வெள்ளி, 17 ஜூன், 2016

இம்முறை புத்தக கண்காட்சி மக்களை கவர தவறிவிட்டது ? வசதிகள் போதாமை, அதிக வெப்பம்...

7 லட்சம் பேர் திரண்டனர் ; ரூ. 10 கோடி வியாபாரம் என்று பபாசி அறிவித்தாலும் , உண்மையில் மூன்றை லட்சம் பேரே திரண்டு இருக்கின்றனர். ரூ. 5 கோடி அளவில் வியாபாரம் ஆகி இருக்கிறது
இரா.தெ.முத்து :ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி பதிமூன்றாம் தேதி வரை நடைபெற்ற 39 ஆவது சென்னை புத்தகக் காட்சி முடிவடைந்திருக்கிறது. பொதுமக்களும் வாசகர்களும்தான் இதனை திருவிழாவாக கடந்த காலங்களில் மாற்றி இருக்கிறார்கள். திரண்டு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்துக் கொடுத்து பெரும் கொண்டாட்டமாக மாற்றத் தவறி இருக்கிறது தென்னிந்திய பதிப்பாளர்  விற்பனையாளர்கள் சங்கம் (BPASI)

கடந்த காலங்களில்  ஒரே தூசிப்படலமாகக் கண்காட்சி திறந்து கிடக்கும். குடிநீர் ஏற்பாடு இருக்காது. சரியான கழிவறைகள் இருக்காது. வாகன நிறுத்துமிடம் இருக்காது. உட்கார்ந்து போக இருக்கை ஏற்பாடு இருக்காது. இப்படியான பல இல்லாததுகள் குறித்து தொடர்ந்த புகார்கள் ; கண்டனங்கள் வந்த பிறகே , தரையில் பலகைப் பதித்து தரை விரிப்பு இட்டனர். குடிநீர் தரத் தொடங்கினர்.

உரை, பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் முன்னர் கிடையாது. 1985 வாக்கில் சிற்றரங்கு அமைத்து இவைகளை நடத்தினர். பொது நிகழ்வுகள் பிறகு வந்தன. குறும்படம் ,ஆவணப்படம் போன்றவைகளின் திரையிடல் 2005 வாக்கில் இக்கட்டுரையாளர் மற்றும் க.நாகராஜன், ஆர்.எஸ்.சண்முகம் போன்றோரின் முயற்சியில் தொடங்கப்பட்டது. கவிதை வாசிப்பு சமீப சில ஆண்டுகளில் தொடங்கப்பட்டு நொண்டியடித்து கிடக்கிறது.
ஜனவரி மாதத்தின் குளிர்காலம் கண்காட்சிக்கான பொருத்தமான காலமாக இருந்தது ; இனியும் இருக்கும். இந்தக் காலத்தேர்வும் பொதுமக்களின் தொடர்ந்த பங்கேற்பும்தான் 39 ஆண்டுகள் வரை கண்காட்சியை கொண்டு வந்திருக்கிறது. ஊடக வெளிச்சமெல்லாம் கடந்த பத்தாண்டுகளில்தான் சாத்தியமாகி இருக்கிறது.
தென்னிந்திய பதிப்பாளர் & விற்பனையாளர் சங்கத்திற்கு பொதுவான படைப்பூக்கம் சார்ந்த அணுகுமுறைகள் இல்லை. நூல்கள் விற்க வேண்டும் என்ற ஒரே நோக்கு மட்டும்தான் இருக்கிறது. திரளும் மக்களை வெறும் சந்தையாக பார்க்கிறார்களே ஒழிய , அவர்களின் தேவைகள் சார்ந்து இயங்கி விற்பனையை மாபெரும் கொண்டாட்ட நிகழ்வாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு இல்லை. சில தனிநபர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் , பபாசியின் சில நிர்வாகிகள் சார்ந்தே இந்த புது முயற்சிகள் சாத்தியமாகி இருக்கின்றன.
39 ஆவது ஆண்டு புத்தகக் காட்சி கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக இந்த ஜூனில் நடத்தப்பட்டு பெரும் கண்டனத்தை சந்தித்து இருக்கிறது. கோடையின் வெம்மையைக் கணக்கில் கொள்ளாமல் காற்றோட்டம் இல்லாது கண்காட்சியை அமைத்து விற்பனையில் பொதுமக்களின் பங்கேற்பில் சரிவைச் சந்திருக்கிறனர்.
7 லட்சம் பேர் திரண்டனர் ; ரூ. 10 கோடி வியாபாரம் என்று பபாசி அறிவித்தாலும் , உண்மையில் மூன்றை லட்சம் பேரே திரண்டு இருக்கின்றனர். ரூ. 5 கோடி அளவில் வியாபாரம் ஆகி இருக்கிறது.
இந்த முறை கடைகளின் வாடகை அதிகம். நாள் ஒன்றுக்கு பரிசல் போன்ற சிறு கடை ஒன்றிற்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் வாடகை. ஆனந்த விகடன் போன்ற பெரிய கடைகளுக்கு நாள் ஒன்றிற்கு ஆறாயிரம் ரூபாய் வாடகை வசூலித்து இருக்கின்றனர். இந்த முறை கடைகளின் எண்ணிக்கையும் குறைவு. 700 கடைகள்தான் அமைக்கப்பட்டு இருந்தன.
கோடை வெம்மை காரணமாக புழுக்க சிற்றரங்க நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. திறந்த வெளி நிகழ்வுகள் பெரும்பாலும் அறிவிற்கு ஏற்பில்லாத அரைத்த மாவை கொட்டிப் போயிருக்கின்றது.
புத்தக காட்சிக்கு பொருத்தமான காலம் ஜனவரி குளிர்காலம் தான்.விதிவிலக்காக ஜூனில் நடத்த வேண்டி வந்தால் நேரு ஸ்டேடியம் போன்ற குளிர்பதன அரங்கில் நடத்த வேண்டும். புதுடெல்லி ப்ரகதி மைதான் சர்வதேச புத்தகக் கண்காட்சி போல நடத்த முயல வேண்டும். சினிமா நிகழ்விற்கெல்லாம் நேரு ஸ்டேடியம் பயன்படும் பொழுது , அறிவைப் பெருக்கும் வணிகச்சந்தைக்கு அரசு உடன்படாதா என்ன?
மொழிக்கு நெருக்கமான படைப்பாளர்கள் , இலக்கிய அமைப்புகளின் கருத்துகளை பங்கேற்பை நாடிப் பெற வேண்டும். கண்காட்சி காலங்களில் இவர்களைக் கொண்ட வட்டமேசை கூட்டம் போட்டு  , பல முறைகளில் பொதுப்பங்கேற்பை திரட்ட, நிகழ்வுகளை முன்னெடுக்க முயல வேண்டும்.
இரா.தெ.முத்துஎழுத்தாளர் & பண்பாட்டுச் செயற்பாட்டாளர். மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க துணைப் பொதுச் செயலாளராகவும் புத்தகம் பேசுது இதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார். இவருடைய நூல்கள் மாநகர மனிதன் , பேசாப் பொருளை பேசிய பாரதி    thetimestamil.com

கருத்துகள் இல்லை: