ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

நடப்பதோ வெறும் வசூல் வேட்டை பேரு தான் அ.தி.மு.க., கோட்டை.

கடும் மின் வெட்டு, உள்ளாட்சிகளில் ஊழல், நிர்வாகச் சீர்கேடு என, பல காரணங்களால், அ.தி. மு.க., கோட்டையான கோவையில், ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தினமும் எட்டு மணி நேர மின் தடையால், தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது கோவை; சென்னையை அடுத்த பெரிய தொழில் நகரமான கோவையில், கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, படிப்படியாக அதிகரித்த மின் வெட்டு, இப்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், அ.தி.மு.க.,வுக்கு அமோக வெற்றியைத் தந்த கோவை மக்கள், கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.தலைநகரைத் தவிர்த்து, பிற பகுதிகள் அனைத்திலும், இதே நிலை தான் என்றாலும், இந்த மின் வெட்டால், அதிகபட்சமாக பாதிக்கப்பட்டிருப்பது கோவை நகரமே; பல்லாயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மின் வெட்டால் முடங்கிப் போயிருப்பது இங்கே தான்; முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தொழில் அமைப்புகள் கூடி நின்று கொந்தளிப்பது இதனால் தான்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, அரசியல் கட்சிகளின் ஆதரவின்றி, கோவையில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டதே, இதற்கு சாட்சி; மின் வெட்டால் ஏற்படும் பாதிப்பை விட, தொழில் முனைவோர் கொந்தளிப்பதற்கு, வேறு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன. மின் வெட்டில் நடக்கும் அப்பட்டமான பாரபட்சம் தான் முதற்காரணம். சென்னையில், ஒரு மணி நேரம் மட்டுமே மின் தடை என்பதுடன், அந்த மண்டலத்திலுள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு, தங்கு தடையற்ற மின்சாரத்தை அரசு வழங்குகிறது; ஆனால், காலம் காலமாக தொழில் செய்து, பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளைத் தரும் கோவை சிறுதொழில் நிறுவனங்களைப் பற்றி, கவலைப்படுவதே இல்லை.இந்த ஆதங்கமே, சட்டணூபை தேர்தலில் எதிரொலித்து, தி.மு.க.,வுக்கு படுதோல்வியை பதிலாகத் தந்தது; ஆட்சி மாற்றத்துக்குப் பின்னும், இதில் மாற்றம் ஏற்படாததோடு, மின் வெட்டின் அளவும், இரு மடங்காக அதிகரித்துள்ளது; இதனால், பல்லாயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், இழுத்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக, தொழில் அமைப்புகள் போராட முயன்ற போது, பல முறை அனுமதி மறுக்கப்பட்டது; அதே நேரத்தில், கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்துக்கு, போலீசே பலத்த பாதுகாப்பு கொடுத்தது; தி.மு.க., ஆட்சியில் கூட, தங்களுக்கு இத்தகைய அனுபவங்கள் நேர்ந்ததில்லை என்று, தொழில் அமைப்பினர் பொருமினர்.

அதன் விளைவாகவே, மின் வெட்டைக் கண்டித்து, பிப்., 10ல் நடந்த ஆர்ப்பாட்டத்தை, மிக பிரமாண்டமாக இவர்கள் நடத்திக் காட்டினர்; பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிலர், மறியலில் ஈடுபட்டபோது, அதையும் சுமுகமாகக் கையாளாமல் தடியடி நடத்தியது, தொழில் அமைப்பினரை மேலும் உஷ்ணப்படுத்தியுள்ளது.இவை ஒரு புறமிருக்க, கோவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி. மு.க., பிரதிநிதிகள் யாருமே, தொழில் அமைப்பினரின் உணர்வுகளை, தொழில் பாதிப்புகளை, முதல்வரிடம் எடுத்துச் செல்ல முயற்சிக்கவில்லை; மாறாக, குறுகிய காலத்தில், கோடிகளில் குவிப்பதையே முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.கோவைக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டபோது, இங்குள்ள தொழில் அமைப்புகள், பெரிதும் மகிழ்ச்சியடைந்தன; ஆனால், தொழில் வளர்ச்சிக்கான எந்த முயற்சியையும் எடுக்காத வேலுமணி, பல வழிகளிலும் வசூல் செய்து, ராவணனை மகிழ்ச்சிப்படுத்துவதையே முக்கியப் பணியாகச் செய்து வந்ததாக புகார்கள் கிளம்பின; அதற்கேற்ப, அவரது பதவியும் பறிக்கப்பட்டு விட்டது.

கோவை மேயராக வேலுச்சாமி பொறுப்பேற்றபோது, இந்த நகருக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்று, இங்குள்ள மக்கள் நம்பினர்; மாறாக, வரலாறு காணாத அளவுக்கு, கோவை மாநகராட்சியில் ஊழல், மிரட்டல், வசூல் வேட்டை தலை தூக்கியிருப்பதாக, ஆளும் கட்சியினரே புலம்பத் துவங்கி விட்டனர்; இதற்கேற்ப, மாநகராட்சியிலும் ஊழல் அதிகாரிகளே நிறைந்துள்ளனர்."பார்' ஏலத்தில் முறைகேடு, சீட்டாட்ட கிளப் நடத்துவோர்க்கு ஆதரவு, கேபிள் ஆபரேட்டர்களிடம் வசூல் வேட்டை, "ஷாப்பிங் மால்'களில் மிரட்டல் வசூல், அரசு நிர்வாக விஷயங்களில் தலையீடு என, ஆளும் கட்சி பிரதிநிதிகள் மீது, புதுப்புது புகார்க் கணைகள் பாய்கின்றன; தொழில் வளர்ச்சியிலோ, நகரின் கட்டமைப்பை மேம்படுத்துவதிலோ, ஒருவரும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.முன்னர், சசிகலா கும்பலுக்கு, "கப்பம்' கட்டியதாக, ஒரு காரணம் கூறப்பட்டது; இப்போது, அதிகார மையங்களே இல்லாத நிலையிலும், இந்த பிரதிநிதிகள், "மேல கொடுக்கணும்' என்று கூறியே வசூலைத் தொடர்வது, முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது. ஒட்டு மொத்தமாய்ப் பார்த்தால், அ.தி.மு.க., வின் கோட்டையில், ஓட்டைகள் விழுவது உறுதியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: