வியாழன், 16 பிப்ரவரி, 2012

பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது!

உடுமலைப்பேட்டையில் தனியார் பள்ளிக்கூட விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் எழுதி வைத்த கடிதத்தின்படி பொருளாதார ஆசிரியர் மகேஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையத்தில் இயங்கி வரும் இப்பள்ளியில் 1700 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களில் 1,160 மாணவர்கள், 450 மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையை சேர்ந்த அன்பழகன் மகன் அனுஜ் (16), விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்தான். அவனது தம்பி ஆகாஷ் 9ம் வகுப்பு படிக்கிறான்.

நேற்று காலை விடுதியில் உள்ள மருத்துவ பரிசோதனை அறையில், மின்விசிறியில் அனுஜ் தூக்கில் தொங்கினான். இதைப் பார்த்த சக மாணவர்கள் விடுதி நிர்வாகிக்கு தகவல் தெரிவித்தனர்.

ஏற்கனவே, இதே பள்ளியில் கடந்த மாதம் 19ம் தேதி கிருஷ்ணகுமார் என்ற 10ம் வகுப்பு மாணவன் மர்மமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் ஒரு மாணவன் இறந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

பெற்றோர்களும் மாணவர்களும் பள்ளி முன்பாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவன் சடலத்தைக் கொண்டு சென்ற ஆம்புலன்சை பெற்றோர் மறித்தனர். போலீசார் தடியடி நடத்த நேரிடும் என எச்சரித்ததால் மறியலை அவர்கள் கைவிட்டனர்.

மாணவன் சாவை தொடர்ந்து பள்ளிக்கும், அதே வளாகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது. மாணவன் சாவுக்கு காரணமாக ஆசிரியர் மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

சாகச் சொன்ன ஆசிரியர்
தற்கொலை செய்து கொண்ட மாணவன் அனுஜ், அவரது பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் இறந்ததற்கு காரணம் பொருளாதார ஆசிரியர் பி.மகேஸ்வரன் தான். ஆசிரியர் என்னை மிரட்டி `நீ இறந்து விட்டால் உன் வீட்டுக்கு ரூ 5 லட்சம் தருவேன் என்றார்.

அதற்கு நான் கூறினேன், அப்படி இறக்க முடியாது என்றேன். அதற்கு அவர் என் காதுக்கு மேலே உள்ள முடியை பிடித்து ஆட்டி என்னை அடித்து சாகச் செய்து விட்டார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நண்பர்களுக்கு கடிதம்

இதேபோல தனது நண்பர்களுக்கு மாணவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோள்: இன்னொரு பேப்பரில் உள்ள செய்தியை யாரிடமும் ஒப்படைக்காதீங்க. என் தம்பிக்கிட்டேயோ அல்லது பெற்றோரிடமோ தந்து விடுங்கள். உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத வகையில் இருந்து கொள்ளுங்கள்.

நான் எங்கேயாவது தான் பிணமாக கிடப்பேன். முக்கியமாக சிக் ரூமில் பாருங்கள். என்னுடைய ஒரேயொரு வேண்டுகோள், இதை எப்படியாவது பெரிய பிரச்னையாக செய்யுங்கள். சும்மா விடாதீங்க என்று அதில் குறிப்பிட்டுள்ளான்.

9 பேரை குறிவைத்து அடித்த ஆசிரியர்

இது பற்றி மாணவர்கள் கூறுகையில், டை கட்டவில்லை என்பதற்காக அனுஜை ஆசிரியர் மகேஸ்வரன் அடித்தார். அதில் இருந்து அனுஜ் கவலையுடன் இருந்தான். நாங்கள்தான் அவனுக்கு ஆறுதல் கூறினோம். ஆசிரியர் மகேஸ்வரனுக்கு எங்கள் 9 பேர் மீதும் இனம் புரியாத கோபம். எந்த நேரமும் எங்களை காரணமில்லாமல் அடிப்பார் என்றனர்.

அப்போது ஒரு மாணவன் தனது கையை காண்பித்து அந்த ஆசிரியர் அடித்ததால் ஏற்பட்ட வீக்கம் இன்னும் குறையவில்லை என்று கண்ணீருடன் கூறினான்.

இது குறித்து எஸ்.பி. பாலகிருஷ்ணன், முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி கூறுகையில், கடந்த மாதம் ஒரு மாணவன் இறந்த போது, இனி தவறு ஏதும் நடந்தால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கூட்டி பேசுவோம் என்று பள்ளி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி எந்தவித கூட்டமும் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: