புதன், 11 நவம்பர், 2015

கேளிக்கை வரி அரங்கு உரிமையாளர்களுக்கு ஏன் செல்லவேண்டும். சசி அன் கோவின்..ஜாஸ் ஜாஸ் ஜாஸ் சினிமா நிறுவனத்திற்காக .

கேளிக்கை வரிச்சலுகை, மக்களுக்கா? தியேட்டர் உரிமையாளர்களுக்கா? கலைஞர் கருத்து கேளிக்கை வரிச்சலுகை, மக்களுக்கா? தியேட்டர் உரிமையாளர்களுக்கா?
உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி திமுக தலைவர் கலைஞர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், 22-7-2006 முதல் தமிழிலே பெயரிடப்பட்டு, தயாரிக்கப்படும் தரமானத் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பழைய திரைப்படங்கள் தமிழிலே பெயரிடப்பட்டிருந்தால் அவைகளுக்கும் 20-11-2006 முதல் கேளிக்கை வரியிலிருந்து கழக ஆட்சியிலேயே விதிவிலக்கு அளிக்கப்பட்டது.


இவ்வாறு தமிழக அரசு வரிச் சலுகை வழங்கியுள்ளதால்,கேளிக்கை வரியை திரையரங்க உரிமையாளர்கள் படம் பார்க்க வருகிறவர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்றும், ஆனால் தற்போது அதை தியேட்டர் உரிமையாளர்கள் வசூலித்து வருவதாகவும், இதைப் பற்றி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் வழக்கு தொடுத்து, அந்த வழக்கினை விசாரித்த உயர் நீதி மன்ற நீதிபதி ஆர். மகாதேவன் அவர்கள் முன்பாக, மனுதாரருக்காக வழக்கறிஞர் வில்சன் வாதாடியிருக்கிறார். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்தக் கேளிக்கை வரிச்சலுகை என்பது திரைப்படத் துறைக்கும், தியேட்டர் உரிமையாளர்களின் நலன்களுக்காக மட்டுமே என்று வாதாடினார்.
ஆனால் இதே அரசு தரப்பினர், மற்றொரு வழக்கில் இப்படிப்பட்ட சலுகை, திரைப் படங்களைப் பார்ப்பவர்களுக்கே செல்ல வேண்டுமென்று வாதாடினார்கள் என்பதும், இவ்வாறு அரசு தரப்பில் முரண்பாடாக கருத்துகளை எடுத்து வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "தமிழ் மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காக திரைப்படங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது. திரைப்படங்களை மக்களுக்குத் திரையிட்டு காட்டுவது தான் தியேட்டர் உரிமை யாளர்களின் கடமை. அந்தக் கடமையோடு, வரி விலக்குச் சலுகை விதி முறைகளையும் அவர்கள் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

வரிச் சலுகை என்பது உரிமை இல்லை. அது ஒரு மானியம் தான். கேளிக்கை வரிச் சலுகை என்பது திரைப்பட துறைக்கும், தியேட்டர் உரிமையாளர்களின் நலனுக்காக மட்டுமே தவிர, அது ரசிகர்களுக்குக் கிடையாது என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது.

ஒருவரிடம் அதிக வரி வசூலிக்கப்பட்டால், அது திருப்பிக் கொடுக்கப்பட வேண்டுமென்று சட்டம் கூறுகிறது. எனவே மனுதாரரிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை, மனுதாரரிடம் தியேட்டர் நிர்வாகம் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதே போல, பிறரிடம் கூடுதலாக வசூலிக்கப் பட்ட தொகையை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் திருப்பிக் கொடுக்க இயலாது. எனவே கூடுதலாக வசூலித்த தொகையை, தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும்.

கேளிக்கை வரிச் சலுகை திரைப்படங்களை பார்க்க வருபவர்களுக்குச் சென்றடையும் விதமாகத் தகுந்த உத்தரவை நான்கு வாரத்திற்குள் பிறப்பிக்க வேண்டும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
இதிலே வேடிக்கை என்னவென்றால், இது போன்ற வரிச் சலுகையின் பயன் திரைப்படம் பார்ப்பவர்களுக்குத் தான் செல்ல வேண்டுமென்று ஏற்கனவே கூறிய அ.தி.மு.க. அரசு; தற்போது திடீரென்று இந்த வழக்கில் தனது நிலையை மாற்றிக்கொண்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியின் நெருங்கிய உறவினர்கள் "ஜாஸ்" சினிமா நிறுவனத்தைத் தொடங்கியது பற்றியும், அந்த நிறுவனத்தின் சார்பில் தமிழகத்திலே பல திரையரங்குகளைப் பெற்று தாங்களே நடத்துவது பற்றியும் தொடர்ந்து நானும், தமிழகத்திலே உள்ள மற்ற எதிர்க் கட்சித் தலைவர்களும், பல ஏடுகளும் தெரிவித்து வருகின்றன. அவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்க வேண்டுமென்பதற்காகத் தான் தமிழக அரசு இப்படிப்பட்ட நிலையை எடுத்துள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எனவே, இந்த நிலையில் சென்னை உயர் நீதி மன்றம் கொடுத்துள்ள தீர்ப்பினை மதித்து, அதற்கான ஆணையைப் பிறப்பிக்க தமிழக அரசு முன் வர வேண்டுமே தவிர, உயர்நீதி மன்றத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ததைப்போல இந்த வழக்கிலும் செல்வது சரியல்ல; என்ற எனது கருத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: