திங்கள், 1 நவம்பர், 2010

புலிகள் எமக்கு செய்த கொடுமைகளுக்கெதிராக பழிவாங்கும் போக்கு கூடாது

.
- ஜெர்மன் ஸ்ருட்கார்ட் நகரில் வரதராஜப்பெருமாள்
30-31 ஆகிய இருதினங்களில் ஜெர்மன் ஸ்ருட்காட் நகரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச கிளைகளின் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்றையதினம் இந்நிகழ்வுகளில் ஐரோப்பிய ஈ.பி ஆர்.எல் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த  வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வரதராஜப்பெருமாள் அவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
வரதராஜப்பெருமாள் அவர்கள் இலங்கை அரசியலும் தமிழர்களின் போராட்ட வழிமுறைகளும் இனி தமிழ்மக்கள் செய்யவேண்டிய விடயங்கள் என்ன என்பது பற்றி தனது உரையில் பல விடயங்களை தொகுத்து உரையாற்றியிருந்தார்.
தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை எப்படி ஆரம்பமானது பற்றியும் இனமுரண்பாடுகளின் தோற்றங்கள் பற்றியும் வரலாற்று சம்பவங்களுடன் எடுத்துரைத்தார். மன்னர்காலத்தில் அரசர்களுக்கான முரண்பாடுகள் இருந்தன தவிர தமிழ் சிங்கள இனமுரண்பாடுகள் இருந்திருக்கவில்லை. ஆனால் தமிழ்சிங்கள இனமுரண்பாடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றதாக கூறப்படுவது தவறு என்றார். வாக்குரிமை எப்போது இலங்கையில் கொண்டு வரப்பட்டதோ அப்பொழுதிருந்தே இனமுரண்பாடுகளுக்கான கூறுகள் ஆரம்பமாகிவிட்டன. பின்னர் கொண்டுவரப்பட்ட தினச்சிங்கள சட்டம், விவாசாய குடீயற்றம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட குடியேற்றங்கள் தமிழர்கள் தரப்பில் இருந்து இனமுரண்பாட்டை தோற்றுவித்தது என்றார். பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தங்கள், 50க்கு 50, சமஷ்டிக்கோரிக்கை போன்ற அரசியல் விடயங்கள் பற்றி தெளிவாக எடுத்துரைத்த அவர் தமிழரசுக்கட்சியின் தவறும் அவர்கள் தமது வாக்குவாக்கியை தமது நலன்களுக்காக உபயோகித்தததையும் சுட்டிக்காட்டியிருந்தார்
தமிழர் தரப்பில் இலங்கை அரசுகளினால் கிடைக்கப்பெற்றதை உரியநேரத்தில் பெற்றுக்கொள்ளாமல் இழுத்தடித்து மறுதலித்தது ஜீ.ஜீ காலத்தில் இருந்து பிரபாகரன் காலம் வரைக்கும் நடைபெற்ற ஒன்றாகும். தனி அரசு கோரிக்கைக்கான ஊற்று தமிழரசு தோற்றம் பெற்ற காலத்திலிருந்து ஏற்பட்ட ஒன்றாகும். 70க்கு பிற்பாடு தமிழரசுகட்சியினர் ஊட்டிவளர்த்த  சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான அரசியல் இளைஞர்களை ஆயுதப்போராட்டத்திற்கு வழிவகுத்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட வன்முறைச்சம்பவங்கள் தமிழத்தேசிய அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. பெடியங்கள் விடமாட்டாங்கள், ஆயுதம் எடுப்பாங்கள், துரோகிகளுக்கு இயற்கை மரணம் கிடையாது என வன்முறையை தூண்டும் வகையிலான பேச்சுக்கள் இளைஞர்களை ஆயுதம் எடுத்துப்போராடத்தூண்டியது. 1974ம் ஆண்டு வரை தமிழீழம் என்கிற சொல் இருக்கவில்லை. 1977ல் அது அறிமுகப்படுத்தப்பட்டது. என்றார்
தமிழ் இளைஞர்கள் அனுபவித்த சிறைவாழ்க்கைகள் அதனால் ஏற்பட்ட போராட்டஎழுச்சிகள் ; 83ல் ஏற்பட்ட இனக்கலவரம் என்பன பற்றி எடுத்துரைத்த வரதராஜப்பெருமாள் அவர்கள் இலங்கை இந்திய ஒப்பந்தம் வடக்கு கிழக்கு மாகாண சபை ஆகியவை தொடர்பான விடயங்கள் பற்றிய கருத்துக்களை தெளிவாக குறிப்பிட்டார். இந்திய அரசு எமக்கு வழங்கிய ஆதரவை தமிழ்மக்களின் அரசியல் நலன்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடியாத நிலையையும் புலிகள் சகலதையும் மறுதலித்து குழப்பியடித்ததையும் சுட்டிக்காட்டினார். புலிகள் ஒவ்வொரு தடவையும் காப்பாற்றப்பட்டு வந்ததை குறிப்பிட்ட அவர் புலிகளின் தோல்விக்ககான காரணங்களை சம்பவங்களுடன் எடுத்துரைத்தார். வடமராட்சி தாக்குதலின்போது இந்திய அரசாலும் இந்திய ராணுவத்துடனான மோதலின்போது பிரேமதாசாவாலும், சந்திரிகா காலத்தில் நோர்வே அரசினாலும் புலிகள் காப்பாற்றப்பட்டு வந்துள்ளனர். ஆனால் கடந்தவருடம் புலிகள் சந்தித்த தோல்வியில் அவர்களை காப்பாற்ற யாரும் வரவில்லை. முள்ளிவாய்க்காலி;ல் அமெரிக்க அரசு கப்பல் அனுப்பி தம்மை காப்பாற்றும் என்கிற முயற்சியை நம்பியிருநத பிரபாகரனின் மரணத்துடன் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததை குறிப்பிட்டார்
இனி என்ன செய்யவேண்டும்?. தமிழர்கள் ஏன் தோற்றார்கள்? பலிகள் ஏன் தோற்றார்கள்?  தாம் சொல்வதைத்தவிர வேறு எதையும் கேட்கக்கூடாத என்கிற புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவப்போக்குகளின் விளைவுகள் தமிழர்களை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது?. இனியாவது தமிழர்களின் சிந்தனைகளில் மாற்றம் வரவேண்டும். பல்வேறு கருத்துக்களை கேட்க வேண்டும்.அவற்றை கேட்கின்ற பொறுமையும் நாகரீகமும் வேண்டும். சமூகம் தோற்பதில்லை  சமூகத்தின் மீள் எழுச்சி Nவையான ஒன்றாகும். தமிழ்மக்கள் ஒருமித்த குரலில் ஒலிக்கின்ற ஒற்றுமை வேண்டும். தற்போது உருவாகியிருக்கும் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஒற்றுமையாக குரல் கொடுப்பதற்கான வெளிப்பாடு ஆகும். நியாயமான கோரிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இலங்கை இந்திய முற்போக்கு சக்திகளுடன் ஒன்று பட வேண்டும். ஆயதம் ஏந்தி போராடுவதற்கான அவசியம் இனி இல்லை. தமிழ்கட்சிகளுக்கிடையே தேர்தலுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை வேண்டும் என்றார்.
புலிகள் எமக்கு செய்த கொடுமைகளுக்கெதிராக பழிவாங்கும் போக்கு கூடாது. மக்கள் பலிகளை ஆதரித்த போக்கு தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ பயத்தினாலோ ஏற்பட்டதொன்றாகும். அந்த மக்களை நாம் வென்றெடுக்க வேண்டும். இதற்கு தமிழ்கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும்.  கட்சி மாநாடுகள் அவசியம். மக்கள் மத்தியில:; இருந்து தலைவர்கள் வரவேண்டும். ஐரோப்பாவில் தேர்தலுக்கு முன் நடைபெறும் மாநாடுகள் உட்கட்சித்தேர்தல்கள் மக்கள் மத்தியில் தெரியப்படுத்தப்படுகின்றன. அதுபோல் எமது நாட்டிலும் இத்தகைய பண்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும்.
13வது திருத்தச்சட்டம் ஒரு ஓட்டைகள்  அடைக்கப்பட்ட வாளிபோன்றது. அது ஒரு தற்காலிக தீர்வு. அதனை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. பார்ப்பதற்கு இந்திய யாப்பு போல இருக்கும். நிரந்தரமான ஒரு மாற்றம் அதில் கொண்டு வரப்படவேண்டும். ஒவ்வொரு சரத்திற்கும் அதிகாரப்பகிர்வு சார்பாக அர்த்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர் 13வது 18வது சட்டங்கள் தொடர்பாக அரசியல் விளக்கங்களை முன்வைத்த அவர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்தார்.
குறுகிய நேரம் என்றாலும் முக்கியமான விடயங்கள் அவரால் பேசப்பட்டன. புலிகளின் வீழ்ச்சிக்குப்பின் மரண அச்சுறுத்தல்கள் இன்றி மிரட்டல்கள் இன்றி சுதந்திரமாக உரையாற்றுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. புலம்பெயர் மக்கள் மத்தியில் இதுபோன்று சுதந்திரமான கருத்துப்பரிமாறல்கள் உருவாக வேண்டும். இதுவரைகாலமும் புலிகளின் கருத்துக்கள் தவிர மாற்றுக்கருத்துகள் பகிரங்கமாக முன்வைக்கப்படுவதற்கான சூழல் மிகக்குறைவாகவே இருந்தது. புலிகள் தவிர்ந்த மாற்றுக்கட்சித்தலைவர்கள் முக்கியஸ்தர்கள் மக்;களைச் சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே இருந்தன. தற்போது அத்தகைய நிலை இல்லை. தற்போது உருவாகியிருக்கும் இத்தகைய சுதந்திரமான சூழல் தமிழர்களுக்கான நியாயமான போராட்டத்திற்கான வாய்ப்பாகும்.

கருத்துகள் இல்லை: