புதன், 11 ஏப்ரல், 2012

புதுவையில் மாலை 4.30 மணிக்கும், சென்னையில் 5 மணிக்கு சுனாமி தாக்கலாம்?

 Tsunami
சென்னை: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக மாலை நாலரை மணியளவில் புதுவையை சுனாமி தாக்கலாம் என்றும் தகவல்கள் கூறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து இந்தியாவில் சென்னை, விசாகப்பட்டினம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையை மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கும் என்று கூறப்படுவதால் கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் கடற்கரை காமராஜர் சாலையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கரையோரம் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னையின் கடலோரப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலங்கள் அனைத்திலிருந்தும் ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். அனைவரும் முன்னெச்சரிக்கை காரணமாக வீடுகளுக்குக் கிளம்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதால் அனைத்து ஊழியர்களும் கிளம்பியுள்ளனர்.

பாதிப்பு அதிகரிக்கும்?

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி தாக்குதலினாலும் சென்னையில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

இந்தோனேசியாவில் 2004 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 7.2 ரிக்டர் அளவுதான். அதற்கே அந்தமான், இலங்கை, தமிழ்நாட்டின் கடற்கரையோர லட்சக்கணக்கானோர் மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் பொருளிழப்பு ஏற்பட்டது. கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.

தற்போது 8.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக இருப்பதால், சுனாமியின் வேகம் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

புதுவையில் 4.30 மணிக்கு?

சென்னைக்கு முன்னதாக புதுச்சேரி, கடலூர் கடற்கரை பகுதிகளில் மாலை 4.30 மணிக்கு சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல அரபிக் கடலையும் இந்த சுனாமி அலைகள் அடையலாம் என்றும், இதனால் கர்நாடகத்தின் மங்களூர் கடல் பகுதியை இரவு 7 மணிக்கும், மும்பையை இரவு 9 மணிக்கும் சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: