வெள்ளி, 16 செப்டம்பர், 2011

LIC இடம் வாங்கி கலைஞர் டிவிக்கு 180 கோடி பல்வா தந்தார் சிபிஐ குற்றச்சாட்டு

Shahid Balwa

டெல்லி: தனது ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெறுவதற்காக, எல்ஐசியின் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 180 கோடி கடனை, கலைஞர் டிவிக்குக் கொடுத்துள்ளார் ஷாகித் ஹூசேன் பல்வா என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

டிபி ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தி வரும் பல்வாவின், துணை நிறுவனமான சினியுக், கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி வழங்கியது. இதை கடனாக வாங்கியதாகவும் வட்டியோடு சேர்த்து ரூ. 214 கோடியைத் திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறுகிறது.

ஆனால், இது தனது நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்காக பல்வா தந்த லஞ்சம் என்கிறது சிபிஐ.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெடிக்க ஆரம்பித்தவுடன், கலைஞர் டிவி மிக விவரமாக இந்தப் பணத்தை வட்டியோடு திருப்பித் தந்து கடன் போல காட்டியது என்பது சிபிஐயின் வாதம்.

இந் நிலையில் பல்வா எங்கிருந்து இந்த ரூ. 200 கோடியை திரட்டினார் என்பது குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன. டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் கட்டுமான திட்டப் பணிகளுக்காக எல்ஐசியின் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடம் ரூ. 180 கோடியை கடனாக வாங்கியுள்ளார் பல்வா.

ஆனால், அந்தப் பணத்தை கட்டுமானத் திட்டத்துக்குப் பயன்படுத்தாமல் அப்படியே கலைஞர் டிவிக்கு தந்துள்ளார் என்று சிபிஐயின் Bank security and frauds cell (BS&FC) பிரிவு கண்டுபிடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.எஸ்.விஜயனுக்கும் பங்குள்ளதா என்பது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

நமக்கெல்லாம் ரூ. 20 லட்சம் வீட்டு லோன் தரவே, நமது தாத்தாவின் சொத்து பத்திரத்தில் ஆரம்பித்து, நமது பேரக்குழந்தையின் போட்டோ வரை கேட்கும் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், பல்வா மாதிரியான ஆட்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை அள்ளித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டுமானத் திட்டப் பணிகளுக்காக எல்ஐசியின் இந்த துணை நிறுவனம் கடன் தருவதில் ஏராளமான முறைகேடுகளும் லஞ்சம் கைமாறுவதாகவும் பொதுவான புகார்கள் உள்ளன. இந் நிலையில் இப்போது பல்வா-கலைஞர் டிவி விவகாரத்தை வைத்து இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் சிபிஐ விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

கட்டுமானப் பணிகளுக்கு தரப்பட்ட நிதியை பல்வா முறையாகப் பயன்படுத்துகிறாரா என்பதை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் கண்காணித்திருக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் அது நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அவர் திருப்பிவிட்டதை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் ஏன் கேள்வி கேட்கவில்லை என்பது குறித்தும் சிபிஐ விசாரிக்கிறது.

கருத்துகள் இல்லை: