dinakaran.com - Lavanya : பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் 32 லட்சம் ரூபாயை பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது பெற்றோர்களையும், மாணவர்களையும், திடுக்கிட வைத்துள்ளது.
கடந்த மே 5ம் தேதி நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் ஜூன் 14ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் சற்று எதிர்பாராத வகையில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஜூன் 4 தேதி அன்று நீட் தேர்வு முடிவுகள் திடீரென வெளியாகி பலத்த சந்தேகத்தை கிளப்பியது.
அந்த சந்தேகத்திற்கு பளு சேர்க்கும் விதமாக நீட் தேர்வில் நடத்தப்பட்ட முறைகேடுகள் மற்றும் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளியான வண்ணம் உள்ளன.
அதன் ஒரு பகுதியாக பீகார் மாநிலம் பாட்னாவில் சட்ட விரோதமாக கல்வி ஆலோசனை மையத்தை நடத்திவந்த 2 பேர் மற்றும் ஒரு தரகர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பெரும் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. சிக்கந்தர், நிதிஷ் மற்றும் அமித் ஆனந்த் ஆகிய 3 பேரும் நீட் தேர்வு வினாத்தாளை தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு கசியவிட்டது உறுதியாகியுள்ளது. மாணவர்களிடம் ரூ.30 முதல் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு இந்த வினாத்தாளை அவர்களுக்கு கொடுத்ததாக 3 பேரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த 3 பேரிடம் தொடர்பில் இருந்த 13 மாணவர்களை பீகார் சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. அவர்களில் 4 பேர் உடனடியாக கைதான நிலையில் 9 மாணவர்களுக்கு தங்களின் பெற்றோர்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக