வெள்ளி, 3 ஜூன், 2011

கனிமொழிக்கு ஜாமின் கிடைக்க ஒரு மாதமாகுமா? : டில்லி செல்கிறார் கருணாநிதி

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கனிமொழியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாக வாய்ப்பில்லை என, தெரிகிறது. அப்படி நிகழ்ந்தால், அவர் இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., கொள்கை பரப்பு செயலருமான ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி எம்.பி., உட்பட ஏழு பேர், சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், கனிமொழி மற்றும் தொழிலதிபர் மொரானியின் ஜாமின் மனுக்களை, சி.பி.ஐ., கோர்ட் தள்ளுபடி செய்தது. பின், டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு கனிமொழி மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கில், வக்கீல்கள் வாதம் முடிந்த நிலையில், மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், டில்லி ஐகோர்ட்டிற்கு நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் தான் கோர்ட் மீண்டும் திறக்கப்படும். விடுமுறைக்கு முந்தைய நாளான இன்று, கனிமொழியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு வெளியாகும் என, தி.மு.க., வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்றைய விசாரணை பட்டியலில் கனிமொழி வழக்கு இடம் பெறவில்லை. அதனால், கோடை விடுமுறை முடிந்த பின்னரே ஜாமின் மனு மீதான தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெளியானால், இன்னும் ஒரு மாத காலத்திற்கு கனிமொழி, திகார் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், தி.மு.க., வட்டாரம் கவலை அடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தன் பிறந்த நாளான இன்று, டில்லிக்கு வருகிறார். சென்னையிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு டில்லி வருகிறார். பின், திகார் சிறைக்குச் சென்று மகள் கனிமொழியைப் பார்த்து ஆறுதல் கூற உள்ளதாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனிமொழியின் தாய் ராஜாத்தியும், தி.மு.க., எம்.பி.,க்களும் டில்லியில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-நமது டில்லி நிருபர்-

கருத்துகள் இல்லை: