புதன், 11 ஏப்ரல், 2012

இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை வாபஸ்- கண்காணிப்பு நீடிப்பு!

சென்னை: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் சுனாமி அலைகள் எழாததால், இதற்கான வாய்ப்பு குறைந்ததாக கருதப்பட்டது. ஆனால் இந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை 8.5 ரிக்டர் அளவிலான ஆப்டர்ஷாக் எனப்படும் பின் அதிர்வு ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை இந்தோனேசியாவில் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
முன்னதாக முதலில் புதுவையில் 4.30மணிக்கும், சென்னையில் 5 மணிக்கும் சுனாமி தாக்கலாம் என கூறப்பட்டிருந்தது. பின்னர் இது புதுவையில் 6.30 மணி வரையிலும், சென்னையில் இரவு 7 மணி வரையிலும் எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த எச்சரிக்கை முறைப்படி திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து இந்தியாவில் சென்னை, விசாகப்பட்டினம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

சென்னையை மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கும் என்று கூறப்பட்டதால், கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதனால் கடற்கரை காமராஜர் சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. கரையோரம் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வந்தனர்.

அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னையின் கடலோரப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலங்கள் அனைத்திலிருந்தும் ஊழியர்கள் வெளியேறினனர். அனைவரும் முன்னெச்சரிக்கை காரணமாக வீடுகளுக்குக் கிளம்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதால் அனைத்து ஊழியர்களும் கிளம்பி விட்டனர்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி தாக்குதலினாலும் சென்னையில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

இந்தோனேசியாவில் 2004 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 7.2 ரிக்டர் அளவுதான். அதற்கே அந்தமான், இலங்கை, தமிழ்நாட்டின் கடற்கரையோர லட்சக்கணக்கானோர் மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் பொருளிழப்பு ஏற்பட்டது. கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.

தற்போது 8.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக இருப்பதால், சுனாமியின் வேகம் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்பட்டதால் மக்கள் பெரும் பீதியுடன் இருந்தனர்.

இந்த நிலையில் சுனாமி தாக்க வாய்ப்பில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

ஆனால் தற்போது இந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த ஆப்டர்ஷாக் ஏற்பட்டது. முதலில் 8.3 ரிக்டராகவும், பின்னர் 8.5 ரிக்டர் அளவிலும் இது பதிவானது. இதையடுத்து 2 மணி நேரம் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நீட்டித்தது.

இதையடுத்து இந்தியாவிலும் சுனாமி எச்சரிக்கை தள்ளிப் போனது. அதன்படி மாலை 6.30 மணி வரை புதுச்சேரிக்கும், இரவு 7 மணி வரை சென்னைக்கும் சுனாமி எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கை வாபஸ்

இந்த நிலையில் பூகம்பம் தாக்கி 4 மணி நேரங்கள் கடந்து விட்டதால் தற்போது சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தமானில் 3.9 மீட்டர் உயர அலைகள் தாக்கலாம்

முன்னதாக அந்தமான் கடலோரத்தை 3.9 ரிக்டர் அளவிலான சுனாமி அலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிமிடம் வரை எந்தத் தாக்குதலும் ஏற்படவில்லை.

கருத்துகள் இல்லை: