வெள்ளி, 16 செப்டம்பர், 2011

கூடவே இலவச Broadband internet சேவை வழங்குவதற்கும் முதல்வரம்மா ஏற்பாடு?

இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது! எந்தப் பொருளை எடுத்தாலும் அதில் ‘அம்மா’ படம் பளிச்சென்று இருக்கிறது. கோவில்களுக்கு நாலணா பல்பு வாங்கிக் கொடுத்து அதில் நான்கு ரூபாய் செலவழித்து ‘உபயம்’ என்று பெயர் பொறிக்கும் வம்சம் நம் வம்சம்.
எதிர்காலத்தில் ஊர் முழுதும் சுத்தம், சுகாதாரம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று சொல்லி வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கும் பை கொடுத்தால் அதிலும் இப்படி படம் பொறிப்பார்களா என்று பார்க்க வேண்டும்.
‘சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு. பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு. பூப்போல வைத்து உன்னைக் காப்பது என் பாடு’ என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடியபடி, பயனாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் கறவைப் பசுக்களை பாதுகாத்து, அதன் மூலம் தங்கள் வாழ்வில் வளம் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் இந்தத் திட்ட தொடக்க விழாவில் பாடியிருக்கிறார்/பேசியிருக்கிறார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் +1, +2 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்கும் திட்டமும், இலவச மடிக் கணினி வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூடவே இலவச Broadband internet சேவை வழங்குவதற்கும் முதல்வரம்மா ஏற்பாடு செய்தால் காலாகாலததுக்கும் மாணவமணிகள் நன்றிக்கடன் பட்டிருப்பார்கள்.

***
புதிய அரசு அமைந்த பின் துவங்கிய சட்டசபை கூட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. முதல்வர் ஜெயலலிதா, சட்டசபைக்கு அனைத்து நாட்களும் வந்துள்ளார். இதுதவிர, 95 எம்.எல்.ஏ.க்கள் அனைத்து நாட்களும் சபைக்கு வந்துள்ளனர். பாராட்டுவோம்!
***
திறமையான நிர்வாகத்துக்கும், அபாரமான வளர்ச்சிக்கும், நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் மாநில அரசு சிறந்த முன் உதாரணமாகத் திகழ்கிறது என்று அமெரிக்கா பாராட்டியுள்ளது. அமெரிக்க பார்லிமெண்ட் ஆய்வுக்குழு தயாரித்துள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில், வெறும் 5 சதவீதம் பேர் தான் குஜராத்தில் வசிக்கின்றனர். ஆனால், ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில், ஐந்தில் ஒரு பங்கு, குஜராத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்துக்கு அடுத்தபடியாக நிதீஷ்குமார் தலைமையிலான பீகார் அரசுக்கும் பாராட்டு. ஆனால் நம் தமிழகம் இந்த லிஸ்ட்டில் இல்லை! நமது அண்டை மாநிலங்களான ஆந்திராவும், கர்நாடகாவும் சமீப காலங்களில் பெற்று வரும் அபரிமிதமான வளர்ச்சி ஆச்சரியப்படத்தக்கது. அங்கெல்லாமும் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனாலும் அவர்கள் கடந்த சில ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்புகளில் கவனம் செலுத்திய அளவுக்கு நாம் செலுத்தவில்லை என்பதையும் மறுக்க முடியாது.
போன ஆட்சியின் போது புதிய தலைமைச்செயலகம், இலவச கலர் டிவி என பல விஷயங்களில் கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன என்று மத்திய கணக்கு தணிக்கைத் துறை (CAG) அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்காக 28 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டது. மத்திய சாலை போக்குவரத்துக் கழகம் தேவிப்பட்டிணம் முதல் ராமநாதபுரம் வரையிலான சாலையை மேம்படுத்துவதற்காக திட்டம் அறிவித்தது. ஆனால் தமிழக அரசு அநாவசியமாக முந்திக் கொண்டு அதில் ஒரு 28 கோடியை வீண்டித்து விட்டது. இப்படி பல குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது தணிக்கைத்துறை.
இப்போது மீண்டும் பல இலவசங்கள் வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த அறிக்கையில் எப்படியெல்லாம் நம் மாநிலத்துக்கு குட்டு விழுமோ?!
***
திருச்சி மேற்கு தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளும் பதட்டம் நிறைந்தவைதான் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தேர்தலின் போது அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா வைக்கப்படுமாம். தேர்தல் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய தேர்தல் ஆணையர் பிரவீண்குமார், ‘தேர்தலில் பணம் விளையாடுவது கடந்த தேர்தலை விட பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருச்சியில்தான் பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவிதத்தில் பார்க்கப்போனால் இந்த மாதிரி பொதுத்தேர்தல் முடிந்த ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உள்ள இடங்களில் ஏற்கனவே வெற்றி பெற்ற கட்சியின் சார்பில் மாற்று வேட்பாளராக மனு செய்தவரையே வெற்றி வேட்பாளராக அறிவித்து விடலாம். அல்லது அனைவரும் ஏற்கத்தக்க வகையில் ஏற்கெனவே வெற்றி பெற்ற கட்சியின் சார்பில் அறிவிக்கப்படுபவரை தேர்தல் இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கலாம். பொதுத் தேர்தல் முடிந்து நீண்ட நாட்கள் கழித்து நடைபெறும் இடைத்தேர்தல்களை வழக்கப்படி நடத்திக் கொள்ளலாம்!
***
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தடம் புரளாத தண்டவாளத்தில் ஓடும் ரயிலை போல சிறப்பாக உள்ளது என்று சொல்லியிருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா. பாண்டியன். என்ன தான் ‘டைம்லி’ டயலாக்காக இருந்தாலும் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகி பலரும் சோகத்தில் இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு ஒப்புமை தேவை தானா?
முதல்வர் தனது ஆட்சிக் காலம் முழுமைக்கும் இதே போல தடம் புரளாத தண்டவாளத்திலேயே ரயில் செலுத்த வேண்டும்! நடக்கும் என்று நம்புவோமாக!
0
மாயவரத்தான்

கருத்துகள் இல்லை: