலா சொல்லி அனுப்பினாராம். அவர் தம்பிதுரையுடன் பேசும்போது மன்னார்குடி உறவுகள்கூட யாரும் அருகே இல்லையாம். அதன்பிறகு கார்டனிலிருந்து வெளியே வந்த தம்பிதுரை, ‘அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா, உடனடியாக தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தத்தான் வந்தேன். எனது விருப்பத்தை அவரிடம் சொல்லிட்டேன். அவரும் என் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக சொல்லியிருக்காரு. ஆட்சி ஒருவரிடமும், கட்சி ஒருவரிடமும் இருந்தால் பல சிக்கல்கள் வரும். அதை தவிர்க்கத்தான் இப்படி ஒரு கோரிக்கையை சின்னம்மாவிடம் வைத்திருக்கிறேன்’ என்று சொன்னார்.
‘சசிகலா சொன்ன 30வது நாள் காரியம் என்பது ஜனவரி 4ஆம் தேதி முடிகிறது. அது முடிந்தபிறகு சசிகலா முதல்வராகப் பதவியேற்க வாய்ப்பிருக்கிறது. நாம் ஏற்கனவே சொன்னபடி, ஜனவர் 12ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்று, ஜனவரி 14ஆம் தேதி பொங்கலுக்கு முதல்வர் வி.கே.சசிகலா வாழ்த்துச் சொல்வார். அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருவதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.” என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது. அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: