சனி, 17 செப்டம்பர், 2011

அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா?விஜய்காந்துக்கு பெரும் அதிர்ச்சி

முதல்வர் ஜெயலலிதா வேறு பதவிகளைக் கூட விட்டுத் தராமல், அனைத்து மேயர் பதவிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்து விஜய்காந்துக்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளார்.

சென்னை: உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக நடத்திய பேச்சுவார்த்தையில் தேமுதிக கலந்து கொள்ளவில்லை. எனவே, அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது.


கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன், விஜய்காந்தின் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 29 சட்டசபை தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது. ஆனால், தேமுதிகவுக்கு இடங்கள் ஒதுக்குவதில் பெரும் டிராமா நடந்தது.


இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீட்டிலும் இரு கட்சிகளிடையே மோதல் ஆரம்பித்துள்ளது.

இந்தத் தேர்தலில் மதுரை, சேலம், ஈரோடு, திருச்சி ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகளைக் அதிமுகவிடம் கேட்டு வந்தது தேமுதிக. ஆனால், அதைத் தர மறுத்துவிட்ட முதல்வர் ஜெயலலிதா வேறு பதவிகளைக் கூட விட்டுத் தராமல், அனைத்து மேயர் பதவிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்து விஜய்காந்துக்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளார்.

இந்த வேட்பாளர்களை அறிவித்த பின்னர் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினருடன், இடப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அதிமுக நேற்று தொடங்கியது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த இக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக கட்சி சார்பில் அதன் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் போயஸ் கார்டனுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை.

இதனால், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில், தேமுதிக நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒரு மேயர் பதவியைக் கூட விட்டுத் தராமல் அதிமுக வைத்த 'ஆப்பு' குறித்து தனது கட்சியின் நிர்வாகிகளுடன் விஜயகாந்த் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். அதில், பலரும் தனித்துப் போட்டியிடலாம் என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால், பண்ருட்டி போன்றோர் அதிமுக கூட்டணியில் நீடிப்பதே நல்லது என்று கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

இதுதொடர்பாக இன்றும் விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் மேலும் ஆலோசனை நடத்த உள்ளார்.

கருத்துகள் இல்லை: