சனி, 8 மார்ச், 2014

தடுமாறும் கம்யூனிஸ்ட் கட்சிகள்:

ஆளுக்கு ஒரு தொகுதி தான் என, அ.தி.மு.க., கூறியதால், அதிருப்தி அடைந்துள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளன. ஆனாலும், அடுத்தது என்ன, தனித்துப் போட்டியா என்பதை வெளியிடாமல், மவுனம் காக்கின்றன.அதற்கு காரணம், அ.தி.மு.க.,விடம் இருந்து அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு நீடிப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்கள், அ.தி.மு.க., தலைமையுடன் பேசி வருவதால், அதுவரை அமைதியாக இருக்கும்படி, ஆலோசனை கூறியுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் வட்டாரத்தில் பேசப்படுகிறது,


அ.தி.மு.க., கூட்டணி யில், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் மூன்று தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், 2 தொகுதிகளும் கேட்டுள்ளன.ஆனால், இக்கட்சிகளுக்கு ஏற்கனவே, தலா ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை, அ.தி.மு.க., அளித்துள்ளது. அதை காரணம் காட்டி, தேர்தலில், தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என, கறாராக கூறி விட்டது.கூட்டணியில் தொடர விரும்பிய இக்கட்சிகள், தலா இரண்டு தொகுதிகள் கேட்டன. அதை சட்டை செய்யாமல், 40 தொகுதி களுக்கும் வேட்பாளர்களை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அந்த சூட்டோடு, பிரசாரத்திற்கும் கிளம்பி விட்டார்.

காத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடைசி வரை, ஒரு தொகுதி என்ற பதிலை தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. கடும் கோபத்தில் நேற்று முன்தினம், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடிப் பேசி, கூட்டணியை முறிப்பதாக அறிவித்தன.இதையடுத்து, உடனடியாக, தி.மு.க.,விடம் இருந்து அழைப்பு வந்தது. இக்கட்சி தலைவர் கருணாநிதி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் சேரும் என்ற செய்திகள் வெளியாகின.ஆனால், அப்படி எதுவும் நடக்காத வகையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து அமைதி காத்து வருவதற்கு காரணம், அக்கட்சி மேலிட தலைவர்கள் கூறிய ஆலோசனை தான் என, தெரியவந்துள்ளது.

ஜெயலலிதாவிடம் பேசி, தலா இரண்டு தொகுதிகளுக்கு சம்மதிக்க வைக்கும் முயற்சி தொடர்கிறது. அது தோல்வியில் முடிந்தால், தி.மு.க., அழைப்பை பரிசீலிக்கும் முடிவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் வந்துள்ளனர்.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர், டி.ராஜா, டில்லியில் அளித்த பேட்டியில், 'தி.மு.க., அழைப்பு குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்' என, குறிப்பிட்டு உள்ளார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: