திங்கள், 9 நவம்பர், 2015

நிதீஷ்குமார்: எங்கள் வெற்றியை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடுகின்றனர்..தேசிய அளவில் மாற்று சக்தி....

பாட்னா: ‘‘பீகார் தேர்தல்
முடிவானது, தேசிய அளவிலான மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. பலமிக்க மாற்று சக்தி உருவாக வேண்டுமென மக்கள் விரும்புவதை காட்டுகிறது’’ என ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் கூறினார். பீகாரில் மெகா கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: பீகார் தேர்தல் முடிவு, தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது. இது, தேர்தலில் ஒரு புதிய மைல்கல்லாகும். ஒரு தீர்க்கமான முடிவை அளித்த பீகார் மக்களுக்கு நன்றி.
எங்கள் வெற்றியை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடுகின்றனர். நாடு முழுவதும் இந்த தேர்தல் முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய அளவில் பலமிக்க மாற்று சக்தி உருவாக வேண்டுமென மக்கள் விரும்புவதை இது காட்டியுள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.


வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆவேச பிரசாரம் மேற்கொண்டது. இதை மக்கள் புறக்கணித்துள்ளனர். அனைத்து சமூக மக்களின் ஆதரவு இல்லாமல் இந்த வெற்றியானது சாத்தியமில்லை. கூட்டணி கட்சிகள் அனைத்து ஒற்றுமையுடன் இருந்ததால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம். எங்களுக்கு யார் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எதிர்க்கட்சிகளுடன் இணைந்தே செயல்பட விரும்புகிறோம்.

மெகா கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு புதிய அரசு அமைப்போம். தேர்தல் வாக்குறுதியில் கூறியது படி, வளர்ச்சிக்கே இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். அவருடன், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவும், காங்கிரசின் பீகார் மாநில தலைவர் அசோக் சவுத்ரியும், நிதிஷின் பத்திரிகை ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் உடன் இருந்தனர்

கருத்துகள் இல்லை: