ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

வெளிநாடுகளுக்கு அடிக்கடி பறந்த ஜெகத்ரட்சகன்: அமைச்சர்களில் முதலிடம்

புதுடில்லி:"மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பின், ஜெகத்ரட்சகன், 24 முறை, தனிப்பட்ட பயணமாக, வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். 253 நாட்களை வெளிநாடுகளில் கழித்துள்ளார். அடிக்கடி விமானப் பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர்களில், ஜெகத்ரட்சகன் முதல் இடம் பிடித்துள்ளார்' என, பிரதமர் அலுவலகமும், வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்துள்ளன.
மத்திய அமைச்சரவையில், தி.மு.க., சார்பில் இடம்பெற்றுள்ள, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சரான ஜெகத்ரட்சகன், நிலக்கரி ஒதுக்கீடு ஊழலில் சிக்கியதை அடுத்து, அவரது பெயர், டில்லி வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவருக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனத்துக்கு, எந்தவித அனுபவமும் இல்லாத நிலையில், நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டிருப்பது, பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. "ஜெகத்ரட்சகனுக்கு எதிராக, விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஏற்க மறுத்து விட்டார்."ஜெகத்ரட்சகன் தன் பதவியை பயன்படுத்தி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை பெற்றார் என்பதை, நிரூபிக்கும் வகையில், வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை' என்றும் சல்மான் குர்ஷித் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள, 75 அமைச்சர்கள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங்கள், தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு, பிரதமர் அலுவலகமும், வெளியுறவு அமைச்சகமும் அளித்துள்ள பதில்:அடிக்கடி விமான பயணங்கள் மேற்கொண்ட, அமைச்சர்கள் பட்டியலில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர், ஜெகத்ரட்சகனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவர், அமைச்சராக பொறுப்பேற்ற பின், 24 முறை, தனிப்பட்ட பயணமாக, வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். வெளிநாடுகளில், 253 நாட்களை கழித்துள்ளார்.சராசரியாக, நான்கு நாட்களுக்கு ஒரு நாள், ஜெகத்ரட்சகன் இருந்தது, வெளிநாட்டில்தான். அவர், பிரான்ஸ், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேசியா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேடு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கே சென்றுள்ளார்.

அமைச்சரான பின், முதல் முறையாக, 2010 ஜனவரி, 30ம் தேதி, ஐந்து நாள் சுற்றுப் பயணமாக வெளிநாடு சென்றார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான கணக்கெடுப்பின்படி, கடைசியாக, இந்தாண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில், 23 நாள் பயணமாக, ஐக்கிய அரபு எமி ரேடு சென்று திரும்பியுள்ளார்.

ஜெகத்ரட்சகனுக்கு அடுத்த இடங்களை பிடித்த, அமைச்சர்களின் வரிசையில், பிரபுல் படேல், நெப்போலியன், சரத் பவார், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில், 49 மத்திய அமைச்சர்கள், 270 முறை வெளிநாட்டுப் பயணம் சென்றுள்ளனர். இவர்கள் வெளிநாடுகளில், செலவழித்த மொத்த நாட்கள், 2,062.

அமைச்சர் சரத் பவாரை பொறுத்தவரை, அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் பெரும்பாலும், சர்வதேச கிரிக்கெட் சங்க தலைவர் என்ற முறையிலும், 2011ம் ஆண்டு, உலக கோப்பை போட்டியின் மத்திய ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் என்ற முறையிலும் இருந்துள்ளன. இந்த பயணங்கள் அரசின் நிதியில் மேற்கொள்ளப்பட்டவை அல்ல.இவ்வாறு பிரதமர் அலுவலக பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: