வியாழன், 16 ஜூன், 2016

மதிமுக மணிமாறன் 3000 தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தார்.... மதிமுக சுயநல கூடாரமாகிவிட்டது! அதிரடி குற்றச்சாட்டு .

மதிமுக-வில் தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர் வேளச்சேரி மணிமாறன். வைகோ-வுக்கு மிகமிக நெருக்கமான இடத்தில், முக்கிய இடத்தில் இருந்தவர் மணிமாறன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுக்கு, எடைக்கு எடை வெள்ளிக் கட்டி, தங்கப் பேனா, தங்க வாள் போன்ற விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி, அவரது தீவிர ஆதரவு மாவட்டச் செயலாளராக வலம்வந்தவர். தனித்த செல்வாக்கானவர். செலவு செய்ய அஞ்சாதவர்.
மல்லை சத்யா, வைகோ-வின் வலதுகரம் என்றால் மணிமாறன், இடதுகரமாகத் திகழ்ந்தவர்.
இந்தளவு வைகோ-வுடன் நெருக்கமாக இருந்த வேளச்சேரி மணிமாறன் நேற்று ஜுன் 15ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மூவாயிரம் பேருடன் திமுக-வில் இணைந்தார்.
‘மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதை மணிமாறன் விரும்பவில்லை. இதனால் மதிமுக-வில் தனது செயல்பாடுகளை அவர் சுருக்கிக் கொண்டார். வேளச்சேரி தொகுதியில் மணிமாறனை போட்டியிடுமாறு வைகோ கூறியபோதும் அதை ஏற்கவில்லை. செலவு செய்தும் வெற்றிபெற முடியாது என அப்போதே வைகோ-விடம் தெரிவித்திருந்தார். வைகோ-வின் போக்கு சரியில்லை என்று சக நிர்வாகிகளுடன் பகிர்ந்து வந்தவர் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கத் தொடங்கினார். இந்நிலையில், மே 15ம் தேதி கட்சியை விட்டு விலகுவதாக வைகோ-வுக்கு கடிதம் அனுப்பிய மணிமாறன், சரியாக ஒரு மாதம் கழித்து திமுக-வுடன் இணைந்துவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘மதிமுக பெரியார், அண்ணா கொள்கைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் உருவானது. ஆனால், அந்தக் கொள்கைகளை என்றோ வைகோ கைவிட்டுவிட்டார். சுயநலவாதிகள் நிறைந்த கட்சியாக மதிமுக மாறிவிட்டது. திமுகவை அழிப்பதற்காகவே கட்சி நடத்துகிறார் வைகோ. எந்த நோக்கத்துக்காக கட்சி தொடங்கினாரோ அதிலிருந்து விலகிவிட்டார் வைகோ. திமுகவை அழிக்க வேண்டும், குறிப்பாக ஸ்டாலின் எந்த ஒரு பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில்தான் வைகோ உறுதியாக உள்ளார்’ என்றார். மேலும் தொடர்ந்து பேசியவர், ‘எனவே நான் திமுக-வில் இணைந்துவிட்டேன். இனி, திமுக-வின் வெற்றிக்காகப் பாடுபடுவேன். மு.க.ஸ்டாலினுக்காக, திமுக-வுக்காக எந்தத் தியாகத்தையும் இனி செய்வேன்’ என்றார் வேளச்சேரி மணிமாறன்.

கருத்துகள் இல்லை: