புதன், 15 பிப்ரவரி, 2012

பிசியாக இருந்த விஜயகாந்தை, அப்படியே விட்டு வைத்திருக்கலாம்

சட்டசபை கலாட்டாவுக்குப்பின், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வாண வேடிக்கை நடத்தத் தொடங்கியிருக்கிறார். “தேவையில்லாமல் என்னை சீண்டினால், நானும்  பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்” என்று, அருப்புக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அவர்.
“எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்ததே பெரிய விஷயம் என்பதுபோல, அரசியலில் அடக்கி வாசித்துக் கொண்டு, வேறு சோலிகளில் பிசியாக இருந்த விஷயகாந்தை, அப்படியே விட்டு வைத்திருக்கலாம்” இந்த நினைப்பு இப்போது அ.தி.மு.க.-வினருக்கு வந்திருக்கிறது. அமைச்சர்கள் சிலர், மாவட்ட அளவில் விஜயகாந்த் கட்சியினர் அரசியல் ரீதியாக குடைச்சல் கொடுப்பதாக சொல்லத் தொடங்கியுள்ளார்கள்.
“என்னை சீண்டிப் பார்க்காதீர்கள்; என் வாயை கிளறாதீர்கள்.. வாழ்க மணமக்கள்”
கட்சியின் தென்மாவட்ட அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். அவர், “6 மாதங்களுக்கு முன்புவரை லோக்கலில் பாலிட்டிக்ஸ் செய்வதற்கு தி.மு.க.-வில் என்ன நடக்கிறது என்பதில் கண் வைத்திருந்தால் போதும்.
கேப்டன் கட்சிக்காரர்கள் பெட்டிப் பாம்பாக இருந்தார்கள். இப்போது, விஜயகாந்த் ஏதாவது பேசி அவர்களை உசுப்பேற்றி விட்டுவிடுகிறார்” என்றார்.
அருப்புக் கோட்டை திருமண விழாவில் விஜயகாந்த், மணமக்களை வாழ்த்தி அப்படி என்னதான் பேசினார்? “என்னை சீண்டிப் பார்க்காதீர்கள்; பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்” என்றார் கண்கள் சிவக்க, ஆவேசமாக!
இந்த திருமண வாழ்த்தைக் கேட்டு, மணமக்கள் மிரண்டுபோய் திருதிருவென்று விழித்திருப்பார்கள்.
சட்டசபையில் நடந்த கலாட்டாவுக்கும் திருமண மண்டபத்தில் விளக்கம் கொடுக்க தவறவில்லை அவர். “சட்டசபையில் என்ன நடந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். எனக்கு எதைப் பற்றியும் பயம் கிடையாது. மக்கள் பிரச்னைகளைத் தான் பேசினேன்; இனியும் பேசுவேன். சபை நாகரிகம் எனக்கு நன்றாகவே தெரியும்” என்றார்.
அடுத்து நேரடியாகவே ஜெயலலிதா அட்டாக்தான்! “வருமானத்துக்கு மேல் சொத்துக் குவித்ததாக 13 ஆண்டுகளாக பெங்களூரில் வழக்கு நடந்து வருகிறது. அதை உங்களால் தீர்க்க முடியவில்லை. டான்சி வழக்கில் என் கையெழுத்து இல்லை என்று சொல்கிறீர்கள். என் வாயை கிளறாதீர்கள். நான் பேச ஆரம்பித்தால், கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகி விடும்”
யாராவது ஒரு அப்பாவி அமைச்சர், கேப்டனுக்கு பதில் செல்ல வேண்டிய நிலை வந்துவிட்டது.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பக்கம் பக்கமாக தமிழில் சவால் விட்டுக் கொண்டிருந்த கேப்டனை, தேவையில்லாமல் இந்தப் பக்கமாக திருப்பி விட்டர்கள் போலத்தான் உள்ளது.

கருத்துகள் இல்லை: