திங்கள், 9 ஏப்ரல், 2012

குஜராத்தில் 23 பேர் எரிக்கப்பட்ட வழக்கு: 23 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் 23 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 23 பேரை குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு 2002-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதியன்று ஆனந்த் மாவட்டத்தின் ஓதே கிராமத்தில் 23 பேர் பதுங்கியிருந்தனர். 23 பேரும் பதுங்கி இருந்த இடத்துக்கு தீவைத்த ஒரு கும்பல் அனைவரையும் எரித்துக் கொன்றது.
இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 47 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் இன்னும் 2 பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குஜராத் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றம்சாட்டப்பட்ட 46 பேரில் 23 பேரை குற்றவாளிகள் என்றும் 23 பேரை விடுதலை செய்வதாகவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி. சிங் அறிவித்தார்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிந்தைய 9 படுகொலை சம்பவங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இதில் ஓதே படுகொலை சம்பவமும் அடங்கும்.
கோத்ரா ரயில் எரிப்பு
அயோத்தியிலிருந்து சபர்மதி ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்கள் 59 பேர் கோத்ரா ரயில் நிலையத்தில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி எரித்துக் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இது நாட்டையே உலுக்கி "குஜராத் கலவரம்" என்ற அழியாக கறையை சரித்திரத்தில் பதித்துக் கொண்டது.

கருத்துகள் இல்லை: