வெள்ளி, 7 மார்ச், 2014

ஓவர்டேக் செய்த காங்கிரஸ்! பாலக்கரையில் மெகா எழுச்சி!! பிச்சையெடுப்பவர்களை பிடித்து !


தமிழகத்தில் காங்கிரஸ் நிலைமை இந்த அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அரசியல் கட்சியினர் தங்கள் பலத்தைக் காட்ட மாநாடுகளுக்கு குவார்ட்டர், பிரியாணி, கைச்செலவுக்கு பணம் இதுதவிர சம்பளம் எனக் கொடுத்து ஆள் பிடிப்பது வழக்கம் (ம.தி.மு.க. போன்ற சில கட்சிகள் விதிவிலக்கு).
ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கே ஆள் பிடிக்கும் நிலைமை யாருக்கு ஏற்பட்டுள்ளது பாருங்கள்… தேசிய, பாரம்பரியம் மிக்க, இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அப்படி ஒரு நிலைமை.
சரி போகட்டும், பிடித்ததுதான் பிடித்தார்கள் ஊரில் எத்தனையோ பேர் சும்மா இருக்கிறார்கள். அல்லது, வெட்டிக்கதை பேசித்திரிவோரைக் கூட அழைத்து வந்திருக்கலாம். ஆனால், போயும் போயும் பிச்சையெடுப்பவர்களை பிடித்து வந்ததுதான் தமிழக காங்கிரஸின் பெரிய காமெடி.

இந்த மாதிரி சோதனை எந்தக் கட்சிக்கும் ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை. லெட்டர் பேட் கட்சிகள் கூட இதுபோன்றதொரு நிலையைச் சந்தித்ததில்லை.
இந்த விஷயத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஓவர்டேக் செய்தது காங்கிரஸ்!
ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய, தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து பாலக்கரையில் தெருமுனைப் பிரசாரம் நடந்தது.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அரவானூர் விச்சு தலைமை வகித்தார். பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் மிகச் சொற்ப அளவிலே கலந்துகொண்டனர்.
பேசாமல், அந்த ஏழெட்டு பேருடன் அரவானூர் விச்சு, தமது ஆர்ப்பாட்ட வீச்சை நடத்தியிருக்கலாம். ஆனால், விதி யாரை விட்டது?
கூட்டம் குறைவாக இருந்ததால் மானம் போயிருமே என நினைத்த அரவானூர் விச்சுவுக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. அப்பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பிச்சைக்காரர்கள் மற்றும் தள்ளுவண்டி இழுக்கும் கூலித் தொழிலாளிகள் சிலரை பணம் தருகிறோம் எனக் கூறி அழைத்து வரச் சொல்லி விட்டார்.
அழுக்குச் சட்டைகள், மழிக்காத தாடியுன், பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தவர்களின் கையில், காங்கிரஸ் கொடியைத் திணித்து நிற்கச் செய்தனர். அவர்களும் காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்வதைக் கேட்டு, ‘காங்கிரஸ் மானம் காத்த குமரன்கள்’ போல நின்றுகொண்டிருந்தனர்.
அப்போதுதான் பிரச்னை ஆரம்பமானது.
கூட்டத்தில், திடீரென ஜெயலலிதா உருவபொம்மையை எரிக்கப்போவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.
“நீங்கள் பொம்மையை எரித்தாலும் சரி. டில்லியில் உள்ள உங்கள் கட்சி அம்மையை எரித்தாலும் சரி. நம்ம பேட்டாவை கொடுத்தால் போதும்” என்ற முகபாவனையுடன் நின்றிருந்தனர், ‘திடீர்’ காங்கிரஸ் தொண்டர்கள்.
ஆனால், ஜெயலலிதா உருவபொம்மை எரிக்கும் விளையாட்டுக்கு அனுமதி மறுத்தனர் போலீசார். (பெரிய போலீஸ் படை ஒன்றும் வரவில்லை. காங்கிரஸ் பலம் தெரிந்து, ரிட்டயர் வயதில் நாலைந்து போலீஸ்காரர்களைதான் அனுப்பியிருந்தார் அப்பகுதி இன்ஸ்பெக்டர்)
காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கையில் வைத்திருந்த உருவ பொம்மையை, விரட்டிச் சென்று பறித்தார் ஒரு போலீஸ்காரர். மற்றொரு காங்கிரஸ் நிர்வாகியோ ஜெயலலிதா படத்தை கிழித்து எறிந்துவிட்டு துள்ளி ஓடினார்.
இதைப்பார்த்த இரு போலீஸ்காரர்கள் மூச்சிரைக்க அவரை துரத்திக்கொண்டு ஓடினர். காங்கிரஸ் நிர்வாகியோ, பாலக்கரை சந்துகளுக்குள் மாயமானாக மறைந்து மறைந்து ஓடினார்.
பாவம் போலீஸ்காரர்கள், ஒருவழியாக துரத்திச்சென்று அவரை கைது செய்து அழைத்து வந்தனர்.
இந்த தமாஷ் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, அதே இடத்தில் அசையாமல் கொடியுடன் நின்ற பிச்சைக்காரர்களை ஏற, இறங்கப் பார்த்த மற்றொரு போலீஸ்காரர், “நீங்களெல்லாம் காங்கிரஸ் தியாகிகளா? வண்டியில் ஏறுங்கள்” எனக் கூறினார்.
“தியாகியா?” என திகைத்த பிச்சைக்காரர்கள் தாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வசீகரிக்கப்பட்ட கதையைக்  கூறவே, சிரிப்பை அடக்கிக்கொண்ட போலீசார், அவர்களை விட்டுவிட்டு, ஒரிஜனல் காங்கிரஸ் (இவர்களும்கூட டூப்ளிகேட்டாக இருக்கலாம்) கட்சியினர் ஏழெட்டு பேரை கைது செய்தனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் ஹைலைட்டான விஷயம், காங்கிரஸால் வசீகரிக்கப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு ஒப்பந்தப்படி காசு போய்ச் சேரவில்லை என்பதுதான்!
“பாவம் பிச்சைக்காரர்கள்” என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்களைவிட பாவம், பாலக்கரை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அல்லவா?
viruvirupu.com

கருத்துகள் இல்லை: