சனி, 15 மார்ச், 2014

பின்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸ். முன்னணிக்கு வந்த மர்மம் என்ன?

ஆர்.எஸ்.எஸ். என்ற ஹிந்து சனாதன அமைப்பு இதுவரை பின்புலத்தில் இருந்து, அதன் அரசியல் கருவியான பி.ஜே.பி.யைப் பயன்படுத்தி வந்திருந்தாலும் இந்த 16ஆவது மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை - வெளிப்படையாக முன்னணிக்கு வந்து நிற்கிறது என்ற கருத்தை சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் எடுத்து வைத்தார் திராவிடர் கழகத் தலைவர்.
12.3.2014 நாளிட்ட எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் வெளி வந்த தகவல்களை எடுத்துக்காட்டி தன் கருத்துக்கு வலு சேர்த்தார்.
அய்க்கியமுற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்திரேஷ் குமார் போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் குறி வைக்கப்பட்டு இந்துப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் நடந்து விட்டன.
அதை அனுமதிக்காமல் அதிலிருந்து வெளி வர மத்திய அரசையே மோடி போன்ற ஒருவரை முன்னிறுத்தி கைப்பற்றிட தேர்தலைப் பயன்படுத்தும் வியூகம் வகுத்துள்ளார்கள் - என்று எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்த கருத்தினை எடுத்துக்காட்டினார்.
இராணுவத்தில் ஊடுருவல்
மாலேகான் குண்டு வெடிப்பில் இராணுவத்தில் பயன் படுத்தும் வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டது எப்படி என்ற வினாவை அவர் எழுப்பியபோது பார்வையாளர்கள் பகுதியில் ஒரே நிசப்தம்!
இந்துத்துவா சக்திகள் இராணுவத்திலேயே ஊடுருவி இருப்பது என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்து என்பதை யும் சுட்டிக் காட்டினார்.
நடக்க இருக்கும் தேர்தலை இந்தக் கண்ணோட்டத் தோடு அணுக வேண்டும் என்ற முக்கியமான கருத்தைக் கழகத் தலைவர் வலியுறுத்தினர்.
அண்மையில்கூட இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி வி.கே. சிங் பி.ஜே.பி. யில் இணைந்துள்ளார் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுப்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும்.
இந்திய இராணுவத்தில் விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் இந்திய இராணுவத்தில் முக்கிய பிரிவுகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஊடுருவியதை வெளிப்படுத்தியதுண்டு; ஓய்வு பெற்ற 96 இராணுவத் துறையினர் காவல்துறை அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டதையும் வெளிப்படுத்தினார்.
அதைவிட முக்கியமான அதிர்ச்சியூட்டும் தகவல் - பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவத் தளபதிகளும் அதிகாரிகளும் நேரில் வந்து விளக்கங்கள் - அளித்த தெல்லாம் சாதாரணமானவை அல்லவே!
இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டால் சென்னை பெரியார் திடலில் நேற்று திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த கருத்து மிக மிக முக்கியமானது - ஆழமானது. மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்கத் தக்கதுமாகும்.
காவி பயங்கரவாதம்!
சன் நியூஸ் தொலைக்காட்சி விவாத மேடையில் (23.1.2013) பங்கு கொண்ட தமிழர் தலைவர் ஒரு தகவலைப் பதிவு செய்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்ததை பொருத்தமாக எடுத்தாண்டார். நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற வன் முறையில் - குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எசுக்குத் தொடர்பு உண்டு என்று அந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் தெரிவித்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். வட்டாரமும் பி.ஜே.பி. பிரமுகர்களும் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டனர்.
அந்தச் சூழ்நிலையில் மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே. சிங் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைகள் குண்டுவெடிப்பு களில் ஆர்.எஸ்.எஸ்., ஈடுபட்டுள்ளது என்றும், அப்படி ஈடுபட்டவர்களின் பத்துப் பேர் பட்டியல் கை வசம் உள்ளது என்று போட்டு உடைத்ததும் - ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வாலைச் சுருட்டிக் கொண்டனவே!
மாலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் இரயில், மெக்கா மசூதி, ஆஜ்மீர் தர்கா எனப் பல இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் - சதி வேலைகளில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்துத்துவாவாதிகள் ஈடுபட்டது உண்மை - அவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.காரரான அஜீமானந்தா நீதிமன்றத்திலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரே!
1969இல் அகமதாபாத்திலும் 1978இல் அய்தராபாத்திலும், 1987இல் மீரட்டிலும், மும்பை, குஜராத்தில் நடைபெற்ற வன் முறைகள் இந்துத் தீவிரவாதிகளால் அரங்கேற்றப்பட்டன என்றும் அவர் நீதிமன்றத்தில் சொல்லவில்லையா?
ஹேமந்த்கர்கரேயைக் கொன்றவர்கள் யார்?
மாலேகான் குண்டு வெடிப்பில் இந்துத்துவாவாதிகள் தீட்டிய சதிகளை எல்லாம் அம்பலத்திற்குக் கொண்டு வந்த மகாராஷ்டிர மாநில முக்கிய காவல்துறை அதிகாரி ஹே மந்த்கர்கரே படுகொலை செய்யப்பட்டதில் ஹிந்துத்துவா வாதிகளுக்கு இருந்த அதிர்ச்சியூட்டும் தகவலை நீதிமன்றத்தில் அஜீமானந்தா ஒப்புக் கொண்டாரே!
அஜீமானந்தா யார் என்றால் ஆர்.எஸ்.எசுடன் நீண்ட காலமாக உறவு கொண்ட பிரசாரகர் மட்டுமல்ல; வனவாசி கல்யாண் என்ற ஆசிரமத்தை நடத்திவருபவர்; நரேந்திர மோடியுடன் பல்வேறு மேடைகளிலும் முழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் நேற்று ஆற்றிய உரையில் அடங்கிய உண்மைகளும், நியாயங்களும்,  ஆபத்துகளும் எச்சரிக்கைகளும், இவற்றின் அடிப்படையில் விடுத்த தன் அருமை புரியுமே!
பல்வேறு சதிக் குற்றச்சாற்றுகள் வன்முறைக் குற்றச் சாற்றுகளால் விழி பிதுங்கி நிற்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளையும், அவற்றைச் சார்ந்தவர் களையும் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் ஆர்.எஸ். எஸ். உள்ளது.
எந்த விலை கொடுத்தும் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதன் மூலம்தான் அதனைச் சாதிக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.
நேற்றைய சிறப்புக் கூட்டத்தில் மட்டுமல்ல; கடந்த மாதம் பிப்ரவரியில் (17) விடுதலையின் வாயிலாகவே திராவிடர் கழகத் தலைவர் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடு களை வெளிச் சத்துக்கும் கொண்டு வந்தார். நேற்றைய கூட்டத்தில் எக்னா மிக் டைம்ஸ் ஏட்டில் (12.3.2014) வெளி வந்த தகவல்களை வெளியிட்டுக் கருத்துத் தெரிவித்தது போலவே இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் (15.2.2014) ‘’RSS AIMS for Bigger Role in Electroral Duties’’ என்ற தலைப்பில் வெளி வந்த தகவல் களின் அடிப்படையில் விடுதலையில் (17.2.2014) அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் தமிழர் தலைவர்.
பின்னணி முன்னணியானது
இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ் என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்க முதலே தானே நேரிடையாக, சற்றும் ஒளிவு மறைவின்றி, கூச்ச நாச்சமின்றி, வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது.
நரேந்திர மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆர்.எஸ். எஸின் கொள்கையை அப்பட்டமாகக் கடைப்பிடிப்பதில் சற்றும்கூட பின் வாங்காதவர் என்பதால் அவரையே - பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அதற்கான தனது அத்துணைப் பிரச்சார ஊடகங்களிலும் இணையதளம் உள்பட மிக வேகமாக முடுக்கி விட்டுக் கொண்டாடுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு (15.2.2014) அப்படி என்ன தான் தெரிவித்திருந்தது?
ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர் மோகன்பகவத் அவர்கள் தலைமையில் வாரணாசியில், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடிய ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரபிரதேசத் (அதிகமான எம்.பி.களைக் கொண்ட மாநிலம்)திற்குப் பொறுப்பான பா.ஜ.க.வின் மாநில தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பேயி, அமைப்புச் செயலாளர் ராதேஷ் ஜெயின், கட்சித் தேர்தல்  பொறுப்பாளர் (குஜராத்தில் மோடி யை வெற்றி பெறச் செய்த) அமித்ஷா ஆகியோர் முன் னிலையில் தனது தேர்தல் பணிக்கான திட்டங்களை முன் வைத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். ஆணையிட்டால் அவசியம் செயல்பட வேண்டும் பி.ஜே.பி.
1. பிரதமர் வேட்பாளர் எப்படி ஹிந்துத்துவா கொள்கை யில் ஊறித் திளைத்தவரான மோடியையே தேர்ந்தெடுத் துள்ளோமோ, அதே போல் அக் கொள்கையில் வேரூன் றியவர்களையே நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் களாக இந்தஅணி சார்பில் நிறுத்தப்பட வேண்டும்.
2. இப்படி தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் நல்ல பெயரையும், பொது மக்கள் மத்தியில் மதிப் பையும் கொண்ட கேள்விக் கேட்கப்பட முடியாத  தகுதியான வேட்பாளராகவும் அமைதல் வேண்டும்.
3. பா.ஜ.க.வுக்குச் சொல்லப்பட்ட கருத்து என்ன வென்றால் ஆணைகள் ஆர்.எஸ்.எஸ்.ஆல் தரப்பட்டால் அதை அப்படியே கட்சி (பா.ஜ.க.) அமைப்பு பின்பற்றியாக வேண்டும்.
4. அவ்வமைப்புகள் கிராமாந்திரங்களிலும் இறங்கி ஆதரவாளர்களான வாக்காளர்களை ஒன்று திரட்ட ஆவன செய்ய முன்வர வேண்டும்.
5. மற்ற இடங்களில் தெரிகின்ற மோடி அலை எப்படி 2014-இல் வீசுகிறதோ, அதை உ.பி.யில் 80 இடங்கள் உள்ள மாநிலத்தில் வீச வைக்கத் தேவையான அத்தனை உத்திகளையும் கையாளத் தயங்கக் கூடாது.
என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு வெளியிட்டு இருந்தது.
இந்த உண்மைகளை எல்லாம் தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகம் - அதன் தலைவர் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக.
இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையல்ல. மதவாதத் தோள் தூக்கி எழும் ஆபத்தான மனு தர்ம அமைப்பான ஹிந்துத்துவா எனும் சனாதன - வருணாசிரமத் தர்மத்தை குருதியோட்டமாகக் கொண்ட ஓர் கட்சி -  இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில் அமருமேயானால் அதிகார பலத்தோடு குஜராத் எப்படி வேட்டையாடப்பட்ட தோ, அதே நிலை இந்தியா முழுமையும் அரங்கேற்றப்படும் ஆபத்தை தேர்தலில் நிற்காத கழகத்து தலைவர் - மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு தெரிவித்துள்ள கருத்தும், எச்சரிக் கையும் இந்தியா முழுமைக்குமே தேவைப்படக் கூடியது.
தமிழர் தலைவரின் உரை குறுந்தகடாக தேர்தல் களங் களில் உலா வர உள்ளது. மதச் சார்பற்ற சக்திகள், அணிகள் கட்சிகள் பயன்படுத்திக் கொள்வது நல்லது - திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரையாயிற்றே!
(16ஆவது மக்களவைத் தேர்தலும் மக்கள் கடமையும் என்னும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று சென்னை பெரியார் திடலில் ஆற்றிய உரையைத் தழுவி எழுதப்பட்டது)
தொகுப்பு: மின்சாரம்viduthalai.in  

கருத்துகள் இல்லை: